ஒட்டகப் போர்(معرکة الجمل-Battle of the Camel) பற்றி முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களுக்கும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மருமகன் அலீ (ரலி) அவர்களுக்குமிடையே போர் நடக்கும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு வழிகளில் முன்னறிவிப்புச் செய்தனர்.

உஸ்மான் (ரலி) அவர்கள் இஸ்லாமிய அரசின் தலை நகரமான மதீனா நகரில் கலகக்காரர்களால் கொல்லப்பட்டனர். அவர்கள் கொல்லப்பட்ட பின் இக்கொலைப் பழி அலீ (ரலி) அவர்கள் மீது விழுகிறது. தான் ஆட்சிக்கு வருவதற்காக அலீ தான் உஸ்மானைக் கொல்லத் திட்டம் தீட்டினார் என்று சில விஷமிகள் பிரச்சாரம் செய்தனர்.

மற்றும் சிலர் அலீ (ரலி) அவர்களுக்கு இக்கொலையில் தொடர்பு இல்லாவிட்டாலும் கொலையாளிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதம் செய்கிறார் என்றும் அவர்களைக் காப்பாற்ற முனைகிறார் என்றும் பிரச்சாரம் செய்தனர்.

உஸ்மான் (ரலி) அவர்களின் கொலைக்கு நியாயம் கேட்டு ஆயிஷா (ரலி) அவர்கள் படை திரட்டினார்கள்.

அலீ (ரலி) அவர்களுக்கும், ஆயிஷா (ரலி) அவர்களுக்கும் இடையே பெரிய அளவில் போர் மூண்டது. இப்போரில் ஆயிஷா (ரலி) அவர்கள் வீற்றிருந்த ஒட்டகத்தின் கால்கள் வெட்டப்பட்டன. அவர்கள் கீழே விழுந்ததும் அவர்களின் படையினர் நிலை குலைந்து தோற்றுப் போனார்கள். இதன் காரணமாக இப்போர் ஒட்டகப் போர்’ என்று குறிப்பிடப்படுகிறது.

ஒட்டகப் போருக்காக ஆயிஷா (ரலி) அவர்கள் புறப்பட்ட போது வழயில் ஒரு இடத்தில் தங்கினார்கள். அந்த இடத்தில் நாய்கள் குரைத்தன. இதைக் கண்ட ஆயிஷா (ரலி) அவர்கள் ‘இந்த இடத்தின் பெயரென்ன’ என்று கேட்டார்கள். அவர்களின் சகாக்கள் ஹவ்அப்’ என்று கூறினார்கள். உடனே ஆயிஷா (ரலி) அவர்கள் திரும்பிச் செல்ல முற்பட்டனர்.

தோழர்கள் காரணம் கேட்ட போது ‘(என் மனைவியராகிய) உங்களில் ஒருவருக்கு எதிராக ஹவ்அப்’ என்ற இடத்தில் நாய்கள் குரைக்கும். அப்போது அவரது நிலை மோசமானதாக இருக்கும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை நினைவு கூர்ந்தார்கள்.

நூல் : அஹ்மத் 24758

ஆனாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பின் படி தமது நிலை தவறு என்று புரிந்து கொண்டாலும் அவர்களின் சகாக்கள் செய்த நிர்பந்தத்தால் அவர்கள் போருக்குச் செல்லும் முடிவை மாற்றிக் கொள்ள முடியவில்லை.
தமது மனைவிக்கு மட்டுமின்றி மருமகன் அலீ (ரலி) அவர்களுக்கும் இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன்னறிவிப்புச் செய்தார்கள்.

‘அலீயே உனக்கும் என் மனைவி ஆயிஷாவுக்கும் இடையே பிரச்சினை ஏற்படும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அலீ (ரலி) அவர்கள் ‘உங்கள் மனைவிக்கும், எனக்கும் இடையே சண்டை ஏற்படுமா? அப்படி நடந்தால் என்னைவிட துர்பாக்கியசாலி இருக்க முடியாது’ என்று கூறினார்கள்.

அந்தச் சம்பவம் நிகழும் போது ஆயிஷாவைப் பாதுகாப்பான இடத்துக்கு அனுப்பி வைத்துவிட வேண்டும்’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : அஹ்மத் 25943

இந்த இரண்டு முன்னறிவிப்புகளும் அப்படியே முழுமையாக நிறைவேறின. அலீ (ரலி) அவர்கள் ஆயிஷா (ரலி)அவர்களைக் கன்னியமான முறையில் பாதுகாப்பாக அனுப்பி வைத்தார்கள்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed