ஏன் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் தமிழகத்தில்?
“நான்கு மத்ஹபுகளைப் பின்பற்றாதவர்கள், தொழுகையில் நெஞ்சின் மீது கைகட்டக் கூடியவர்கள், தொழுகையின் இருப்பில் விரலை அசைப்பவர்கள், தொப்பி அணியாதவர்கள் இந்தப் பள்ளிக்கு வரக் கூடாது”
இப்படியொரு அறிவிப்பு தமிழகத்தில் தவ்ஹீது பிரச்சாரம் துவங்கியதும் 90 சதவிகிதம் பள்ளிவாசல்களின் பலகைகளில் எழுதப்பட்டன. இன்று வரை அந்த அறிவிப்புக்கள் அழிக்கப்படவில்லை.
தவ்ஹீது வளர்ச்சி கண்ட ஊர்களைத் தவிர்த்து ஏனைய ஊர்களில், அதிலும் குறிப்பாக, இந்தக் கொள்கை புதிதாக முளைக்கின்ற ஊர்களில் கொள்கைச் சகோதரர்கள் இன்றும் பள்ளிக்குச் சென்று தொழ முடியாமல் தடுக்கப்படுகிறார்கள்.
தமிழகத்தில் பல தவ்ஹீது பள்ளிவாசல்கள் எழுந்தமைக்குப் பல்வேறு அடிப்படைக் காரணங்கள் உண்டு. அவற்றில் முதல் அடிப்படைக் காரணமே பள்ளி வாசலில் தொழுவதற்குத் தடை விதிக்கப்பட்டது தான். இந்தத் தடை ஏன் விதிக்கப்பட்டது?
- நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல்.
- இமாம் சூரத்துல் ஃபாத்திஹா ஓதி முடித்தவுடன் பின்பற்றித் தொழுபவர்கள் ஆமீன் என்று சப்தமிட்டுக் கூறுதல். ஷாபி மத்ஹப் பள்ளிகளில் ஆமீன் சொல்வதற்குத் தடையில்லை. ஹனபி பள்ளிகளில் ஆமீன் சொல்வதற்குத் தடை!
- அத்தஹிய்யாத்தின் போது ஆட்காட்டி விரலை அசைத்தல். ஷாபி, ஹனபி என்ற வேறுபாடின்றி எல்லாப் பள்ளிகளிலும் நபி (ஸல்) அவர்களின் இந்த சுன்னத்தை நிறைவேற்றுவதற்குக் கடுமையான தடை!
- தலையைத் திறந்து தொழுவதற்குத் தடை!
- பல பள்ளிகளில் உள்ள இமாம்கள் இறைவனுக்கு இணை வைப்பவர்கள்; தொழுகை முடிந்தவுடன் பக்கத்திலிருக்கும் கப்ருக்குச் சென்று அதில் அடங்கியிருப்பவரிடம் உதவி தேடக் கூடியவர்கள். அதனால் அவர்களுக்குப் பின்னால் நின்று தொழ முடியாமல், ஜமாஅத்தில் சேராமல் ஜமாஅத் முடிந்ததும் தனி ஜமாஅத் நடத்தினால் அடி உதை! இரண்டாம் ஜமாஅத் நடத்தாமல் தனியாகத் தொழுதாலும் அடி விழாமல் இருக்காது.
இப்படிப் பல்வேறு காரணங்களால் பள்ளிவாசல்களில் தொழுவதற்குத் தடை விதிக்கப் பட்டது. அல்லாஹ்வின் பள்ளியில் தொழுவதற்குத் தடை! மீறித் தொழுதால் அடி, உதை! இந்த அநியாயங்களை எதிர்த்துக் காவல் துறையில் புகார்கள் இன்றளவும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நீதிமன்ற வழக்குகளும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இந்தக் கொடுமைகளை எதிர்த்து ஏகத்துவ வாதிகள் மிகக் கடுமையாகக் குரல் கொடுத்தனர்.
அல்லாஹ்வின் பள்ளிவாசல்களில் அவனது பெயர் கூறப்படுவதைத் தடுத்து, அவற்றைப் பாழாக்க முயல்பவனை விட பெரும் அநீதி இழைத்தவன் யார்? பயந்து கொண்டே தவிர அவற்றில் நுழையும் உரிமை அவர்களுக்கு இல்லை. அவர்களுக்கு இவ்வுலகில் இழிவும், மறுமையில் கடுமையான வேதனையுமுண்டு.
அல்குர்ஆன் 2:114
இந்த வசனம் மொழியப்படாத மேடைகள் கிடையாது என்ற அளவுக்கு பள்ளிவாசல் பிரவேசத் தடையை எதிர்த்துப் பிரச்சாரம் நடைபெற்றது. இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது.
இவை தான் தவ்ஹீதுவாதிகள் தனிப் பள்ளிவாசல் காண்பதற்குக் காரணமாக அமைந்தன.
தவ்ஹீதுவாதிகளுக்கு எதிரான கொடுமைகள், பள்ளியில் தொழுவதற்குத் தடை என்பதுடன் நின்று விடவில்லை.
திருமணப் பதிவேடு கொடுக்க மறுத்தல், ஜனாஸா எடுப்பதற்கு சந்தூக்கு தர மறுத்தல், கப்ருஸ்தானில் இடம் தர மறுத்தல் போன்ற கொடுமைகளும் அரங்கேற்றப்பட்டன. இந்தக் கொடுமைகளின் காரணத்தால் தனிப் பள்ளி காண்பது தவிர்க்க முடியாததானது.
இப்படிப் பல்வேறு தியாகங்களை பின்னணியாகக் கொண்டு தான் தவ்ஹீத் பள்ளிவாசல்கள் தமிழகத்தில் அமைந்தன.