உளூவின் பயன்களும் அதன் முக்கியத்துவமும்

தொழுகைக்கு உளூ அவசியமானது என்பதை நாம் அறிவோம். அந்த உளூவின் சிறப்புகளைப் பற்றியும், நன்மைகளைப் பற்றியும், உளூவின் மூலம் மறுமையில் கிடைக்கும் பரிசுகளைப் பற்றியும், இந்த உரையில் காண்போம்..

உளூவின் சிறப்புகள் ஒளிரும் உறுப்புகள் உதிரும் பாவங்கள்

நபித் தோழர்களைப் போன்று நன்மைகளைக் கொள்ளை கொள்வதில் நம்மிடம் போட்டி மனப்பான்மை வரவும் வளரவும் வேண்டுமெனில் நாம் ஒவ்வொரு அமலுக்குரிய சிறப்பையும் தெரிந்து கொண்டு அதன்படி செயல்பட வேண்டும். அந்த அடிப்படையில் அமல்களின் சிறப்புக்களின் வரிசையில் முதலாவதாக உளூவின் சிறப்பைப் பார்ப்போம்.

இறை நம்பிக்கையாளர்களே! நீங்கள் தொழுகைக்குத் தயாராகும் போது உங்கள் முகங்களையும் முழங்கைகள் வரை உங்கள் இரு கைகளையும் கழுவிக் கொள்ளுங்கள். உங்கள் தலைகளை (ஈரக் கையால்) தடவி (மஸஹ் செய்து) கொள்ளுங்கள். உங்கள் கால்களை இரு கணுக்கால் வரை (கழுவிக் கொள்ளுங்கள்)

(அல்குர்ஆன்:5:6.)

 

இந்த வசனத்தில் தொழுகைக்காக உளூச் செய்வதை அல்லாஹ் கடமையாக்கியுள்ளான்.எனவே தொழுகை எனும் வணக்கத்தை உளூவின்றி செய்யக் கூடாது. உளூவின்றி செய்தால் தொழுகை நிறைவேறாது. அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் இட்ட கட்டளையை நபி (ஸல்) அவர்கள் செயல்படுத்திக் காட்டும் போது ஒவ்வொரு உறுப்பையும் மூன்று தடவை கழுவிக் காட்டியிருக்கிறார்கள்.

இப்னு அப்பாஸ்(ரலி) உளூச் செய்தார்கள்.

அப்போது ஒரு கைத் தண்ணீரை அள்ளி அதைக் கொண்டு தம் முகத்தைக் கழுவினார்கள். அதாவது ஒரு கைத் தண்ணீர் எடுத்து அதன் மூலமே தம் வலக்கையைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கையால் தண்ணீர் அள்ளித் தம் இடக்கையைத் கழுவினார்கள். பின்னர் ஈரக் கையால் தம் தலையைத் தடவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளி அதனை தம் வலக்காலில் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அதனைக் கழுவினார்கள். பின்னர் இன்னொரு கைத் தண்ணீர் அள்ளித் தம் இடக்காலில் ஊற்றிக் கழுவினார்கள். ‘இப்படித்தான் நபி(ஸல்) அவர்கள் உளூச் செய்ய பார்த்தேன்’ என்றும் இப்னு அப்பாஸ்(ரலி) கூறினார்’ என அதாவு இப்னு யஸார்(ரலி) அறிவித்தார்.

நூல்: புகாரி 140

உளூவின் போது உதிரும் பாவங்கள்

மேலே இடம்பெற்ற ஹதீஸில் கடமையாக்கப்பட்ட உளூவை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை மேற்கண்ட உஸ்மான் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் விளக்குகின்றது. உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற முஸ்லிமில் இடம் பெறுகின்ற மற்றொரு ஹதீஸ், ஒவ்வொரு உறுப்பைக் கழுகின்ற போதும் அந்தந்த உறுப்புகளின் பாவங்கள் உதிர்ந்து விடுகின்றன என்று தெரிவிக்கின்றது.

ஒரு முஸ்லிமான அல்லது இறைநம்பிக்கை கொண்ட அடியார் உளூ செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன் அல்லது நீரின் கடைசித் துளியுடன் முகத்திலிருந்து வெளியேறுகின்றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) தண்ணீருடன் அல்லது தண்ணீரின் கடைசித் துளியுடன் வெளியேறுகின்றன. 

அவர் கால்களைக் கழுவும்போது, கால்களால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீரோடு அல்லது நீரின் கடைசித்துளியோடு வெளியேறுகின்றன. இறுதியில், அவர் பாவங்களிலிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திலிருந்து) செல்கிறார். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 412

சிறு பாவங்களுக்கு உளூ ஒரு பரிகாரம்

உஸ்மான் (ரலி), உளூச் செய்யும்போது ‘‘நான் ஒரு ஹதீஸை உங்களுக்குச் சொல்லட்டுமா? ஒரு வசனம் மட்டும் இல்லையானால் அதை நான் உங்களுக்குச் சொல்லியிருக்க மாட்டேன்’’ என்று கூறிவிட்டு, ‘‘ஒரு மனிதன் அழகிய முறையில் உளூ செய்து, தொழவும் செய்வானாயின் அவன் தொழுது முடிக்கும் வரை அவனுக்கும் தொழுகைக்கும் இடையிலுள்ள பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதை கேட்டிருக்கிறேன்’’ என்றார்கள். இதை ஹும்ரான் அறிவித்தார்.

அது எந்த வசனம் என்று குறிப்பிடும்போது ‘நாம் அருளிய தெளிவான அத்தாட்சிகளையும், நேர் வழியையும் அதனை நாம் வேதத்தில் மனிதர்களுக்கும் விளக்கிய பின்னரும் மறைப்பவர்களை அல்லாஹ் சபிக்கிறான்; மேலும் அவர்களைச் சபிப்பவர்களும் சபிக்கிறார்கள்’ (திருக்குர்ஆன் 02:159) என்ற வசனமாகும்’ என உர்வா கூறினார்.

அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)யின் அடிமை ஹும்ரான்
நூல்: புகாரி 160

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்கள் கூறினார்கள்: ‘‘அல்லாஹ்வின் கட்டளைக்கேற்ப யார் முழுமையாக உளூ செய்கின்றாரோ அவர் தொழும் கடமையாக்கப்பட்ட தொழுகைகள் (ஒவ்வொன்றும்) அவற்றுக்கு இடையே ஏற்படும் (சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹும்ரான் பின் அபான்

நூல்: முஸ்லிம் 391

இந்த ஹதீஸ்கள் உளூவின் மூலம் பாவங்கள் உதிர்கின்றன என்றும் சிறு சிறுபாவங்களுக்கு அது பரிகாரமாகின்றது என்றும் தெரிவிக்கின்றன.

நனையாத உறுப்பும் நரகத்தின் நெருப்பும்

நாம் செய்கின்ற உளூவை நிறைவாகச் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்கு அறிவுறுத்துகின்றார்கள். அந்த ஹதீஸ்களை இப்போது பார்ப்போம்:

‘நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது நபி(ஸல்) அவர்கள் எங்களை விட்டும் பின்தங்கிவிட்டார்கள். நாங்கள் அஸர் நேரத்தை அடைந்தபோது எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். அப்போது நாங்கள் உளூ செய்து கொண்டிருந்தோம். (கால்களைக் கழுவாமல்) கால்களில் ஈரக்கையால் தடவிக் கொண்டிருந்தோம். அப்போது, ‘இத்தகைய குதிங்கால்களை நரகம் தீண்டட்டும்’ என்று இரண்டு அல்லது மூன்று முறை உரத்த குரலில் நபி(ஸல்) கூறினார்கள்’ என அப்துல்லாஹ் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.

நூல்கள்: புகாரி 163, 165, முஸ்லிம் 405

தகுதியை உயர்த்தும் தரமிக்க உளூ

ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘(உங்கள்) தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா?’’ என்று கேட்டார்கள். மக்கள், ‘‘ஆம்; (சொல்லுங்கள்) அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘‘சிரமமான சூழ்நிலைகளிலும் அங்கத் தூய்மையை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்துவைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்த தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவைதாம் கட்டுப்பாடுகளாகும்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 421

உளுவின் காரணமாக ஒளிரும் முகங்கள்

ஆதம் நபி முதல் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை அனைவரது சமுதாயங்களும் நிறைந்து நிற்கின்ற மறுமை நாளில், நபி (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தை அடையாளங்காண அரியதொரு அடையாளமாக அமைவது நாம் செய்கின்ற உளூ தான்.

இதைப் பின்வரும் ஹதீஸ் விளக்குகின்றது, 

தொழுகைக்காக உளூ செய்து கொண்டிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பின்னால் நான் இருந்து கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் தமது கையை அக்குள் வரை நீட்டிக் கழுவினார்கள். நான், ‘‘அபூஹுரைரா அவர்களே! இது என்ன உளூ?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘‘ஃபர்ரூகின் மக்களே! (பாமரர்களான) நீங்கள் இங்குதான் இருந்தீர்களா? நீங்கள் இங்குதான் இருக்கிறீர்கள் என்று நான் அறிந்திருந்தால் இவ்வாறு உளூ செய்திருக்கமாட்டேன். என் உற்ற தோழர் (ஸல்) அவர்கள், ‘‘இறைநம்பிக்கையாளரின் உறுப்புகளில் எங்கெல்லாம் உளூவின் நீர் படுகிறதோ அங்கெல்லாம் வெண்மை பரவும்’’ என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹாஸி
நூல்: முஸ்லிம் 420

இந்த ஹதீஸின் மூலம் உளூவின் சிறப்பையும் அது மறுமையில் நமக்கு அடையாளமாகத் திகழ்வதையும் விளங்கிக் கொள்ளலாம். அதனால் அந்த உளூவை நாம் நிறைவாகச் செய்யவேண்டும். நாளை மறுமையில் முஹம்மத் (ஸல்) அவர்களின் உம்மத்தினர் ‘குர்ரன் முஹஜ்ஜிலீன்’ அதாவது முகம் கைகால்கள் ஒளிமயமானவர்கள் என்று அழைக்கப்படுவார்கள் என்பதைப் பின்வரும் புகாரி ஹதீஸ் விவரிக்கின்றது.

பள்ளிவாசலின் மேல்புறத்தில் அபூஹுரைரா (ரலி) அவர்களுடன் நானும் ஏறிச் சென்றேன். அபூஹுரைரா (ரலி) உளூச் செய்தார். (உளூச் செய்து முடித்ததும்) ‘நிச்சயமாக என்னுடைய சமுதாயத்தவர்கள் மறுமை நாளில், உளூவின் சுவடுகளால் முகம், கை கால்கள் ஒளிமயமானவர்களே! என்று அழைக்கப்படுவார்கள். எனவே, உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதைச் கேட்டிருக்கிறேன்’ என்றார்கள்

அறிவிப்பவர்: நுஐம் அல் முஜ்மிர்
நூல்: புகாரி 136

மறுமை நாளில் ஒளிமயமானவர்களாக வருவார்கள் என்று அல்லாஹ் கூறும் வசனங்களுக்கு இந்த ஹதீஸ் விளக்கமாகவும் உறுதிப்படுத்தக் கூடியதாகவும் அமைகின்றது.

நம்பிக்கை கொண்ட ஆண்கள், மற்றும் பெண்களின் ஒளி அவர்களுக்கு முன்னேயும் வலப்புறமும் விரைவதை நீர் காணும் நாள்! இன்று சொர்க்கச் சோலைகளே உங்களுக்குரிய நற்செய்தி. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பீர்கள். இதுவே மகத்தான வெற்றி.

(அல்குர்ஆன்:57:12.)

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்விடம் கலப்பற்ற முறையில் பாவமன்னிப்புத் தேடுங்கள்! உங்கள் இறைவன் உங்கள் தீமைகளை அழித்திடக்கூடும். உங்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். இந்த நபியையும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரையும் அல்லாஹ் இழிவுபடுத்தாத நாளில் அவர்களது ஒளி அவர்கள் முன்னேயும், வலப்புறமும் விரைந்து செல்லும். “எங்கள் இறைவா! எங்கள் ஒளியை எங்களுக்கு முழுமையாக்குவாயாக! எங்களை மன்னிப்பாயாக! நீ ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்’’ என்று கூறுவர்.

(அல்குர்ஆன்:66:8.)

எனவே, நாம் செய்யக் கூடிய உளூ நாளைக்கு ஒளிவீசச் செய்யும் ஒளிச் சுடர் என்று நம்பியவர்களாக உளூவை நிறைவாகவும் நிதானமாகவும் செய்யவேண்டும். ஜமாஅத்தைப் பிடிக்க வேண்டும் என்ற அவசர கோலத்தில் ஹவுஸ் தண்ணீரை மேனியில் அள்ளித் தெளித்து அரை குறையாக உளூச் செய்து விட்டுச் செல்லும் எத்தனையோ சகோதரர்களைப் பார்க்கின்றோம். அப்படி அவசரமாக தண்ணீரை அள்ளி முகத்திலும் கைகளிலும் அடித்து விட்டுச் செல்லும் அந்த சகோதரர்களை மார்க்கப் பிடிப்பு குறைந்தவர்கள் என்றே நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள். 

அத்துடன் உளூவை நிறைவாகச் செய்யும் போது கிடைக்கும் “பாவங்களை அழித்து நன்மையை உயர்த்துதல்’’ என்ற பரிசையும் இவர்கள் இழந்து விடுகிறார்கள். இன்று உளூ செய்பவர்களில் ஒரு சாரார் தலையில் மூன்று தடவை மஸஹ் செய்வதைப் பார்க்கிறோம். அவ்வாறு மஸஹ் செய்யும் போது தலை முழுவதும் மஸஹ் செய்வது கிடையாது. நெற்றிப் பொட்டையும் தண்ணீரையும் மாறி மாறி மின்னல் வேகத்தில் ஒரு சம்பிரதாயத்துக்கு தொட்டுத் தொட்டு முடித்து விடுகின்றனர்.

ஒரு சிலர் தலையிலும் காதுகளிலும் மஸஹ் செய்து விட்டு பிடரியில் தன் இரு கைகளாலும் கராத்தே போன்று வெட்டிக் கொள்கின்றனர். இது போன்ற உளூவெல்லாம் இறைத் தூதர் காட்டிய முறையில் இல்லை. எனவே மேலே நபி (ஸல்) அவர்கள் கூறியபடி பாவ மன்னிப்பு இன்னும் மேலதிகமான நன்மைகள் இதற்கு ஒரு போதும் கிடைக்கப் போவதில்லை.

மேற்கண்ட புகாரி 160வது ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள், தான் செய்வது போல் உளூச் செய்தால் முந்தைய பாவங்கள் மன்னிக்கப் படுவதாகக் குறிப்பிடுகின்றார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்வது போல் நாமும் செய்ய வேண்டும். அதனால் இதைக் கவனத்தில் வைத்து நாம் உளூவை சிறப்பாகவும் நிறைவாகவும் செய்வோமாக! 

குறிப்பு: மேற்கண்ட புகாரி 136வது ஹதீஸில் இடம்பெறும், ‘உங்களில் விரும்பியவர் தம் ஒளியை அதிகப்படுத்திக் கொள்ளட்டும்’

(“فَمَنِ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يُطِيلَ غُرَّتَهُ فَلْيَفْعَلْ‘‘)
என்ற வாசகத்தைப் பற்றி நாம் ஒரு விளக்கத்தை இங்கே பார்க்க வேண்டும் இதே ஹதீஸ் முஸ்னத் அஹ்மதில் (10360)இடம் பெறுகின்றது. அதில், இந்த ஹதீஸின் அறிவிப்பாளரான நுஐம் அல்முஜ்மிர், ‘இது நபி (ஸல்) அவர்களின் செய்தியா? அல்லது அபூஹுரைரா (ரலி)யின் செய்தியா? என்று எனக்கு தெரியாது’ என்று தெரிவிக்கின்றார். 

இதை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் ஃபத்ஹுல் பாரியில் இதன் விளக்கவுரையில் குறிப்பிடுகின்றார். அத்துடன், ‘இந்த ஹதீஸை பத்துக்கும் மேற்ப்பட்ட நபித் தோழர்கள் அறிவிக்கின்றார்கள். அவர்களுடைய அறிவிப்பிலும் அது போல் அபூஹுரைரா (ரலி) அறிவிக்கின்ற அறிவிப்பிலும் இந்தக் கருத்து இடம் பெறவில்லை. இது நுஐம் அல்முஜிரிமிடந்து வருகின்ற அறிவிப்பில் மட்டுமே இடம் பெறுகின்றது. 

அல்லாஹ் மிக அறிந்தவன்’ என்றும் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் இந்த ஹதீஸின் விளக்கவுரையில் குறிப்பிடுகின்றார்கள். ‘‘கூடுதலாகக் கூறப்பட்ட இந்தச் செய்தி அபூஹுரைராவின் சொந்தக் கருத்தாகும். நபி (ஸல்) அவர்களின் கருத்தல்ல! ஹதீஸில் இது இடையில் நுழைந்து விட்டது. அபூஹுரைரா (ரலி)யிடமிருந்து அறிவிக்கின்ற நுஐம் அல்முஜ்மிர் என்ற அறிவிப்பாளர் அறிவிக்கின்ற அறிவிப்பில் மட்டுமே இது இடம் பெறுகின்றது. 

மற்றவர்களின் அறிவிப்பில் இது இடம் பெறவில்லை. ஒன்றுக்கு மேற்பட்ட ஹதீஸ் கலை ஹாபிழ்கள் இதைத் தெளிவுபடுத்தி உள்ளனர்’’ என்று ஹாதில் அர்வாஹ் என்ற நூலில் ஹாபிழ் இப்னுல் கய்யூம் ( ரஹ்) அவர்கள் தெரிவிப்பதாக அறிஞர் அல்பானி அவர்கள் இர்வாவுல் கலீல் என்ற நூலில் தெரிவிக்கின்றார்கள்.

உளூவின் துஆவும் உறுதியாகும் சுவனமும்

இன்று நம்மில் பலர், சிறு சிறு அமல்களை அலட்சியம் செய்வதைப் பார்க்கின்றோம்.

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் விதாவின் போது செய்த அறிவுரையில் ‘‘அறிந்து கொள்ளுங்கள்! இந்த ஊரில் தன்னை ஒரு போதும் மக்கள் வழிபட மாட்டார்கள் என்று ஷைத்தான் நம்பிக்கை இழந்து விட்டான். அதே சமயம் நீங்கள் அற்பமாகக் கருதி விடுகின்ற உங்கள் அமல்கள் மூலம் அவனுக்கு ஒரு வழிபாடு கிடைக்கின்றது. அதன் மூலம் அவன் திருப்தியடைகின்றான்’’ என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்அஹ்வஸ்
நூல்: திர்மிதி 2085

இதைக் கவனத்தில் கொண்டால் நாம் சிறு சிறு அமல்களை விட மாட்டோம். அதில் பேணுதல் காட்டுவோம்.உளூவின் துஆ சிறிய அமலாக இருந்தாலும் அதற்குச் சுவனம் கிடைக்கின்றது என்பதைப் பின்வரும் ஹதீஸ் நமக்கு விளக்குகின்றது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் ஒருவர் முழுமையான முறையில் உளூ செய்துவிட்டு, அஷ்ஹது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வ அன்ன முஹம்மதன் அப்துல்லாஹி வரசூலுஹு (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்றும்,முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் தூதரும் ஆவார்கள் என்றும் உறுதி மொழிகிறேன்) என்று கூறினால், சொர்க்கத்தின் எட்டு வாசல்களும் அவருக்காகத் திறக்கப்படுகின்றன. அவற்றில் தாம் நாடிய வாசலில் அவர் நுழைந்து கொள்ளலாம்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்: முஸ்லிம் 397

சிறிய அமல்கள் மூலம் அல்லாஹ் நமக்கு சுவனத்தைப் பரிசாகத் தருகின்றான். எனவே இவற்றில் நாம் அலட்சியம் காட்டாமல் அமல்களைத் தொடர்வோமாக.!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed