எழுத்து வடிவிலும்…

கல்வியாளர் உள்ளங்களில் குர்ஆனைப் பாதுகாக்க ஏற்பாடு செய்ததுடன் நின்று விடாமல் அந்தச் சமுதாயத்தில் எழுதத் தெரிந்திருந்தவர்களை அழைத்து தமக்கு அவ்வப்போது வருகின்ற இறைச் செய்தியை உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதிவு செய்வார்கள்.

இவ்வாறு பதிவு செய்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தவர்களில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலீ (ரலி), முஆவியா (ரலி), அபான் பின் ஸயீத் (ரலி), காலித் பின் வலீத் (ரலி), உபை பின் கஅப் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), ஸாபித் பின் கைஸ் (ரலி) ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.

இந்த எழுத்தர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லச் சொல்ல பேரீச்சை மரப்பட்டைகளிலும், வெண்மையான கல் பலகைகளிலும், பதனிடப்பட்ட தோல்களிலும், கால்நடைகளின் அகலமான எலும்புகளிலும் எழுதிக் கொள்வார்கள். அன்றைய சமுதாயம், இவற்றைத்தான் எழுதப்படும் பொருட்களாகப் பயன்படுத்தி வந்தது.

இவ்வாறு எழுதப்பட்டவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டில் வைக்கப்பட்டிருந்தது. இது தவிர திருக்குர்ஆனை மனனம் செய்தவர்கள் தாமாகவும் எழுதி வைத்துக் கொண்டார்கள்.

இப்படித்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் அருளப்பட்ட முழுக்குர்ஆனும் நபித்தோழர்களுடைய உள்ளங்களிலும், எழுதப்பட்ட ஏடுகளிலும் பாதுகாக்கப்பட்டது. இவை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் செய்யப்பட்ட ஏற்பாடுகள்.

அபூபக்ர் (ரலி) ஆட்சியில்…

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிப் பொறுப்பை ஏற்றார்கள். அவர்களுடைய ஆட்சிக் காலத்தில் ஹிஜ்ரி 12ஆம் ஆண்டு ‘யமாமா’ என்ற ஒரு போர் நடந்தது.

முஸைலமா என்பவன் தானும் ஒரு இறைத்தூதன் என்று பிரகடனம் செய்து தனக்கென ஒரு கூட்டத்தை உருவாக்கி இருந்தான். அவனுக்கும் முஸ்லிம்களுக்குமிடையே நடந்த இப்போரில் குர்ஆனை மனனம் செய்த சுமார் 70 நபித்தோழர்கள் கொல்லப்பட்டார்கள்.

இந்த நிகழ்ச்சிக்குப் பிறகு உமர் (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்து குர்ஆனை எழுத்து வடிவமாக ஒழுங்குபடுத்துமாறு வலியுறுத்தினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்க ஆரம்பத்தில் தயங்கினார்கள்.

“நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்யாத ஒரு பணியை நாம் ஏன் செய்ய வேண்டும்” என்பதே அவர்களின் தயக்கத்திற்குக் காரணம். உமர் (ரலி) அவர்கள் தம் தரப்பில் உள்ள நியாயங்களை அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்து இது செய்ய வேண்டிய பணிதான் என்று விளக்கிய பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். அப்போது குர்ஆனை மனனம் செய்தவர்களிலும், எழுதியவர்களிலும் தலைசிறந்தவராகவும், இளைஞராகவும் இருந்த ஸைத் பின் ஸாபித் அவர்களை அழைத்து வரச் செய்து இந்தப் பொறுப்பை அவரிடத்திலே அபூபக்ர் (ரலி) ஒப்படைத்தார்கள்.

அவரும் அந்தப் பொறுப்பை ஏற்று குர்ஆனை ஒழுங்குபடுத்துகின்ற பணியை மேற்கொண்டார்.

[நூல்: புகாரி 4988, 4989]

திருக்குர்ஆனின் வசனங்கள் அருளப்பட்டவுடன், “இந்த வசனங்களை இந்த வசனத்திற்கு முன்னால் எழுதுங்கள்; இந்த வசனங்களை இந்த வசனத்திற்குப் பின்னால் எழுதுங்கள்; இந்த வசனங்களை இந்தக் கருத்தைக் கூறும் அத்தியாயத்தில் வையுங்கள்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடுவார்கள். அதன்படி நபித்தோழர்கள் எழுதிக் கொள்வார்கள். மனனம் செய்தும் கொள்வார்கள்.

[பார்க்க: திர்மிதீ 3011]

இன்று நாம் பயன்படுத்தும் குர்ஆனில் ஒவ்வொரு அத்தியாயத்திலும் எந்த வரிசையில் வசனங்கள் அமைக்கப்பட்டுள்ளதோ அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையில் தான் அமைந்துள்ளது.

வசனங்களின் வரிசை அமைப்பும், ஒரு அத்தியாயத்தில் இடம் பெற்ற வசனங்கள் எவை என்பதும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கட்டளைப்படியே முடிவு செய்யப்பட்டது.

அப்படியானால் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு இதில் என்ன வேலை என்ற சந்தேகம் ஏற்படலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வசனங்களை எழுதச் சொல்லும் எல்லா நேரத்திலும் எல்லா எழுத்தர்களும் மதீனாவில் இருக்க மாட்டார்கள். சில வசனங்கள் அருளப்படும்போது வெளியூரில் இருந்தவர்கள் தமது ஏடுகளில் அந்த வசனங்களை எழுதியிருக்க மாட்டார்கள்.

இதனால் ஒவ்வொரு எழுத்தருடைய ஏடுகளிலும் ஏதேனும் சில வசனங்களோ, அத்தியாயங்களோ விடுபட்டிருக்க வாய்ப்பு இருந்தது.

ஒவ்வொரு எழுத்தரும், தம்மிடம் உள்ளதுதான் முழுமையான குர்ஆன் என்று தவறாக எண்ணும்போது குர்ஆனில் முரண்பாடு இருப்பது போல் தோன்றும்.

அனைத்து எழுத்தர்களின் அனைத்து ஏடுகளையும் ஒன்று திரட்டி, மனனம் செய்த அனைவர் முன்னிலையிலும் சரி பார்த்தால் ஒவ்வொருவரும் எந்தெந்த வசனங்களை அல்லது அத்தியாயங்களை எழுதாமல் விட்டுள்ளார் என்று கண்டறிய இயலும்.

இந்தப் பணியைத்தான் ஸைத் பின் ஸாபித் என்ற நபித்தோழர் மூலம் அபூபக்ர் (ரலி) அவர்கள் செய்து முடித்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வீட்டிலிருந்த ஏடுகளையும், குர்ஆன் எழுத்தர்களிடமிருந்த ஏடுகளையும் ஸைத் பின் ஸாபித் (ரலி) திரட்டினார்கள். மனனம் செய்தவர்களை அழைத்து அவர்கள் மனனம் செய்தவற்றையும் எழுத்து வடிவமாக்கினார்கள்.

இவற்றைத் தொகுத்து, மனனம் செய்திருப்பவர்களுடைய மனனத்திற்கு ஏற்ப ஏடுகளைச் சீர்படுத்தினார்கள்.

பாதுகாக்கப்பட்ட இந்த மூலப்பிரதி அபூபக்ர் (ரலி) அவர்களுடைய பாதுகாப்பில் ஆவணமாக இருந்தது. அது மக்களைச் சென்றடையவில்லை. மனனம் செய்தவர்கள் மரணம் அடைந்து விட்டாலும் அப்போது இந்த ஆவணத்தின் அடிப்படையில் குர்ஆனைத் தயாரித்திட முடியும்.

அபூபக்ர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு இந்த ஆவணம் உமர் (ரலி) அவர்களிடம் இருந்தது. உமர் (ரலி) அவர்களுடைய மரணத்திற்குப் பிறகு அவர்களின் மகளும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவியுமான ஹப்ஸா (ரலி) இடத்தில் இருந்தது.

உஸ்மான் (ரலி ஆட்சியில்…

இந்தக் குர்ஆன் ஆவணம் பொதுமக்களுக்குப் பரவலாகச் சென்றடையாத காரணத்தால் அபூபக்ர் (ரலி) அவர்களும், உமர் (ரலி) அவர்களும் எதைப் பற்றி அஞ்சினார்களோ அந்த விபரீத விளைவுகள் உஸ்மான் (ரலி) காலத்தில் ஏற்படும் அறிகுறிகள் தோன்றின.

மனனம் செய்த நபித்தோழர்கள் கணிசமாகக் குறைந்து, இஸ்லாமும் பல பகுதிகளுக்குப் பரவிவிட்ட நிலையில் அரைகுறையாக மனனம் செய்தவர்கள் அதையே குர்ஆன் என்று அந்தந்த பகுதிகளிலே அறிமுகப்படுத்தும் நிலையும், அதுவே முழுமையான குர்ஆன் என்று கருதும் நிலையும் ஏற்பட்டது.

இதை அறிந்த உஸ்மான் (ரலி) அவர்கள் “இந்த ஆவணத்தைப் பொதுவுடைமை ஆக்க வேண்டும்; மக்களிடத்திலே கொண்டு செல்ல வேண்டும்; அவ்வாறு கொண்டு செல்வதன் மூலமாகத்தான் குழப்பம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்” என்று கருதி குர்ஆனை ஒரு நூல் வடிவத்தில் அமைக்கும் பணியை மேற்கொண்டார்கள்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed