இவ்வசனத்தில் (10:87) வீடுகளைக் கிப்லாவாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று கூறப்படுகிறது.
கிப்லா என்ற சொல்லுக்கு தொழும்போது முன்னோக்கும் இலக்கு என்ற பொருளும், நேருக்குநேர் என்ற பொருளும் உள்ளன.
தொழும்போது முன்னோக்கும் இலக்கு என்ற பொருளையே அதிகமான அறிஞர்கள் கொடுத்துள்ளனர். இவர்களின் கருத்துப்படி ஒவ்வொருவரும் தமது வீட்டையே கிப்லாவாக ஆக்கிக் கொண்டு வீட்டை நோக்கித் தொழ வேண்டும் என்று ஆகும். இதனால் ஏராளமான கிப்லாக்கள் ஏற்படும்.
இவ்வசனம் யூதர்களுக்கு இடப்பட்ட கட்டளையை எடுத்துக் காட்டுகிறது. யூதர்கள் ஒவ்வொருவரும் தமது வீடுகளைக் கிப்லாவாக ஆக்கலாம் என்பது இதன் பொருள் என்றால் யூதர்களுக்கு பைத்துல் முகத்தஸ் ஆலயம் கிப்லாவாக இருந்தது என்பதற்கு மாற்றமாக ஆகிவிடும்.
வீடுகளைக் கிப்லாவாக, தொழும் திசையாக ஆக்கிக் கொள்வது பொருளற்றதாகவும் உள்ளது. கிப்லா என்றால் ஒரு சமுதாயம் முன்னோக்கும் ஒரே இலக்கைக் குறிக்கும். ஒவ்வொருவரின் வீடும் கிப்லா என்றால் எதுவுமே கிப்லா இல்லை என்று ஆகிவிடும்.
வீடுகள் கிப்லா என்ற கருத்துப்படி ஒவ்வொருவரும் தமது வீட்டை விட்டு வெளியே வந்து தமது வீட்டை முன்னோக்க வேண்டும்.
ஒரு சமுதாயத்தை ஒரு இலக்கில் நிறுத்தி ஒற்றுமைப்படுத்தும் கிப்லா எந்த இலக்குமில்லாமல் ஒழுங்கு இல்லாமல் சிதறடிக்கும் நிலை இதனால் ஏற்படும்.
வீட்டின் வாசல்பகுதி கிப்லா திசையில் அமையுமாறு வீடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தும் கொடுக்கலாம். ஆனால் இது நடைமுறை சாத்தியமற்றதாகும்.
ஒரு தெருவில் வலது பக்கம் உள்ள வீடுகள் கிப்லா திசையில் இருந்தால் இடது பக்கம் உள்ள வீடுகள் கிப்லாவின் எதிர்த்திசையில் தான் அமையும். அனைத்து வீடுகளும் கிப்லா திசையில் அமையாது.
மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சமுதாயம் தவிர மற்ற சமுதாயத்தினருக்கு பூமி முழுவதும் தொழுமிடமாக ஆக்கப்படவில்லை. வழிபாட்டுத் தலத்தில் மட்டும் தான் அவர்கள் வணங்க வேண்டும் எனக் கட்டளையிடப்பட்டனர் என்று ஏற்கத்தக்க ஹதீஸ்கள் உள்ளன. (பார்க்க: புகாரி 335, 438)
எனவே வீடுகளைக் கிப்லாவாக ஆக்கிக் கொள்ளுங்கள் என்று இவ்வசனத்துக்கு பொருள் கொள்ள முடியாது.
வீடுகளை அமைக்கும்போது அங்கொன்றும் இங்கொன்றுமாக இல்லாமல் நடுவில் தெரு அமைத்து வீடுகளை எதிர்எதிராக நோக்கும் வகையில் அமைத்துக் கொள்ளுமாறு இறைவன் கட்டளையிட்டான் என்பதே சரியான கருத்தாக இருக்க முடியும்.
எனவே தான் உங்கள் வீடுகளை எதிரெதிராக அமைத்துக் கொள்ளுங்கள் என்று நாம் மொழிபெயர்த்துள்ளோம்.
நாகரீகங்களில் எகிப்திய நாகரீகம் மிகவும் பழமையானது என்பதை வரலாறு கூறுகிறது. அதுவும் இறைவனது வழிகாட்டுதலின்படி இறைத் தூதர்களால் கற்றுக் கொடுக்கப்பட்டதே என்பதை இவ்வசனத்திலிருந்து அறியலாம்.