ஒரு நாளைக்கு ஆயிரம் ரக்அத்கள் தொழமுடியுமா?

முடியாது. கூடாது.

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து கேட்டனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது அவர்கள்,

நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு, “முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே?” என்று சொல்லிக் கொண்டனர்.

அவர்களில் ஒருவர், “நான் என்ன செய்யப் போகின்றேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகின்றேன்” என்றார்.

இன்னொருவர், “நான் ஒரு நாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகின்றேன்” என்றார்.

மூன்றாம் நபர், “நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகின்றேன். ஒரு போதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன்” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, “இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள் தானே! அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவனாவேன். ஆயினும் நான் நோன்பு நோற்கவும் செய்கின்றேன். விட்டு விடவும் செய்கின்றேன். தொழவும் செய்கின்றேன். உறங்கவும் செய்கின்றேன். மேலும் நான் பெண்களை மணம் முடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),

நூல் : புகாரி 5063

அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான தொழுகை தாவூது (அலை) அவர்களின் தொழுகையாகும். அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான நோன்பு தாவூது (அலை) அவர்களின் நோன்பாகும். அவர்கள் பாதி இரவு வரை தூங்குவார்கள். பிறகு இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம் தொழுவார்கள். பிறகு ஆறில் ஒரு பகுதி நேரம் உறங்குவார்கள். மேலும் ஒரு நாள் நோன்பு வைத்து ஒரு நாள் நோன்பை விட்டு விடுவார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி),

நூல் : புகாரி 1131

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் ஆண்டு முழுவதும் நஃபிலான நோன்புகள் நோற்பதற்கும், உறங்காமல் தொழுது கொண்டிருப்பதற்கும் தடை உள்ளதை அறியலாம்.

ஆண்டு முழுவதும் நோன்பு நோற்பதாவது சாத்தியம் என்று கூறலாம். ஆனால் ஒரு நாளில் ஆயிரம் ரக்அத்துகள் தொழுவது சாத்தியமில்லாத விஷயம். எவ்வளவு விரைவாகத் தொழுதாலும் ஒரு ரக்அத் தொழுவதற்குக் குறைந்தது இரண்டு நிமிடங்களாவது ஆகும். அப்படியானால் ஆயிரம் ரக்அத்துக்கள் தொழுவதற்கு 2000 நிமிடங்கள் தேவை. ஆனால் ஒரு நாளைக்கு 1440 நிமிடங்கள் தான் இருக்கின்றன.

தொழுகையைத் தவிர வேறு எந்தக் காரியத்திலும் ஈடுபடாமல் தொடர்ந்து தொழுது கொண்டேயிருந்தாலும் 720 ரக்அத்துகளுக்கு மேல் தொழ முடியாது. எனவே பெரியார்கள் ஆயிரம் ரக்அத்கள் தொழுததாகக் கூறுவது முழுக்க முழுக்க கட்டுக் கதை என்பதில் சந்தேகமில்லை.

அப்படியே அவர்கள் தொழுதிருந்தாலும் அவர் மார்க்க அடிப்படையில் அவர்கள் பெரியார்கள் அல்லர் என்பதை மேற்கண்ட ஹதீஸ்கள் உணர்த்துகின்றன. இது போன்றவர்களை நபி (ஸல்) அவர்கள், “என்னைச் சார்ந்தவர் இல்லை’ என்று தெளிவாகப் பிரகடனம் செய்து விட்ட பிறகு, “பெரியார்’ பட்டம் கொடுத்து புகழ்ந்து பேசுவதற்கு உண்மை முஸ்லிம்கள் யாரும் முன்வர மாட்டார்கள்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed