ஒழுக்கம் கெட்டவருக்கு அதேமாதிரி துணைதான் அமையுமா?

இல்லை.

ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்று ஹதீஸ் உள்ளதா?

ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபட்டால் அவருடைய மனைவியும் விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவார் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான எந்த செய்தியும் இல்லை.

ஆனால் குர்ஆன் வசனங்கள் இக்கருத்தைக் கூறுவதாக சிலர் மக்களிடம் பிரச்சாரம் செய்கின்றனர். குர்ஆன் வசனங்களுக்கு தவறான பொருள் கொண்டு இந்தத் தவறை செய்து வருகின்றனர்.

 

விபச்சாரம் செய்தவன், விபச்சாரம் செய்தவளையோ இணை கற்பிப்பவளையோ தவிர மற்றவர்களை மணந்து கொள்ள மாட்டான். விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள். இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது.

அல்குர்ஆன் (24 : 3)

ஒருவன் விபச்சாரம் செய்தால் அவனுடைய மனைவியும் விபச்சாரம் செய்வாள் என்று கூறுவோர் இந்த வசனத்தை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

ஆனால் சற்று சிந்தித்தால் இந்த வசனம் இவர்கள் கூறுகின்ற கருத்தைத் தரவில்லை என்பதை அறியலாம்.

ஒரு விபச்சாரனுக்கு ஒழுக்கமுள்ள பெண் மனைவியாகக் கூடாது. அதே போன்று ஒரு விபச்சாரிக்கு ஒழுக்கமுள்ள ஆண் கணவனாகக் கூடாது. மாறாக ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் ஒழுக்கமுள்ளவரையே தன்னுடைய வாழ்க்கைத் துணையாக தேர்வு செய்ய வேண்டும்.

விபச்சாரனுக்கு அவனைப் போன்று விபச்சாரம் செய்யும் பெண்ணே மனைவியாகத் தகுதியானவள். ஒரு விபச்சாரிக்கு அவளைப் போன்று விபச்சாரம் செய்யும் ஆணே கணவனாகத் தகுதியானவன் என்ற கருத்தையே இவ்வசனம் கூறுகின்றது.

அதாவது திருமணம் செய்ய நினைப்பவர் எப்படிப்பட்ட வாழ்க்கைத் துணையைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டலே இவ்வசனத்தில் கூறப்படுகின்றது.

இவ்வசனத்தின் இறுதியில் இடம் பெற்றுள்ள இது நம்பிக்கை கொண்டோர் மீது தடை செய்யப்பட்டுள்ளது என்ற வாசகம் இக்கருத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றது.

பின்வரும் வசனமும் இதே கருத்தை எடுத்துரைக்கின்றது.

கெட்ட பெண்கள், கெட்ட ஆண்களுக்கும் கெட்ட ஆண்கள், கெட்ட பெண்களுக்கும் (தகுதியானோர்). நல்ல பெண்கள், நல்ல ஆண்களுக்கும் நல்ல ஆண்கள், நல்ல பெண்களுக்கும் (தகுதியானோர்). அவர்கள் (நயவஞ்சகர்கள்) கூறுவதை விட்டும் இவர்கள் (நல்லோர்) நீங்கியவர்கள். இவர்களுக்கு மன்னிப்பும், மரியாதையான உணவும் உண்டு.

அல்குர்ஆன் (24 : 26)

மேலும் இந்த வசனம் இறங்கியதற்கான காரணம் ஹதீஸில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. நபித்தோழர் ஒருவர் விபச்சாரம் செய்து கொண்டிருந்த பெண்ணை மணமுடிக்க நாடிய போது அதைத் தடை செய்து இவ்வசனம் இறங்கியது.

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

மர்ஸத் பின் அபீ மர்ஸத் அல்ஃகனவீ என்பவர் மக்காவிலிருந்து (மதீனாவிற்கு) கைதிகளை அழைத்து வந்தார். மக்காவில் அனாக் என்று கூறப்படும் ஒரு விபச்சாரி இவருக்குத் தோழியாக இருந்தாள். அவர் கூறுகிறார் :

நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே அனாக்கை நான் திருமணம் செய்யப் போகிறேன் என்று கூறினேன். அவர்கள் மௌனமாக இருந்தார்கள். அப்போது விபச்சாரம் செய்தவளை, விபச்சாரம் செய்தவனோ இணை கற்பிப்பவனோ தவிர மற்றவர்கள் மணந்து கொள்ள மாட்டார்கள் எனும் (24:3 வது) வசனம் இறங்கியது. உடனே அவர்கள் என்னை அழைத்து இதை என்னிடம் ஓதிக்காட்டி அவளை மண முடிக்காதே என்று கூறினார்கள்.

நூல் : அபூதாவூத் (1755)

ஆணோ பெண்ணோ வாழ்க்கைத் துணை தேடும் போது விபச்சாரம் செய்யாத நல்லொழுக்கமானவரையே தேர்வு செய்ய வேண்டும் என்பதைத் தான் இது கூறுகிறது.

அதே நேரத்தில் விபச்சாரம் செய்த ஆணோ பெண்ணோ தனது தவறை உணர்ந்து திருந்தி ஒழுக்கமாக வாழ்ந்தால் அப்போது விபச்சாரம் செய்தவர் என்ற பட்டியலில் சேர மாட்டார். பாவத்தில் இருந்து திருந்தியவர் பாவம் செய்யாதவரைப் போல் கருதப்படுவார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

விபச்சாரம் செய்யும் ஒருவனுக்கு விபச்சாரியே மனைவியாகக் கிடைப்பாள் என்ற கருத்து நடைமுறைக்குப் பொருந்தாத பொய்யான கருத்தாகும். ஏனென்றால் கணவன் ஒழுக்கம் கெட்டவனாக இருந்தும் கற்பைப் பேணி ஒழுக்கத்துடன் வாழும் பெண்கள் பலர் இருக்கின்றனர். இதே போன்று மனைவி ஒழுக்கம் கெட்டவளாக இருந்தும் ஒழுக்கத்துடன் வாழும் நல்ல கணவன்மார்களும் இருக்கின்றனர்.

இப்போது கணவன் ஒழுக்கம் கெட்டவன் என்பதால் அவனுடைய மனைவியும் ஒழுக்கம் கெட்டவள் என்றும் மனைவி ஒழுக்கம் கெட்டவள் என்பதால் அவளுடைய கணவனும் ஒழுக்கம் கெட்டவன் என்றும் முடிவு செய்வது விபரீத விளைவுகளை ஏற்படுத்துவதும் நல்லொழுக்கமுள்ளவர்களின் மீது வீண் பழி சுமத்துவதாகும்.

எனவே யாருக்கு யார் மனைவியாக அமைவார் என்பதைப் பற்றி இவ்வசனம் பேசவில்லை. மாறாக ஒருவர் தனக்கு வாழ்க்கைத் துணையாக எத்தகையவரைத் தேர்வு செய்ய வேண்டும் என்ற சட்டத்தைப் பற்றியே பேசுகின்றது

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed