ஓட்டு முடி வைத்தவர்களை நபியவர்கள் சபித்துள்ளார்களே? எனவே ஓட்டுப்பல் வைக்கலாமா?

உடல் உறுப்புக்களில் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் செயற்கையாக உறுப்புக்களைப் பொருத்துவதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நபித்தோழருக்கு தங்கத்தால் ஆன செயற்கையான மூக்கை வைத்துக் கொள்ள அனுமதி கொடுத்துள்ளார்கள்.

அர்ஃபஜா பின் அஸ்அத் (ரலி) கூறுகிறார்கள் :

அறியாமைக் காலத்தில் குலாப் என்ற நாளில் நடந்த சண்டையின் போது எனது மூக்கில் பாதிப்பு ஏற்பட்டது. எனவே நான் வெள்ளியால் ஒரு (செயற்கை) மூக்கைப் பயன்படுத்தி வந்தேன். அதில் துர்வாடை கிளம்பியதால் தங்கத்தால் ஆன மூக்கைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்டார்கள்.

நூல் : நஸாயீ 5070

இதனடிப்படையில் பல் விழுந்துவிட்டால் செயற்கைப் பல் பொருத்துவது அனுமதிக்கப்பட்டதாகும்.

பொதுவாக தங்கம் ஆண்களுக்கு தடைசெய்யப்பட்டதாக இருந்தாலும் மருத்துவ நன்மைக்காக அதைப் பயன்படுத்துவதற்கு மார்க்கம் அனுமதி கொடுத்துள்ளது. அழுக்கு சேறும் இடங்களில் வெள்ளியைப் பயன்படுத்தினால் அது நாற்றத்தைக் கிளப்பும். எனவே வெள்ளிக்கு பதிலாக தங்க மூக்கு, தங்கப் பல் ஆகியவற்றை பயன்படுத்தில் துர்வாடை ஏற்படாது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெண்கள் ஒட்டுமுடி வைப்பதைத் தடைசெய்துள்ளார்கள். இந்தத் தடைக்கும், ஒட்டுப் பல் வைப்பதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

பல்லுக்கும் தலைமுடிக்கும் வேறுபாடு உள்ளதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். தலைமுடி குறைவாக இருந்தால் அழகு குறைந்து விட்டதாக ஒரு எண்ணம் ஏற்படுவதைத் தவிர இதனால் எந்த பாதிப்பும் ஏற்படாது. ஆனால் பல் உணவுகளை மெல்லுவதற்கும் தெளிவாகப் பேசுவதற்கும் பயன்படுகிறது. பல் இழந்தவர் ஒட்டுப் பல் வைக்காமல் இருந்தால் உணவுகளை மெல்லுதல் அல்லது தெளிவாக உச்சரித்தல் ஆகிய இரண்டு பாதிப்புகளோ அல்லது இரண்டில் ஒன்றோ ஏற்படும். எனவே ஒட்டுப்பல் வைப்பதை முடியுடன் ஒப்பிட்டு முடிவு எடுக்க முடியாது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed