ஒருவர் தனது சொத்துக்களை அன்னியருக்கு கொடுத்து விட்டால் வாரிசுகள் வழக்கு போடலாமா?

ஒருவர் தான் சம்பாரித்த சொத்துக்களை மற்றவர்களுக்குக் கொடுக்கலாமா? பிள்ளைகள் இருந்தும் பிள்ளைகளுக்கு அந்த சொத்தில் கொஞ்சம் கூட கொடுக்கவில்லை. எல்லா சொத்துக்களையும் மற்றவருக்குக் கொடுத்து விட்டார். அந்தச் சொத்தில் பிள்ளைகள் சொத்து உரிமை கேட்டு வழக்கு போடலாமா?

ஒருவர் உயிருடன் இருக்கும் போது தனது சொத்துக்களை மற்றவருக்கு வழங்குவது இரு வகைகளில் உள்ளன.

இந்த சொத்துக்கள் எனது மரணத்துக்குப் பின் இன்னாருக்குச் சேர வேண்டும் என்று எழுதி வைப்பது ஒருவகை. இது வசிய்யத் எனப்படும்.

மரணத்துக்குப் பிறகு எடுத்துக் கொள்ளும் வகையில் வசிய்யத் செய்யாமல் உயிருடன் இருக்கும் போதே மற்றவருக்கு உடமையாக்குவது மற்றொரு வகையாகும்.

முதல் வகையான வசிய்யத் அடிப்படையில் மற்றவருக்கு சொத்தை எழுதி வைப்பதாக இருந்தால் மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பகுதிக்குள் தான் வசிய்யத் செய்ய வேண்டும். அதைவிட அதிகமாக எழுதிவைத்தாலும் மூன்றில் ஒரு பகுதிதான் மற்றவர்க்குச் சேரும். மற்ற இரு பகுதிகளை இஸ்லாமிய வாரிசுரிமைச் சட்டப்படி வாரிசுகள் உரிமையாக்கிக் கொள்வார்கள். முழுச் சொத்தையும் ஒருவர் வசிய்யத் செய்த அடிப்படையில் அவரது மரணத்துக்குப் பின் வஸிய்யத் செய்யப்பட்டவர் கைப்பற்றிக் கொண்டால் அதற்கு எதிராக நீதி மன்றத்தில் வழக்கு போடலாம். வாரிசுரிமை விஷயத்தில் இந்தியாவில் முஸ்லிம்களுக்கு தனிச் சட்டம் உள்ளது. அந்தச் சட்ட்த்தின் படி வழக்கு போட்டால் மூன்றில் ஒரு பங்கை மட்டும் வசிய்யத் செய்யப்பட்டவருக்கு வழங்கி மீதியை வாரிசுகளுக்கு வழங்கியும் நீதிமன்றம் தீர்ப்பளிக்கும்.

வாரிசுதாரர் அல்லாமல் மற்றவர்களுக்கு வழங்குவதாக இருந்தால் அதிகபட்சமாக மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு மட்டுமே வழங்க அனுமதியுள்ளது.

நான் மக்காவில் நோய்வாய்ப்பட்டிருந்த போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நலம் விசாரிக்க வந்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! என்னிடம் செல்வம் உள்ளது. எனது செல்வம் முழுவதையும் (தர்மத்திற்காக) நான் மரணசாசனம் செய்துவிடட்டுமா? என்று கேட்டேன். அவர்கள், வேண்டாம் என்று பதிலளித்தார்கள். நான் பாதியை (மரணசாசனம் செய்துவிடட்டுமா)? என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் வேண்டாம் என்று சொன்னார்கள். நான், (அப்படியென்றால்,) மூன்றிலொரு பங்கை (நான் மரணசாசனம் செய்யட்டுமா)? என்று கேட்டேன். அதற்கவர்கள் மூன்றிலொரு பங்கா! மூன்றிலொரு பங்கு கூட அதிகம் தான்.

நீங்கள் உங்கள் வாரிசுகளை மக்களிடம் கையேந்தும் ஏழைகளாக விட்டுச் செல்வதை விட அவர்களைத் தன்னிறைவு கொண்டவர்களாக விட்டுச் செல்வதே சிறந்ததாகும். நீங்கள் (அவர்களுக்காக) எதைச் செலவு செய்தாலும் அது நீங்கள் செய்த தர்மமே. நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகின்ற ஒரு கவளம் உணவும் கூட (தர்மமாகவே உங்களுக்கு எழுதப்படும்). அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுளை அளிக்கக்கூடும். அப்போது மக்கள் சிலர் உங்களால் பயன் அடைந்திடவும், வேறு சிலர் உங்களால் இழப்புக்குள்ளாகவும் கூடும் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

நூல் : புகாரி 5354

வசிய்யத் அல்லாத முறையில் அதாவது உயிருடன் இருக்கும் போதே மற்றவருக்கு உடமையாக்கும் வகையில் முழுச் சொத்தையும் ஒருவர் எழுதி வைத்தால் அந்தச் சொத்துக்காக வழக்கு போட முடியாது. உயிருடன் இருக்கும் போதே வழங்கப்பட்ட சொத்துக்களில் வாரிசுரிமை சட்டம் வராது. வழக்கு தள்ளுபடியாகும். அல்லது உங்களுக்கு எதிராகவே தீர்ப்பு வரும்.

ஆனால் வாரிசுகளை வீதியில் நிறுத்திய குற்றத்துக்காக அவர் மறுமையில் விசாரிக்கப்படுவார்.

யாருக்கு அவர் எழுதி வைத்தாரோ அவர் இஸ்லாத்தில் பற்றுள்ள முஸ்லிமாக இருந்தால் அவரிடம் ஜமாஅத் வழியாக பேச்சு வார்த்தை நடத்த சட்டப்படி உங்களுக்குத் தான் இந்தச் சொத்தில் உரிமை உள்ளது. ஆனால் உங்களுக்கு எழுதி வைத்தவர் மறுமையில் இறைவனால் விசாரிக்கப்படுவார். எனவே உங்களுக்கு சொத்தை எழுதித்தந்தவர் மறுமையில் குற்றவாளியாக ஆவதைத் தடுப்பதற்காக அவரது வாரிசுகள் மனம் குளிரும் வகையில் சில சொத்துக்களை அவர்களுக்கு வழங்குங்கள் என்று பேசிப் பார்க்கலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed