*ஓதிப் பார்ப்பதற்கு அனுமதி உண்டா?*

*அனுமதி உண்டு என்றால் ஓதிப்பார்ப்பதற்கு கூலி வாங்கலாமா?*

*முஸ்லிமல்லாதவர்களுக்கு ஓதிப்பார்க்கலாமா?*

நபித்தோழர்களில் சிலர் அரபுப் பிரதேசத்தின் ஒரு கூட்டத்தினரிடம் வந்து தங்கினார்கள். ஆனால் அந்தக் கூட்டத்தினர் அவர்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. இந்த நிலையில் அந்தக் கூட்டத்தின் தலைவனை (தேள்) கொட்டி விட்டது. ‘உங்களிடம் (இதற்கு) மருந்தோ, அல்லது மந்திரிப்பவரோ உள்ளனரா?’ என்று அவர்கள் கேட்டனர். அதற்கு நபித் தோழர்கள், ‘நீங்கள் எங்களுக்கு விருந்தளித்து உபசரிக்கவில்லை. எனவே எங்களுக்கு ஒரு கூலியை நீங்கள் நிர்ணயித்தால் தான் நாங்கள் உங்களுக்கு உதவுவோம்’ என்று கூறினர். அந்தக் கூட்டத்தினர் சில ஆடுகள் தருவதாகக் கூறினார்கள். அதன் பின்னர் (எங்களைச் சேர்ந்த) ஒருவர் அல்ஹம்து’ சூராவை ஓதி, (கடிபட்ட இடத்தில்) உமிழ்ந்தார். இதனால் அவர் குணமடைந்து விட்டார். அவர்கள் ஆடுகளைக் கொடுத்தனர். ‘நாங்கள் இது பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் விசாரிக்காது இதைப் பெற மாட்டோம்’ என்று நபித் தோழர்கள் கூறி விட்டுப் பின்னர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து இது பற்றிக் கேட்டனர். நபிகள் நாயகம் (ஸல்) இதைக் கேட்டுச் சிரித்தார்கள். ‘அல்ஹம்து சூரா ஓதிப் பார்க்கத் தக்கது என்று உனக்கு எப்படித் தெரியும்?’ என்று கேட்டு விட்டு, எனக்கும் அந்த ஆடுகளில் ஒரு பங்கைத் தாருங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

நூற்கள்: புகாரி 2226, முஸ்லிம் 4080

காரிஜா பின் ஸல்த் என்பவரின் சிறிய தந்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைச் சந்தித்து விட்டுத் திரும்பும் போது ஒரு கூட்டத்தினரைக் கடந்தார். அவர்களில் இரும்புச் சங்கிலியால் கட்டப்பட்ட ஒரு பைத்தியக்காரர் இருந்தார். அவரது குடும்பத்தினர் அந்த நபித்தோழரை நோக்கி, ‘உங்கள் தோழராகிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சிறந்த மார்க்கத்தைக் கொண்டு வந்துள்ளதாக அறிகிறோம். இந்தப் பைத்தியம் விலகிட உங்களிடம் ஏதேனும் வைத்தியம் உண்டா?’ என்றனர். அந்த நபித் தோழர் ஒவ்வொரு நாளும் இரண்டு தடவை வீதம் மூன்று நாட்கள் ஃபாத்திஹா அத்தியாயத்தை ஓதிப் பார்த்தார். பைத்தியமும் விலகியது. அவர்கள் அவருக்கு இருநூறு ஆடுகள் தந்தனர். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அவர் கூறிய போது, ‘அதை நீ வைத்துக் கொள்! தவறாக ஓதிப் பார்த்து உண்பதை விட சத்தியத்தை ஓதிப் பார்த்த இது சிறந்ததாகும்’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: காரிஜா பின் ஸல்த் (ரலி)

நூற்கள்: அஹ்மத் 20834, அபூதாவூத் 3398

இந்த ஹதீஸ்களிலிருந்து அல்லாஹ்வின் வேதத்தைக் கொண்டு ஓதிப் பார்ப்பதற்கு அனுமதி உள்ளது என்பதை விளங்கிக் கொள்ளலாம். ‘தவறாக ஓதிப் பார்த்து உண்பதை விட சத்தியத்தை ஓதிப் பார்த்த இது சிறந்தது’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுவதிலிருந்து குர்ஆன் அல்லாதவற்றைக் கொண்டு ஓதிப் பார்க்கக் கூடாது என்பதையும் அறியலாம்.

நம்பிக்கை கொண்டோருக்கு அருளாகவும், நோய் நிவாரணமாகவும் இருப்பதைக் குர்ஆனில் இறக்குகிறோம். (அல்குர்ஆன் 17:82)

குர்ஆனிலுள்ள இந்த நிவாரணத்தைக் கொண்டு ஓதிப் பார்க்க அனுமதி உண்டு என்றாலும், குர்ஆனுடைய போதனையிலும் அதன் புனிதத் தன்மையிலும் நம்பிக்கை இல்லாத ஏமாற்றுப் பேர்வழிகள் நாங்கள் குணப்படுத்துகிறோம்’ என்று கூறி மக்களை ஏமாற்றுவதையும் நாம் காண முடிகின்றது.

மேற்கூறப்பட்ட ஹதீஸ்களில் இது போன்ற மோசடிகளுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை. ஏனெனில் மருத்துவ நோக்கில் ஓதிப் பார்க்கும் போது அதனால் குணம் அடைந்த பின்னரே கூலி பெறப்பட்டுள்ளது. ஒருவர் ஓதிப் பார்த்ததன் மூலம் அல்லாஹ் குணமளிக்கவில்லை என்றால் அதற்காக அவருக்கு எந்தக் கூலியும் கொடுக்க வேண்டியதில்லை என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

குர்ஆனில் உள்ள இந்த மருத்துவத் தன்மையை வைத்து ஏமாற்ற முனைவோருக்கு இஸ்லாம் அறவே இடம் தரவில்லை. ஓதிப் பார்த்த பின் அதனால் குணம் அடைந்தது என்று திட்டவட்டமாகத் தெரிந்தால் தான் பேசப்பட்ட கூலியைப் பெற முடியும்.

இன்னொரு விஷயத்தையும் இங்கு நாம் கவனிக்க வேண்டும்.

குர்ஆன் மூலமே ஓதிப் பார்த்தாலும் குறிப்பிட்ட சிலரிடம் சென்று ஓதிப் பார்த்தால் தான் நிவாரணம் கிடைக்கும் என்று நம்பக் கூடாது. ஏனென்றால் குர்ஆனில் தான் நிவாரணம் உள்ளதே தவிர ஓதிப் பார்க்கும் நபருக்கு நிவாரணம் அளிக்க எந்த ஆற்றலும் இல்லை.

இந்த நபரிடம் சென்று ஓதிப் பார்த்தால் குணமடையும் என்று நம்பினால் அந்த நபருக்கு நோய் நிவாரணம் அளிக்கும் ஆற்றல் இருக்கிறது என்றாகி விடும்; இது இறைவனுக்கு இணை கற்பிப்பதாகும்.

குர்ஆனில் நிவாரணம் இருக்கின்றது என்று அல்லாஹ் கூறுவதால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஓதிப் பார்ப்பதை அனுமதித்துள்ளதால் அதைக் கொண்டு ஓதிப் பார்க்கலாம் என்று கூறுகின்றோம்.

குர்ஆன் ஓதத் தெரிந்த ஒருவருக்கு நோய் ஏற்பட்டால் அவரே அதை ஓதி அதன் மூலம் நிவாரணம் தேடலாம். அப்படியானால் மேற்கண்ட ஹதீஸ்களில் அடுத்தவருக்கு ஓதிப் பார்த்ததாகக் கூறப்படுகின்றதே என்ற ஐயம் ஏற்படலாம். குர்ஆன் ஓதத் தெரியாத, முஸ்லிமல்லாதவர்களுக்குத் தான் நபித்தோழர்கள் ஓதிப் பார்த்தனர் என்று இந்த ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.

எனவே குர்ஆன் ஓதத் தெரியாத மாற்று மதத்தவர்கள், குழந்தைகள், நோயின் காரணமாக ஓத முடியாதவர்கள் போன்றவர்களுக்காக குர்ஆன் ஓதத் தெரிந்த யாரும் ஓதிப் பார்க்கலாம். மற்றவர்கள் தாங்களே குர்ஆனை ஓதி, நிவாரணம் தேட வேண்டும்.

மேலும் இந்த ஹதீஸ்களில் குர்ஆன் மூலம் ஓதிப் பார்த்து, அதற்குக் கூலி வாங்கியதாக இடம் பெறுவதால், குர்ஆன் ஓதி அதைக் கொண்டு சம்பாதிக்க அனுமதியுள்ளது என்று விளங்கிக் கொள்ளக் கூடாது.

ஏனெனில் குர்ஆன் ஓதுவதற்குக் கூலி வாங்கக் கூடாது என்று தடை செய்யும் பல ஹதீஸ்கள் உள்ளன. எனவே மேற்கண்ட ஹதீஸ்களில் பெறப்பட்ட கூலி, அதன் மூலம் மருத்துவம் செய்ததற்காகத் தான் என்றே விளங்க வேண்டும். இல்லையேல் குர்ஆனுக்குக் கூலி வாங்கக் கூடாது என்ற கருத்தில் அமைந்த ஹதீஸ்கள் அனைத்தையும் நிராகரிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *