உபரியான நோன்புக்கு ஸஹர் உணவு அவசியமா?

உபரியான நோன்பு நோற்க சஹர் உணவு உட்கொள்வது அவசியம் இல்லை என்று ஒரு நண்பர் கூறுகிறார். இது சரியா?

அந்தச் சகோதரர் பின்வரும் செய்தியைத்தான் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நாள் என்னிடம் வந்து, “உங்களிடம் (உண்பதற்கு) ஏதேனும் இருக்கிறதா?” என்று கேட்டார்கள். நாங்கள் “இல்லை’ என்றோம். “அப்படியானால் நான் (இன்று) நோன்பாளியாக இருந்து கொள்கிறேன்” என்றார்கள். பிறகு மற்றொரு நாள் அவர்கள் எம்மிடம் வந்த போது, “அல்லாஹ்வின் தூதரே! நமக்கு ஹைஸ் எனும் பலகாரம் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது என்றோம். அதற்கு அவர்கள், “எனக்கு அதைக் காட்டு. நான் இன்று காலை நோன்பு நோற்றிருந்தேன்” என்று கூறிவிட்டு, அதைச் சாப்பிட்டார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் 1957

உண்ணாமலும், பருகாமலும் இருந்தால் விடிந்த பிறகு கூட அன்றைய நாளில் உபரியான நோன்பு நோற்க அனுமதியுள்ளது என்பதற்கு மேற்கண்ட ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உபரியான நோன்பு நோற்பதாக ஸஹர் நேரத்தில் முடிவு செய்யாமல் பகலில் தான் முடிவு செய்கிறார்கள். சூரியன் உதித்த பிறகு ஸஹர் செய்ய முடியாது என்பதால் நபியவர்கள் ஸஹர் செய்யாமல் நோன்பு நோற்றுள்ளார்கள் என்று இதில் இருந்து தெரிகிறது.

ஸஹர் செய்ய வாய்ப்பு இல்லாதவர் ஸஹர் செய்யாமல் நோன்பு நோற்றால் அதில் தவறில்லை என்பதற்கு இது ஆதாரமாகும்.

இயலாத நிலையில் ஒன்றை விட்டுவிட்டால் இயலும் போதும் அதை விட்டுவிடலாம் என்று முடிவு செய்வது தவறாகும்.

ஸஹர் செய்ய வாய்ப்பு உள்ளவர் ஸஹர் செய்து நோன்பு நோற்பதே நபிவழி. பின்வரும் செய்திகள் இதைத் தெளிவுபடுத்துகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நீங்கள் ஸஹர் நேரத்தில் உண்ணுங்கள்! ஏனெனில் ஸஹர் செய்வதில் பரக்கத் இருக்கிறது.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரி 1923

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நமது நோன்பிற்கும், வேதம் கொடுக்கப்பட்ட பிறசமுதாயத்தின் நோன்பிற்கும் உள்ள வேறுபாடு ஸஹர் நேரத்தில் உண்பது தான்.

அறிவிப்பவர் : அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 1836

ஸஹர் செய்வது குறித்து நபியவர்கள் இந்த அளவு முக்கியத்துவப்படுத்தி கூறி இருப்பதால் ஸஹர் செய்வது கடமையான நோன்புக்கு மட்டுமின்றி கடமையல்லாத நோன்புக்கும் அவசியமாகும்.

காலைப் பொழுதை அடைந்த பின்னர் நோன்பாளியாக இருக்கும் முடிவை ஒருவர் எடுத்தால் ஸஹர் செய்யும் நேரம் முடிந்து விட்டதால் ஸஹர் செய்யாமல் நோன்பைத் தொடரலாம் என்பதுதான் சரியான கருத்தாகும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *