உருவப்படம் உள்ள வீட்டுக்கு வானவர்கள் வரமாட்டார்களா?

உருவப்படமும், நாயும் உள்ள வீட்டிற்கு வானவர்கள் வரமாட்டார்கள் என்றால் இவை உள்ள வீட்டிற்கு உயிரைக் கைப்பற்ற வரும் வானவர்கள் வரமாட்டார்களா?

நாயும், உருவப்படமும் உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று கூறும் செய்தியின் சரியான பொருள் என்னவென்றால் இறைவனின் அருளையும், அமைதியையும் கொண்டு வரும் வானவர்கள் வரமாட்டார்கள் என்பது தான்.

சில வானவர்கள் மனிதர்களுக்காகப் பிரார்த்தனை செய்தல், அவனுக்குப் பாதுகாப்பு கொடுத்தல், ஷைத்தானை விரட்டுதல், அல்லாஹ்வின் கருணையைக் கொண்டு வருதல், அல்லாஹ்விடம் சென்று அடியானைப் பற்றி நல்லவிதமாகத் தெரிவித்தல் போன்ற பணிகளில் ஈடுபடுத்தப்பட்டிருப்பார்கள்.

இந்த வானவர்கள் வீட்டுக்கு வந்தால் வீட்டில் உள்ளவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் பலன் ஏற்படும். இந்த வானவர்கள் வராவிட்டால் வீட்டில் நிம்மதியின்மை ஏற்படும். அது பெரிய இழப்பாகும்.

நன்மைகளைக் கொண்டுவரும் இந்த வானவர்கள் தான் நாயும், உருவப்படமும் உள்ள வீட்டிற்குள் வர மாட்டார்கள் என்பது தான் நபிமொழியின் கருத்தாகும்.

இத்தகைய வானவர்கள் இருப்பதாகப் பின்வரும் ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஒருவர் எந்த இடத்தில் தொழுவாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிராத்தனை செய்கிறார்கள். ஆனால் (உளூவை முறிக்கக்கூடிய) சிறுதுடக்கு ஏற்படாமலிருக்க வேண்டும். அப்போது அவர்கள் “இறைவா! இவரை மன்னிப்பளிப்பாயாக! இறைவா! இவருக்கு கருணை புரிவாயாக!” என்று பிரார்த்திக்கிறார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி (445)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மக்கள் ஓரிடத்தில் அமர்ந்து அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக் கொண்டிருக்கும் போது, அவர்களை வானவர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அவர்களைக் குறித்து அல்லாஹ் தன்னிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவு கூருகிறான்.

அறிவிப்போர் : அபூஹுரைரா (ரலி), அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல் : முஸ்லிம் (5232)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பூமியில் சுற்றி வரும் சில வானவர்கள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து போற்றும் சபைகளைத் தேடி வருகின்றனர். அல்லாஹ்வைப் போற்றும் சபை ஒன்றை அவர்கள் கண்டால், அவர்களுடன் அவ்வானவர்களும் அமர்ந்து கொள்கின்றனர். அவர்களில் சிலர் வேறு சிலரைத் தம் இறக்கைகளால் சூழ்ந்து, தமக்கும் முதல் வானத்துக்கும் இடையே உள்ள பகுதியை நிரப்புகின்றனர்.

(இறைவனை நினைவுகூரும்) அம்மக்கள் கலைந்து சென்றதும் அ(ந்த வான)வர்கள் வானுலகிற்கு ஏறிச் செல்கின்றனர். அப்போது அல்லாஹ், அவர்களிடம் – அவர்களை நன்கறிந்திருந்தும் – “நீங்கள் எங்கிருந்து வருகிறீர்கள்?” என்று கேட்கிறான்.

அதற்கு வானவர்கள், “பூமியிலுள்ள உன் அடியார்கள் சிலரிடமிருந்து நாங்கள் வருகிறோம். அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறித் துதிக்கின்றனர்; உன்னைப் பெருமைப்படுத்திக் கொண்டும், உன்னை ஏகன் என்று கூறிக் கொண்டும், உன்னைப் புகழ்ந்து போற்றிக் கொண்டும், உன்னிடத்தில் வேண்டிக் கொண்டும் இருக்கின்றனர்” என்று கூறுகின்றனர்.

மேலும், “அவர்கள் உன்னிடம் பாவமன்னிப்புக் கோருகிறார்கள்” என்றும் வானவர்கள் கூறுவார்கள். அதற்கு இறைவன், “அவர்களுடைய பாவங்களை நான் மன்னித்து விட்டேன். அவர்கள் வேண்டியதையும் அவர்களுக்கு நான் வழங்கிவிட்டேன். அவர்கள் எதிலிருந்து பாதுகாப்புக் கோரினார்களோ அதிலிருந்து அவர்களை நான் காப்பாற்றி விட்டேன்” என்று கூறுவான். அப்போது வானவர்கள், “இறைவா! (அந்த) சபையோரிடையே அதிகப் பாவங்கள் புரியும் இன்ன மனிதன் இருந்தான்.

அவன் அவ்வழியே கடந்து சென்ற போது அவர்களுடன் அமர்ந்து கொண்டான்” என்று கூறுகின்றனர். அதற்கு இறைவன், “அவனையும் நான் மன்னித்து விட்டேன். அவர்கள் ஒரு கூட்டத்தார் ஆவர். அவர்களுடன் அமர்ந்திருந்தவர் அவர்களால் (பாக்கியம் பெறுவாரே தவிர )பாக்கியமற்றவராக ஆக மாட்டார்” என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (5218)

எனவே உருவப்படமும் நாயும் உள்ள வீட்டில் நன்மையை கொண்டு வரும் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்பதே அந்த ஹதீஸின் சரியான விளக்கமாகும்.

இவை தவிர அல்லாஹ்வின் தண்டணையைக் கொண்டு வரவும், உயிரைக் கைப்பற்றவும் வானவர்கள் உள்ளனர். அவர்கள் உருவப்படம் இருக்கும் வீடுகளுக்கும் சென்று தமது கடமையைச் செய்து முடிப்பார்கள்.

அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப்பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம்ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள். அவர்கள் (அப்பணியில்)குறை வைக்க மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 6:61

“உங்களுக்கென நியமிக்கப்பட்ட மரணத்திற்குரிய வானவர் உங்களைக் கைப்பற்றுவார்.பின்னர் உங்கள் இறைவனிடம் திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்” என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 32:11

மனிதர்களின் நன்மை தீமைகளைப் பதிவு செய்யும் பணியில் இரு வானவர்கள் அவனுடன் எப்பொழுதும் இருப்பார்கள். எந்த ஒரு சூழ்நிலையிலும் இவர்கள் அவனை விட்டும் பிரியமாட்டார்கள்.

வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை.

திருக்குர்ஆன் 50:18

எனவே வீட்டில் உருவப்படம் நாய் போன்ற எந்தப் பொருட்கள் இருந்தாலும் இதனால் மலகுல் மவ்த் வராமல் இருக்க மாட்டார். குறித்த நேரத்தில் வந்து உயிரை வாங்கிச் சென்றுவிடுவார்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *