உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வரலாறு

இயற்பெயர்: ஃகுமைஸா பின்த் மில்ஹான் முஸ்லிம்-4851, ரூமைஸா புகாரி-3679 என்றும் உம்மு சுலைம் என்றும் ஹதீஸ்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பெற்றோர்கள்-தந்தை பெயர்: மில்ஹான்; தாயார் பெயர்முலைக்கா (ரலி) புகாரி-380, 860

உடன்பிறந்தவர்கள்: ஹராம் இப்னு மில்ஹான் புகாரி-4091  சலீம் இப்னு மில்ஹான் ஆகிய இரு சகோதரர்களும், உம்மு ஹராம் பின்த் மில்ஹான் முஸ்லிம்-4888 என்ற ஒரு சகோதரியும், உடன்பிறந்தார்கள.

திருமண வாழ்கை: மாலிக் இப்னு நள்ர் என்பவரை முதலில் திருமணம் செய்தார்கள். அவரின் மூலம் அவர்களுக்கு அனஸ் பின் மாலிக் புகாரி-6289, ஃபரா இப்னு மாலிக் ஆகிய இரண்டு மகன்கள் பிறந்தார்கள்.

அவரின் மரணத்திற்கு பிறகு அபூதல்ஹா ஸைத் இப்னு ஸஹல் (ரலி) புகாரி-5611, 3679, அவர்களை இரண்டாவதாக மணமுடித்துக் கொள்கிறார்கள். அவரின் மூலம் அவர்களுக்கு அபூஉமைர் முஸ்லிம்-4348; அப்துல்லாஹ் புகாரி-2611,1502 என்ற இரண்டு ஆண் குழந்தைகள் பிறந்தார்கள்

சொர்க்கதிர்குரிய பெண்மணி:

முதன் முதலில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சுவனத்தில் உள்ளே நுழையும் போது உம்மு சுலைம் (ரலி) அவர்களைப் பார்கிறார்கள். அதன் பிறகு பிலால் (ரலி) காலடி ஓசையை கேட்கிறார்கள். அடுத்தபடியாக உமர் (ரலி) மாளிகையை பார்கிறார்கள்.

ஜாபிர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள், ‘நான் (கனவில்) என்னை சொர்க்கத்தில் நுழைந்தவனாகக் கண்டேன். அங்கு நான் அபூ தல்ஹா அவர்களின் மனைவி ருமைஸாவுக்கு அருகே இருந்தேன்.

அப்போது நான் மெல்லிய காலடி யோசையைச் செவியுற்றேன். உடனே, ‘யார் அது?’ என்று கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்), ‘இவர் பிலால்’ என்று பதிலளித்தார். நான் (அங்கு) ஓர் அரண்மனையைக் கண்டேன். அதன் முற்றத்தில் பெண்ணொருத்தி இருந்தாள். நான், ‘இது யாருக்குரியது?’ என்று கேட்டேன்.

அவர், (வானவர்), ‘இது உமருடையது’ என்று கூறினார். எனவே, நான் அந்த அரண்மனையில் நுழைந்து அதைப் பார்க்க விரும்பினேன். அப்போது (உமரே!) உங்கள் ரோஷம் என் நினைவுக்கு வந்தது (எனவே, அதில் நுழையாமல் திரும்பிவிட்டேன்)’ என்று கூறினார்கள். அதற்கு உமர்(ரலி), ‘இறைத்தூதர் அவர்களே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். உங்களிடமா நான் ரோஷம் காட்டுவேன்’ என்று கேட்டார்கள். நூல்: புகாரி-3679

நபி (ஸல்) அவர்களால் ‘சுவனத்துப் பெண்’ எனச் சிலாகித்துச் சொல்லப்பட்ட உம்மு சுலைம் (ரலி) அவர்கள் எந்த அளவுக்கு கொள்கைக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதை பின்வரும் சம்பவம் மூலம் அறிந்து கொள்ளலாம்

கொள்கை உறுதி:

முதலாவது கணவரான மாலிக் இப்னு நள்ர் அவரின் மரணத்திற்கு பிறகு, கணவனை இழந்து இரு குழந்தைகளுக்குத் தாயாக இருகின்ற சூழ்நிலையில், இஸ்லாத்தை ஏற்காத அபூதல்ஹா அவர்கள் மதீனாவில் மிகுந்த செல்வமும், செல்வாக்கும் பெற்றவராக இருந்தார்.

இப்படிப்பட்ட செல்வமும் அந்தஸ்தும் மிக்க அபூதல்ஹா அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களை விரும்பி பெண் கேட்டு வந்தார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள் என்ன பதிலளித்தார்கள் என்பதை கீழ்கண்ட செய்தியில் பாப்போம்.

உம்மு சுலைம்(ரலி) அவர்களிடம் அபூ தல்ஹா அவர்கள் (திருமணத்திற்காக) பெண் பேசினார்கள். அதற்கு உம்மு சுலைம்(ரலி) அவர்கள், “அபூதல்ஹாவே! உங்களைப் போன்றவர் (திருமணம் செய்துக் கொள்ள) மறுக்கப்பட மாட்டார். என்றாலும் நீங்கள் இறைநிராகரிப்பாளர். நான் முஸ்லிமான பெண் ஆவேன்.

(அதனால்) எனக்கு உங்களைத் திருமணம் செய்துக் கொள்வது ஆகுமானதல்ல. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டால் அதுவே (திருமணத்திற்கான) எனக்குரிய மணக்கொடையாகும். அதைத் தவிர வேறு எதையும் உங்களிடம் நான் கேட்க மாட்டேன்” என்று கூறினார்கள். அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அதுவே அவர்களின் மணக்கொடையாக இருந்தது. நூல்: நஸயீ-3341

கணவனை இழந்திருந்த உம்மு சுலைம் (ரலி) அவர்கள், தன்னுடைய குழந்தைகளுக்கு தாயாக தனியாக இருகின்ற சூழ்நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்வதாக மதீனாவில் ஒரு செல்வந்தர் பெண் கேட்கிறார். இந்த நேரத்தில் அவர்கள் அளித்த பதில் ‘நீங்கள் இறைநிராகரிப்பாலாராக இருக்கிறீர்கள்’ நான் ஒரு முஸ்லிமான பெண் உங்களை ஒருபோதும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன், என்று கூறுகிறார்கள் என்றால் அவர்களின் கொள்கை உறுதி எத்தகையது என்பதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.

இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் உங்களை எவ்வளவு கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப்பெண் சிறந்தவள். இணைகற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மணமுடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கத்திற்கும் மன்னிப்பிற்கும் அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான்.(அல்குர்ஆன்: 2:221)

உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்கு இந்த வசனம் ஏற்படுத்திய தாக்கம்தான், என்றாலும் அவர்கள் கொள்கையில் உறுதியாக இருந்த காரணத்தினால், பின்பு அபூதல்ஹா (ரலி) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு முஸ்லிமாக மாறுகிறார்கள். அதற்கு பிறகுதான் அவர்களை மனமுடித்துக் கொள்கிறார்கள்.

இந்த சம்பவத்தில் நமக்கு பல படிப்பினை இருக்கின்றன. இன்றைக்கு திருமணம் என்று வந்துவிட்டால், ஆழகு ஆடம்பரம், வசதி, இவற்றையெல்லாம் பார்க்கின்ற நாம்? கொள்கையை பார்கின்றோமா? கொள்கைக்கு முகியத்துவம் தருகின்றோமா? உம்மு சுலைம் (ரலி) அவர்கள் இதில் எதுவும் பார்க்கவில்லை, கொள்கையை மட்டும்தான் பார்த்தார்கள்.

உறுதி பிரமாணம்

யாரேனும் மரணத்துவிட்டால், அந்த மவுத்தை சுற்றி உட்கார்ந்து ஒப்பாரி வைத்து அழும் ஒரு பழக்கம் நம்முடைய சமுதாயத்தில் பார்க்க முடியும். இந்த பழக்கம் முக்கியமாக பெண்களிடத்தில் அதிகமாகவே காணமுடியும். இந்த ஒப்பாரி வைக்கும் அறியாமைக்கால செயலுக்கு எதிராக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் சில பெண்கள், உறுதிமொழி எடுத்துக் கொள்கிறார்கள். அவர்களில் உம்மு சுலைம் (ரலி) அவர்களும் இருந்தனர்.

உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் (இறைநம்பிக்கைக்கான) உறுதிமொழி வாங்கியபோது, ஒப்பாரிவைக்கக் கூடாது என்றும் உறுதிமொழி வாங்கினார்கள். எனினும், இந்த வாக்குறுதியை எங்களில் ஐந்து பெண்களைத் தவிர வேறெவரும் நிறைவேற்ற வில்லை. அப்பெண்கள்: உம்மு சுலைம் (ரலி), உம்முல் அலா (ரலி), “முஆத் (ரலி) அவர் களின் துணைவியான அபூசப்ராவின் மகள்” அல்லது “அபூசப்ராவின் மகள் மற்றும் முஆத் (ரலி) அவர்களின் துணைவி”. நூல்: முஸ்லிம்-1702

நபிகளாருக்கு முன்னால் தான்எடுத்த  உறுதிமொழியை இறுதிவரை கடைப்பிடுத்து வாழ்ந்தவர் தான் உம்மு சுலைம் (ரலி) அவர்கள்…

நபிகாரின் நேசத்திற்குரியவர்

நபிகாளார் உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வீட்டின் வழியாக கடந்து சென்றால், அவர்களின் வீட்டிற்கு சென்று ஸலாம் கூறி பேசிவிட்டு தான் செல்வார்ககளாம். அந்த அளவிற்கு அவர்களின் மீது பாசம் வைத்திருந்தார்கள்.

அனஸ்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மதீனாவில் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்களின் வீட்டைத் தவிர தம் மனைவிமார்களின் வீடுகளல்லாமல் வேறெவருடைய வீட்டிற்கும் (அதிகமாகச்) செல்வதில்லை.

அவர்களிடம் அது குறித்துக் கேட்கப்பட்டபோது, ‘நான் அவரிடம் இரக்கம் காட்டுகிறேன். அவரின் சகோதரர் (ஹராம் இப்னு மில்ஹான்(ரலி)) என்னோடு (என் பிரசாரப் படையினரோடு) இருந்தபோது (பிஃரு மவூனா என்னுமிடத்தில்) கொல்லப்பட்டார்’ என்றார்கள். நூல்: புகாரி-2844

தன்னுடைய மனைவியின் வீட்டை தவிர, நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களின் வீட்டிற்கு மட்டும் தான் செல்வார்கள் என்றால், நபிகளாரின் நேசத்திற்குரியவராக உம்மு சுலைம் (ரலி) அவர்கள் திகழ்ந்திருகிறார்கள் என்பதை இந்த ஹதீஸின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது.

சிறந்த தாய்

தன்னுடைய மகன் அனஸை நபி (ஸல்) அவர்களிடத்தில் பணியமர்த்துகிறார்கள். இன்றைய காலகட்டத்தில் பணத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து வேலைக்கு அனுப்பும் பெற்றோர்களுக்கு மத்தியில் நபிகளாருக்கு பணி செய்ய வேண்டும் நபிகளாரிடத்தில் இருக்கவேண்டும் என்று ஆசை கொண்டு நபிகளாரிடத்தில் பணிக்கு  சேர்கிறார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்கள்

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது (என் தாயாரின் இரண்டாம் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்கள், எனது கையைப் பிடித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, “அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாலிப் பையன்; அவன் தங்களுக்குப் பணிவிடை செய்யட்டும்” என்று சொன்னார்கள்.

அதன்படி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஊரிலிருக்கும்போதும் பயணத்தில் இருக்கும்போதும் அவர்களுக்குப் பணிவிடை செய்துவந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் செய்த எதைப் பற்றியும் “இதை நீ ஏன் இப்படிச் செய்தாய்?” என்றோ, நான் செய்யாமல் விட்ட எதைப் பற்றியும் “இதை நீ ஏன் இப்படிச் செய்யவில்லை?” என்றோ அவர்கள் என்னிடம் கேட்டதில்லை. நூல்: முஸ்லிம்-4624, 4625, 4626

அனஸ் (ரலி) அறிவித்தார்: நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பத்து ஆண்டுகள் சேவகம் புரிந்தேன். நூல்: புகாரி-6038, முஸ்லிம்-4623

தன் மகனுக்காக பிரார்த்திகுமாறு நபி (ஸல்) அவர்களிடத்தில் கூறினார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தாயார் என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்றார்கள். அப்போது தமது முக்காட்டுத் துணியில் ஒரு பகுதியை எனக்குக் கீழாடையாகவும் மற்றொரு பகுதியை எனக்கு மேல் துண்டாகவும் போர்த்திவிட்டிருந்தார்கள். என் தாயார், “அல்லாஹ்வின் தூதரே! இவர் என் (செல்ல) மகன் அனஸ். தங்களுக்குச் சேவகராகப் பணியாற்றுவதற்காக இவரை உங்களிடம் அழைத்துவந்துள்ளேன். இவருக்காகப் பிரார்த்தியுங்கள்” என்று கூறினார்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இறைவா! அனஸின் செல்வத்தையும் குழந்தைகளையும் அதிகமாக்குவாயாக!” என்று பிரார்த்தித்தார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! இன்றைய தினத்தில் என்னிடம் ஏராளமான செல்வங்கள் உள்ளன. என் பிள்ளைகள் மற்றும் பிள்ளைகளுடைய பிள்ளைகளின் எண்ணிக்கை சுமார் நூறை எட்டியிருக்கிறது. நூல்: முஸ்லிம்-4889

நபி (ஸல்) அவர்களின் பிரார்த்தனைக்குப் பிறகு பிற்காலத்தில் அனஸ் (ரலி) அவர்களுக்கு ஏராளமான செல்வமும், நூறு குழ்ந்தைகள் பிறந்தது என்று மேற்கண்ட ஹதீஸின் மூலம் விளங்கலாம்.

ரகசியம் பாதுகாக்க வைக்கும் தாய்

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சேவகனாக இருந்தபோது) என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்தார்கள். அப்போது நான் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடிக்கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு முகமன் (சலாம்) சொன்னார்கள். பிறகு என்னை ஓர் அலுவல் நிமித்தம் (ஓரிடத்திற்கு) அனுப்பிவைத்தார்கள். நான் என் தாயாரிடம் தாமதமாகவே வந்தேன். நான் (வீட்டுக்கு) வந்தபோது என் தாயார், “உன் தாமதத்திற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்கள்.

நான், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அலுவலுக்காக என்னை அனுப்பி வைத்தார்கள்” என்று பதிலளித்தேன். அப்போது என் தாயார், “என்ன அலுவல்?” என்று கேட்டார்கள். நான், “அது இரகசியம்” என்று சொன்னேன். என் தாயார், “நீ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரகசியத்தை யாரிடமும் சொல்லாதே” என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம்-4891

சிறுவராயிருந்த அனஸ் அவர்கள் ஒரு நாள் வீட்டிற்க்கு தாமதமாக வருகிறார்கள். ஏன் தாமதம் என்று கேட்கும் போது ஒரு அலுவல் வேலையாக நபிகளார் ஓரிடத்திற்க்கு அனுப்பி வைத்தர்கள் அதனால் தாமதம் ஆகிவிட்டது என்று கூறும் போது எந்த இடத்திற்கு அனுப்பி வைத்தார்கள் என்று தாயார் கேட்கிறார்கள். அதற்கு அனஸ் அவர்கள் அது இரகசியம்  என்று கூறும் போது அல்லாஹ்வின் தூதரின் இரசியத்தை யாரிடமும் கூறாதே! பாதுகாத்து வைத்துக் கொள்! என்று அறிவுரை கூறிகிறார்கள் என்றால் தன் மகனை மார்க்க அடிப்படையில் எப்படி வளர்த்திருகிறார்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்கள்.

அதே போன்று அந்த இரகசியத்தை அனஸ் (ரலி) பாதுகாத்தார்கள் என்று ஹதீஸ்களில் பார்க்க முடியும்.

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.

என்னிடம் நபி(ஸல்) அவர்கள் ஓர் இரகசியம் சொன்னார்கள். அவர்களின் இறப்புக்குப் பிறகும் கூட ஒருவரிடமும் அதை நான் தெரிவிக்கவில்லை. என்னிடம் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) அவர்கள் அது குறித்துக் கேட்டார்கள். அதை நான் அவருக்கும் தெரிவிக்கவில்லை. நூல்: புகாரி-6289

இவ்வாறு அனஸ் (ரலி) அவர்களின் வளர்ப்பில் மிகுந்த கவனமும் அக்கறையும் செலுத்தி மார்க்க அடிப்படையில் தன் மகனை வளர்த்த சிறந்த தயாராகவும் திகழ்ந்தார்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்கள்..

வீர பெண்மணி

உம்மு சுலைம் (ரலி) அவர்கள் போர்களத்தில் கத்தியுடன் வருவதை பார்த்த அபூதல்ஹா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து என் மனைவி  கத்தி ஒன்று வைத்திருக்கிறார் என்னவென்று விசாரியுங்கள் என்று சொல்கிறார்கள். அப்போது நபிகளார் அழைத்து விசாரிக்கிறார்கள் அதற்கு அவர்கள் அளித்த பதிலை பாருங்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்கள் ஹுனைன் போர் தினத்தன்று பிச்சுவாக் கத்தி ஒன்றை எடுத்து, தம்முடன் வைத்திருந்தார். அதைப் பார்த்த (என் தாயாரின் கணவர்) அபூதல்ஹா (ரலி) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் சென்று), “அல்லாஹ்வின் தூதரே! உம்மு சுலைம் தம்முடன் பிச்சுவாக் கத்தி ஒன்றை வைத்திருக்கிறார்” என்று கூறினார்கள்.

அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இந்தப் பிச்சுவாக் கத்தி எதற்கு?” என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ரலி) அவர்கள், “இணைவைப்பாளர்களில் யாரேனும் என்னை நெருங்கினால் அவரது வயிற்றை நான் பிளந்துவிடுவேன். அதற்காகத்தான் அதை வைத்துள்ளேன்” என்று கூறினார். அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரிக்கலானார்கள்.

உம்மு சுலைம் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! நம்மவரைத் தவிர (மக்கா வெற்றியின்போது) தங்களிடம் சரணடைந்து தங்களால் (பொது மன்னிப்பளிக்கப்பட்டு) விடுவிக்கப்பட்டவர்களைத் தாங்கள் கொன்றுவிடுங்கள்” என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அல்லாஹ் போதுமானவனாக ஆகிவிட்டான். அவன் உபகாரமும் செய்துவிட்டான். (இந்த ஹுனைன் போரில் நமக்குச் சரிவு ஏற்பட்டாலும் பெருத்த பாதிப்பு ஏதுமில்லாமல் அல்லாஹ் காப்பாற்றிவிட்டான்)” என்று கூறினார்கள். நூல்: முஸ்லிம்-3697

இன்றைக்கு இருக்கும் பெண்கள் இரத்தத்தை பார்த்தாலே பயந்து விடுகிறார்கள். ஆனால் உம்மு சுலைம் அவர்களின் வீரத்தை பார்த்தீர்களா? “இணைவைப்பாளர்களில் யாரேனும் என்னை நெருங்கினால் அவரது வயிற்றை நான் பிளந்துவிடுவேன். அதற்காகத்தான் இந்த கத்தியை வைத்துள்ளேன்” என்று நபி (ஸல்) அவர்களிடம் தைரியமாக சொல்கிறார்கள் என்றால் அவர்கள் எத்தகைய வீரமிகுந்த பெண்மணியாக இருந்திருக்கிறார்கள்.

மணவிருந்து

நபி(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை மணமுடித்து மணாளராக இருந்தபோது உம்முசுலைம்(ரலி) அவர்கள் அனஸ் அவர்களிடத்தில் ‘ஹைஸ்’ என்ற உணவை தயாரித்து கொடுத்து அனுப்புகிறார்கள்.

அபூ உஸ்மான் அல்ஜஅத் இப்னு தீனார்(ரஹ்) அறிவித்தார்:

(பஸராவிலுள்ள) பனூ ரிஃபாஆ பள்ளி வாசலில் (நாங்கள் இருந்துகொண்டிருந்த போது) அனஸ்(ரலி) எங்களைக் கடந்து சென்றார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்:

நபி(ஸல்) அவர்கள் (என் தாயார்) உம்மு சுலைம்(ரலி) இருக்கும் பகுதியைக் கடந்து சென்றால் அவர்களின் இல்லத்திற்குச் சென்று அவர்களுக்கு சலாம் (முகமன்) கூறுவது வழக்கம்.

நபி(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை மணமுடித்து மணாளராக இருந்தபோது உம்முசுலைம்(ரலி) என்னிடம், ‘இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்கு ஏதாவது ஒன்றை நாம் அன்பளிப்பாக வழங்கினால் நன்றாயிருக்குமே!” என்று கூறினார்கள். அதற்கு நான், ‘(அவ்வாறே) செய்யுங்கள்!” என்று அவர்களிடம் கூறினேன். எனவே, அவர்கள் பேரிச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றை எடுத்து ‘ஹைஸ்’ எனும் ஒருவகைப் பண்டத்தை ஒரு பாத்திரத்தில் தயாரித்தார்கள்.

அதை என்னிடம் கொடுத்து நபி(ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதை நான் எடுத்துக் கொண்டு நபி(ஸல்) அவர்களை நோக்கி நடந்(து சென்று கொடுத்)தேன். அப்போது அவர்கள் என்னிடம், ‘அதைக் கீழே வைக்குமாறு கூறிவிட்டு, சிலரின் பெயரைக் குறிப்பிட்டுவிட்டு, அவர்களைத் தம(து மணவிருந்து)க்காக அழைத்து வருமாறும், நான் சந்திக்கிறவர்களையும் தமக்காக அழைத்து வருமாறும் என்னைப் பணித்தார்கள். நபி(ஸல்) அவர்கள் எனக்கு உத்தரவிட்ட பணியைச் செய்து (முடித்து)விட்டு, நான் திரும்பி வந்தேன்.

அப்போது (நபியவர்களின்) அந்த இல்லம் மக்களால் நிரம்பியிருந்தது. அப்போது நபி(ஸல்) அவர்கள் தம்மிரு கைகளையும் அந்தப் பண்டத்தின் மீது வைத்து அல்லாஹ் நாடிய (பிரார்த்னைச் சொற்கள் முதலிய)வற்றை மொழியக் கண்டேன். பிறகு அதனை உண்பதற்காக அங்கிருந்த மக்களைப் பத்துப் பத்துப் பேராக அழைக்கலானார்கள். அவர்களிடம், ‘அல்லாஹ்வின் பெயரைக் கூறுங்கள்! ஒவ்வொருவரும் அவரவர்(கைக்கு) அருகிலிருக்கும் பகுதியிலிருந்து உண்ணுங்கள்!” என்று கூறினார்கள்.

அவர்கள் அனைவரும் அதனைச் சாப்பிட்டுவிட்டு கலைந்து சென்றனர். அவர்களில் வெளியே சென்றுவிட்டவர்கள் போக ஒரு சிலர் மட்டும் (அங்கேயே) பேசிக்கொண்டு இருந்துவிட்டார்கள். (அவர்கள் எழுந்து செல்லாமல் இருப்பது குறித்து) நான் வருந்தலானேன். பிறகு, நபி(ஸல்) அவர்கள் (வழக்கம் போல்) தம் துணைவியரின்) அறைகளை நோக்கி (அவர்களுக்கு சலாம் கூறிப் பிரார்த்திப்பதற்காக)ப் புறப்பட்டுச் சென்றார்கள். அவர்களுக்குப் பின்னால் நானும் போனேன். ‘(எழுந்து செல்லாமல் பேசிக்கொண்டிருக்கும்) அவர்கள் போய்விட்டிருப்பார்கள்” என்று கூறினேன். எனவே, நபி(ஸல்) அவர்கள் திரும்பி வந்து (ஸைனப்(ரலி) அவர்களின்) அந்த இல்லத்திற்குள் சென்று திரையைத் தொங்கவிட்டார்கள். நான் அந்த அறையிலேயே இருந்து கொண்டிருந்தேன்.

அப்போது நபி(ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) பின்வரும் (திருக்குர்ஆன் 33:53 வது) வசனத்தை ஓதினார்கள்: இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள்.

 மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்று விடுங்கள். பேசிக்கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கிறது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.

அனஸ்(ரலி) கூறினார்: நான் (சிறுவயதில்) இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குப் பத்தாண்டுகள் பணிவிடை செய்தேன். நூல்: புகாரி-5163

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *