என் கணவரோடு எனக்கு விவாகரத்து ஆகிவிட்டது. இப்போது எங்கள் இருவருக்கும் பிறந்த குழந்தை யாருக்குச் சொந்தம்?

 

கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டுப் பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது.

குழந்தை பாலருந்தும் பருவத்தில் இருந்தால்

 குழந்தை பாலருந்தும் பருவத்தில் இருந்தால் தாய் தான் அக்குழந்தைக்கு மிகவும் உரிமை படைத்தவளாவாள். ஏனெனில் குழந்தைக்குத் தாய்ப்பால் மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும் பாலருந்தும் பருவத்தில் தாயினுடைய கவனிப்பில் இருப்பது தான் குழந்தையினுடைய உடல் நலத்திற்கு மிகவும் பாதுகாப்பானதாகும். இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ஒரு பெண்மணி, “அல்லாஹ்வின் தூதரே என்னுடைய இந்த மகனுக்கு என்னுடைய வயிறு தான் (உணவுப்) பாத்திரமாகும். என்னுடைய மார்பகங்கள் தான் அவனுக்கு குடிபானமாகும். என்னுடைய மடி தான் அவனுக்கு தங்குமிடமாகும். இவனுடைய தந்தை என்னை விவாகரத்து செய்து விட்டு என்னிடமிருந்து இவனைப் பிரித்துக் கொண்டு செல்ல நாடுகிறார்” என்று கூறினார். நபியவர்கள் “நீ (மறு) திருமணம் செய்யாமலிருக்கும் வரை நீ தான் (குழந்தையாகிய) அவனுக்கு மிகவும் உரிமை படைத்தவள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அமர் (ரலி); நூல்: ஹாகிம் பாகம்: 2, பக்கம்: 225

குழந்தை தாயிடமே இருக்கும் என்ற சட்டம் விவாகரத்துச் செய்யபட்டவள் மறுமணம் செய்யாமலிருக்கும் வரை தான். அவள் மறுமணம் செய்து விட்டால் குழந்தைகளின் பொறுப்பு தந்தைக்கு வந்துவிடும். இதனை “நீ (மறு) திருமணம் செய்யாமலிருக்கும் வரை நீ தான் (குழந்தையாகிய) அவனுக்கு மிகவும் உரிமை படைத்தவள்” என்று நபியவர்கள் கூறியிருப்பதிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

தாய் மறுமணம் முடித்து விட்டால் குழந்தைகளின் பொறுப்பு தந்தையிடம் வந்துவிடுகிறது. என்றாலும் தாய்க்கும் அக்குழந்தைகளின் விஷயத்தில் உரிமையிருப்பதால் தாய் குழந்தைகளைச் சந்திக்க விடாமல் தடுப்பதோ, தாயைப் பற்றி குழந்தைகளிடத்தில் வெறுப்பு உண்டாக்குவதோ கூடாது. தான் பெற்றெடுத்த குழந்தைகளைச் சந்திக்க தாய்க்கு முழு உரிமையிருக்கிறது.

 

பாலருந்தும் பருவத்தை குழந்தை கடந்து விட்டால்

பாலருந்தும் பருவத்தை குழந்தை கடந்து விட்டால் தாயிடம் இருக்க வேண்டுமா?

அல்லது தந்தையிடம் இருக்க வேண்டுமா?

என்று தீர்மானிக்கின்ற விருப்பத்தை இஸ்லாம் குழந்தைக்கு வழங்குகிறது. இதனைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.

ராபிஃவு பின் ஸினான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவினார்கள். அவருடைய மனைவி இஸ்லாத்தைத் தழுவ மறுத்தாள். (அவர்களுக்கு) பால்குடி மறந்த அல்லது அதற்கு ஒத்த நிலையில் (ஒரு பெண் குழந்தை) இருந்தது. அப்பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து “என்னுடைய மகள்” என்றாள். ராபிஃவு (ரலி) அவர்கள் “என்னுடைய மகள்” என்றார். நபி (ஸல்) அவரை ஒரு மூலையில் உட்காருமாறு கூறினார்கள். அப்பெண்ணையும் ஒரு மூலையில் உட்காருமாறு கூறினார்கள். அக்குழந்தையை இருவருக்கும் மத்தியில் வைத்து பிறகு “நீங்கள் இருவரும் அதை அழையுங்கள்” என்று கூறினார்கள். அக்குழந்தை தாயின் பக்கம் சென்றது. நபியவர்கள் “அல்லாஹ்வே! இக்குழந்தைக்கு நேர்வழிகாட்டு” என்று கூறினார்கள். அக்குழந்தை தந்தையின் பக்கம் சென்றது. அவர் அக்குழந்தையை எடுத்துக் கொண்டார்.

அறிவிப்பவர்: ஜஃஃபர் பின் அப்தில்லாஹ் (ரஹ்); நூல்: அபூதாவூத் 1916

இந்த ஹதீஸிலிருந்து குழந்தை பால் குடிப்பருவத்தைக் கடந்து விட்டதென்றால் அதனுடைய விருப்பப்படி தாயையோ அல்லது தந்தையையோ தேர்ந்தெடுக்கும்படி செய்ய வேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

நபியவர்கள் ஒரு சிறுவனுக்கு தாய் மற்றும் தந்தை இருவருக்கு மத்தியில் (யாருடன் வசிக்க அவன் விரும்புகிறானோ அவரை) தேர்ந்தெடுக்கும் உரிமையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி); நூல்: திர்மிதி 1277

இந்த ஹதீஸில் வந்துள்ள “சிறுவன்” என்ற வார்த்தைக்கு அரபி மூலத்தில் “குலாம்” என்ற சொல் வந்துள்ளது. இது குழந்தைப் பருவம் முதல், பருவ வயதை அடைகின்ற வரை உள்ள நிலையில் உள்ளவர்களுக்கும் பயன்படுத்தப்படும் சொல்லாகும். இதிலிருந்து பால்குடிப் பருவம் கழிந்ததிலிருந்து பருவ வயதை அடையும் நிலையிலுள்ள குழந்தைகளின் விருப்பத்தைப் பொறுத்தே அது தாயிடம் இருக்க வேண்டுமா? அல்லது தந்தையிடம் இருக்க வேண்டுமா? என்று முடிவு செய்யப்படும். குழந்தை யாரை விரும்புகிறதோ அவர்களிடம் தான் அது ஒப்படைக்கப்படும்.

குழந்தைக்கு விபரம் தெரிந்த பிறகு அதனுடைய விருப்பத்தைக் கவனத்தில் கொண்டு செயல்படுவதே குழந்தைக்கு நன்மை பயக்கும். குழந்தை விரும்பாத நபர்களிடம் அது ஒப்படைக்கப்பட்டால் இங்கு குழந்தையின் உரிமை பறிக்கப்படுவதோடு அதற்கு இதனால் பாதிப்புகள் ஏற்படலாம். எனவே தான் விபரமறிந்த குழந்தைகளுக்கு இந்த உரிமையை இஸ்லாம் வழங்கியுள்ளது.

மேலும் குழந்தைகள் தாயிடம் இருந்தாலும் தந்தையிடம் இருந்தாலும் அதற்குச் செலவு செய்கின்ற பொறுப்பு தந்தையைச் சார்ந்ததாகும். பின் வரும் திருமறை வசனத்திலிருந்து இதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு.

அல்குர்ஆன் 2:233

குழந்தை தாயிடம் இருக்கும் காலத்தில் தந்தை குழந்தையைச் சந்திப்பதற்கோ அதனுடன் பழகுவதற்கோ யாரும் தடைவிதிக்க முடியாது. தன் குழந்தையை எப்போது வேண்டுமானாலும் வந்து பார்த்துக் கொள்ள தந்தைக்கு முழு உரிமை உள்ளது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *