*உலகமே எதிராக நின்றாலும்*…!உள்ளத்தை உறுதியாக்கும் ஓர் நபிமொழி
அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறினார்கள்:
உனக்கு நான் சில சொற்களைக் கற்றுத் தருகிறேன்; அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக இரு! அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான். அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக இரு!
அல்லாஹ்வைக் கண்முன்னே பெற்றுக் கொள்வாய்!
நீ எதையாவது கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் கேள்!
மேலும் நீ உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் உதவி தேடு!
அறிந்து கொள்! அனைவரும் ஒன்று சேர்ந்து உனக்கு ஒரு நன்மை செய்ய நாடினால் அல்லாஹ் நாடினாலே தவிர அவர்களால் உனக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாது.
அனைவரும் சேர்ந்து உனக்கொரு தீமையைச் செய்ய நாடினால் அல்லாஹ் நாடியதைத் தவிர எந்த ஒரு தீமையையும் அவர்களால் செய்ய முடியாது.
எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)
(திர்மிதி: 2516)
வாழ்க்கையில் பல நேரங்களில் நாம் தனிமையை உணர்கிறோம்.
எதிர்காலத்தைப் பற்றிய பயம், மனிதர்கள் நமக்குத் தீங்கு செய்துவிடுவார்களோ என்ற கவலை,
அல்லது மற்றவர்களைச் சார்ந்தே இருக்க வேண்டிய கட்டாயம் – இவை அனைத்தும் மனித வாழ்வில் பின்னப்பட்டவை.
ஆனால், 1400 ஆண்டுகளுக்கு முன்பே, நபிகளார் அவர்கள் சிறுவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களுக்குக் கற்றுக்கொடுத்த ஒரு பாடம், உலகத்தின் அத்தனை கவலைகளுக்கும் ஒரே தீர்வாக அமைந்துள்ளது.
அந்தப் பாடம் தான் *தவக்குல் (இறைவனைச் சார்ந்திருத்தல்)*
அந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவுரையை இவைதான்
\\ *அல்லாஹ்வைப் பேணுதல் என்றால் என்ன?* \\
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: *அல்லாஹ்வின் விஷயத்தில் பேணுதலாக இரு! அல்லாஹ் உன்னைப் பாதுகாப்பான்.*
நாம் இறைவனின் வரம்புகளைப் பேணினால், அவன் நம்மைப் பாதுகாப்பான்.
*எதைப் பேண வேண்டும்?*
அவனது கட்டளைகளை (தொழுகை, நோன்பு, நேர்மை) நிறைவேற்ற வேண்டும். அவன் தடுத்தவற்றை (வட்டி, விபச்சாரம், பொய், ஏமாற்றுதல்) விட்டு விலகி இருக்க வேண்டும்.
*என்ன பாதுகாப்பு கிடைக்கும்?*
உலகத்துத் துன்பங்களிலிருந்தும், மறுமையின் வேதனையிலிருந்தும் பாதுகாப்பு கிடைக்கும். குறிப்பாக, *சோதனையான நேரங்களில் நம் ஈமான் தடம் புரளாமல் அல்லாஹ் நம் உள்ளத்தைப் பாதுகாப்பான்.*
\\ *உதவிக்கு யாரை அழைப்பது?* \\
*நீ எதையாவது கேட்பதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் கேள்! உதவி தேடுவதாக இருந்தால் அல்லாஹ்விடத்தில் உதவி தேடு!*
இன்று மனிதர்கள் ஒரு சிறு தேவைக்கும் படைப்பினங்களை நோக்கி ஓடுகிறார்கள். சிபாரிசுக்காகவும், பணத்திற்காகவும் மனிதர்களிடம் கையேந்துகிறார்கள். ஆனால், ஓர் இறைநம்பிக்கையாளன்
அல்லாஹ்விடமே கேட்பான்.
மனிதர்கள் வெறும் கருவிகள் மட்டுமே. *உதவி செய்பவன் அல்லாஹ் மட்டுமே என்ற ஆழமான நம்பிக்கை நம்மிடம் இருக்க வேண்டும்*. இது நம் சுயமரியாதையைக் காக்கும்; படைப்பினங்களுக்கு முன் தலைகுனிவதைத் தடுக்கும்.
\\ *மனிதர்களைக் கண்டு அஞ்சத் தேவையில்லை* \\
இந்த ஹதீஸின் மிக முக்கியமான,
வரி இதுதான்:
*அனைவரும் ஒன்று சேர்ந்து உனக்கு ஒரு நன்மை செய்ய நாடினால் அல்லாஹ் நாடினாலே தவிர அவர்களால் உனக்கு ஒரு நன்மையும் செய்ய முடியாது*.
*அனைவரும் சேர்ந்து உனக்கொரு தீமையைச் செய்ய நாடினால் அல்லாஹ் நாடியதைத் தவிர எந்த ஒரு தீமையையும் அவர்களால் செய்ய முடியாது.*
இது நம் உள்ளத்தில் உள்ள *மனித பயத்தை* வேரோடு பிடுங்கி எறிகிறது.
அலுவலகத்தில் மேலதிகாரியின் கோபம், எதிரிகளின் சூழ்ச்சிகள்…
*எதுவும் நம்மை எதுவும் செய்துவிட முடியாது, அல்லாஹ் நாடாதவரை!*
உலகமே திரண்டு வந்து உங்களை அழிக்க நினைத்தாலும், அல்லாஹ் உங்களைப் பாதுகாக்க நினைத்தால், அவர்களால் ஒரு சிறு பாதிப்பை கூட ஏற்படுத்த முடியாது.
அதேபோல், உலகமே கூடி உங்களை உயர்த்த நினைத்தாலும், அல்லாஹ் நாடவில்லை என்றால் அது நடக்காது.
\\ *விதி எனும் நிம்மதி* \\
*எழுதுகோல்கள் உயர்த்தப்பட்டு விட்டன. ஏடுகள் காய்ந்து விட்டன.*
நடந்து முடிந்ததை நினைத்துக் கவலைப்படுவதோ, அல்லது நடக்காததை நினைத்துப் பயப்படுவதோ வீண். *நமக்கு என்ன நடக்க வேண்டும் என்பது ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டுவிட்டது*.
*கிடைத்தது அல்ஹம்துலில்லாஹ்*!
*தவறியது அல்லாஹ் நாடியது*!
என்று ஏற்றுக்கொண்டு நகரும் பக்குவத்தை இந்த வரிகள் நமக்குத் தருகின்றன.
வாழ்க்கையில் எப்போது நாம் பலவீனமாக உணர்கின்றோமோ , எப்போது சமூகம் நம்மை தனிமைப்படுத்துமோ, அப்போது இந்த வார்த்தைகளை நினைவுகூருங்கள்: *அல்லாஹ் என்னைப் பாதுகாப்பான்; அவன் நாடாமல் ஓர் அணுவும் அசையாது.*
இந்தத் தெளிவு கிடைத்துவிட்டால், எந்தக் கவலையும் நம்மை வீழ்த்த முடியாது!
*அல்லாஹ் போதுமானவன்*