எரியும் நரகிலிருந்து இரு பாலரையும் காப்போம்

அல்லாஹ்வின் மகத்தான கருணையால் இன்று நாம் ஏகத்துவத்தில் இருக்கிறோம். ஒரு காலத்தில் தர்ஹா வழிபாட்டுக் காரர்களாகவும், தரீக்காவாதிகளாகவும் இருந்தோம். சுருக்கமாகச் சொல்லப் போனால் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என்ற பெயரில் ஷியாக்களாக இருந்தோம்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத் தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும்கற்களுமாகும். அதன் மேல் கடுமையும்கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.

அல்குர்ஆன் 66:6

இந்த வசனம் நம்மை இணை வைப்பவர்களிடமிருந்து பிரித்துக் கொண்டு வந்தது. அதன் பலனாய் முதலில் நம்மையும் அடுத்த கட்டமாய் நம்முடைய குடும்பத்தையும் காத்துக் கொண்டிருக்கிறோம். குடும்பத்தைக் காப்பது எனும் போது நம்முடைய குழந்தைகளைக் காப்பது அதில் முக்கிய அம்சத்தை அடைகிறது.

நம்முடைய குழந்தைகளை நரகத்திலிருந்து காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கின்ற நாம், ஆண் குழந்தைகளைக் காப்பது போல் பெண் குழந்தைகளைக் காப்பதில்லை. நமது பெண் குழந்தைகள் நரகத்திற்குச் செல்ல நாமே காரணமாகி விடுகின்றோம். அது எப்படி? என்று கேட்கலாம்.

இந்த உலகத்தில் கூட ஆண் குழந்தைகளுக்கும், பெண் குழந்தைகளுக்கும் மத்தியில் வேறுபாடு காட்டுவதை விமர்சிக்கும் நாம், மறுமையில் எப்படி வேறுபாடு காட்டுவோம்? என்று வீராவேசமாகக் கேட்கலாம்.

இதற்கு விடை காண்பதற்கு முன்னால் இணை வைப்பவர்களைப் பற்றி நம்முடைய நிலைபாடு என்ன என்பதை முதலில் பார்ப்போம்.

குர்ஆனில் உமது இறைவனை மட்டும் நீர் கூறும் போது வெறுத்துப் புறங்காட்டி ஓடுகின்றனர்.

அல்குர்ஆன் 17:46

இந்த வசனத்தில் மக்கத்து முஷ்ரிக்குகளைப் பற்றி அல்லாஹ் கூறும் நிலை இன்று இணை கற்பிப்பவர்களிடம் அப்படியே இருப்பதை நாம் பார்க்கிறோம்.

நாம் ஏகத்துவக் கூட்டத்தைக் கூட்டுகின்ற போது அதில் ஏகத்துவவாதிகள் மட்டும் கலந்து கொள்கிறோம்; நம்முடைய சொற்பொழிவைக் கேட்டு விடக் கூடாது என்பதற்காக, இணை வைப்பாளர்கள் தங்கள் வீடுகளின் கதவை அடைத்துக் கொண்டு, வீட்டில் டி.வி. பார்த்துக் கொண்டிருப்பார்கள்.

இதற்கு அடிப்படைக் காரணம், நாம் அல்லாஹ்வை மட்டும் வணங்குங்கள் என்று சொல்வது தான். அவ்லியாக்களின் சிறப்புகள் என்ற தலைப்பில் நாம் பேசினால் அதில் அவர்கள் கலந்து கொள்வார்கள். இது எதைக் காட்டுகின்றது? இம்மக்கள் மக்கத்து முஷ்ரிக்குகளின் நிலையில் இருக்கிறார்கள் என்பதையே காட்டுகிறது.

அல்லாஹ் மட்டும் கூறப்படும் போதுமறுமையை நம்பாதோரின் உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. அவனல்லாதோர் கூறப்பட்டால் உடனே அவர்கள் மகிழ்ச்சி அடைகின்றனர்.

அல்குர்ஆன் 39:45

அல்லாஹ் என்று கூறப்படும் போது அலறாதவர்கள், அசையாதவர்கள், முஹய்யித்தீன் என்று கூறியதும் குதூகலிக்கின்றார்கள்; பூரித்துப் புளங்காகிதம் அடைகின்றனர். ஏன்? இவர்கள் மக்கத்து முஷ்ரிக்குகளின் தன்மையை அப்படியே கொண்டிருப்பதால் தான்.

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி தரையில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.

அல்குர்ஆன் 29:65

கடலில் ஏற்படும் கடுமையான ஆபத்தின் போது மக்கத்து முஷ்ரிக்குகள் அல்லாஹ்வை மட்டும் அழைத்தார்கள். ஆனால் இவர்களோ பிரசவ வேதனை போன்ற சோதனையான கட்டத்திலும், “யா முஹ்யித்தீன்’ என்றல்லவா அழைக்கிறார்கள். அப்படியானால் இவர்கள் அவர்களை விட மிகக் கடுமையான முஷ்ரிக்குகள்.

தனக்கு இணை கற்பிக்கப் படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தைதான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

அல்குர்ஆன் 4:48

இவர்களின் பாவங்களை அல்லாஹ் மன்னிக்கப் போவதில்லை என்று திருக்குர்ஆன் தெளிவாகக் கூறி விட்டது. இவர்களுக்குச் சுவனம் தடை செய்யப்பட்டு, நரகம் நிரந்தரம் என்று உறுதியாகி விட்டது.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான்.

அல்குர்ஆன் 5:72

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்குதாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

அல்குர்ஆன் 9:17

இணை கற்பிப்பவர்களுக்கு நிரந்தர நரகம் என்று அல்லாஹ் கூறி விட்டான்.

இணை வைத்தல் என்பது மிகப் பெரும் பாவம். அது நம்முடைய சுவன வாழ்க்கைக்கு உலை வைத்து விடும் என்பதால் நாம் அந்தச் சித்தாந்தத்திற்கு நிரந்தரமாக முழுக்குப் போட்டோம்.

ஒருவர் முஸ்லிம் என்று கூறிக் கொண்டு இணை வைத்தால் அவரை அல்லாஹ் விட்டு விடுவான்; முஸ்லிமல்லாதவர் இணை வைத்தால் தான் அவரை அல்லாஹ் தண்டிப்பான் என்றெல்லாம் ஷிர்க்கில் எந்த வேறுபாடும் நாம் காட்டவில்லை. இது தான் நம்முடைய நிலைபாடு! அதனால் தான் நாம் தனிப் பள்ளிவாசல் கண்டோம்; தனி ஜமாஅத் கண்டோம்.

அதே போன்று அவர்களும் நம்மைப் பிரித்துத் தான் பார்க்கிறார்கள். அதன் காரணமாகத் தான் நம்மைப் பள்ளியில் தொழ விடாமல் தடுக்கிறார்கள்; ஊர் நீக்கம் செய்கிறார்கள்.

அல்லாஹ்வின் அருளால் இன்று தனியொரு சமுதாயமாக தவ்ஹீத் ஜமாஅத் உருவெடுத்திருக்கின்றது. இப்படிப்பட்ட நாம் தான் இன்று நம்முடைய பெண் மக்களை இந்த முஷ்ரிக்குகளிடம் திருமணம் செய்து கொடுக்கின்றோம்.

நம்மிடத்தில் ஏகத்துவக் கொள்கையின் அடிப்படையில் வளர்ந்த நம்முடைய மகளையே ஒரு தர்ஹாவாதிக்கு, தரீக்காவாதிக்குக் கட்டிக் கொடுக்கின்றோம். தர்ஹாவாதிக்கு வாழ்க்கைப்பட்ட நமது மகள் தன் கணவனுடன் ஐக்கியமாகி விடுகின்றாள். விளைவு! நிரந்தர நரகவாதியாகி விடுகின்றாள். அல்லாஹ் காப்பானாக!

ஏன் இப்படி ஒரு தர்ஹாவாதிக்கு வாழ்க்கைப்பட்டாய்? என்று அவளிடம் கேட்டால், “நானும் இத்தனை ஆண்டுகள் காத்திருந்து விட்டேன்; எனக்கு ஒரு தவ்ஹீதுக் கணவன் கிடைக்கவில்லை. தவ்ஹீதுவாதிகள் என்று சொல்லிக் கொண்டு தங்கள் குடும்பத்திலுள்ள இணை வைக்கும் பெண்களையே அவர்கள் திருமணம் செய்தனர். அதனால் தான் இந்த நிலைக்கு ஆளானோம்’ என்று   தங்கள் தரப்பு நியாயத்தை எடுத்துரைக்கின்றார்கள்.

நம்முடைய பெண் மக்களை நரகப் படுகுழியில் தள்ளுவதற்கு நாமே காரணமாவது இப்படித் தான்.

ஆண் மக்களை நரகத்திலிருந்து காக்கும் நாம், பெண் மக்கள் நரகத்தில் வீழ்வதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை.

அன்று நாம் தனி மரமாக இருந்தோம். ஆனால் இன்று நாம் ஏகத்துவ சமுதாயம்! இந்தச் சமுதாயத்தில் உள்ள நாம் ஏகத்துவத்தில் உள்ள பெண்களை திருமணம் முடிக்காமல் இவர்களை அசத்தியவாதிகளிடம் வாழ்க்கைப்பட வைக்கிறோம் என்றால், இந்தப் பெண்கள் நரகம் செல்ல நாமே காரணமாக இருக்கிறோம் என்று தான் அர்த்தம்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்கு தெளிவுபடுத்துகிறான்.

அல்குர்ஆன் 2:221

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *