உடலுறவுக்குப் பின்னர் தான் வலீமா கொடுக்க வேண்டுமா?

இல்லை.

திருமணம் முடித்த பின் மணமகன் வலீமா விருந்து கொடுப்பதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளார்கள். ஆனால் திருமணம் முடித்து இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் தான் வலீமா விருந்தளிக்க வேண்டும் என்று எந்த நிபந்தனையையும் நபி (ஸல்) அவர்கள் விதிக்கவில்லை.

முஹாஜிர்களான நாங்கள் மதீனாவுக்கு வந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னையும் ஸஅது பின் ரபீஃ அவர்களையும் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅது (ரலி), “நான் அன்சாரிகளில் அதிக செல்வமுள்ளவன். எனவே என் செல்வத்தில் பாதியை உமக்குப் பிரித்துத் தருகின்றேன். எனது இரு மனைவியரில் நீர் யாரை விரும்புகின்றீர் என்று பாரும். அவரை உமக்காக விவாகரத்துச் செய்கின்றேன்.

அவரது இத்தா முடிந்ததும் அவரை உமக்குத் திருமணம் முடித்துத் தருகின்றேன்” என்று கூறினார். அப்போது நான், “இது எனக்குத் தேவையில்லை. வியாபாரம் நடைபெறுகின்ற கடைவீதி ஏதும் இருக்கின்றதா?” என்று கேட்டேன்.

அவர், “கைனுகா எனும் கடைவீதி இருக்கின்றது”என்றார்.

நான் அங்கு சென்று பாலாடைக் கட்டியையும் நெய்யையும் (லாபமாகக்) கொண்டு வந்தேன். மறுநாளும் தொடர்ந்து சென்றேன்.

சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் கறையுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன்.

நபி (ஸல்) அவர்கள், “நீ மணம் முடித்து விட்டாயா?” என்று கேட்டார்கள். நான், ஆம் என்றேன். யாரை? என்று கேட்டார்கள். “ஓர் அன்சாரிப் பெண்ணை” என்று நான் கூறினேன்.

எவ்வளவு மஹர் கொடுத்தாய்?” என்றுகேட்டார்கள்.

ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்” என்றேன். அப்போது நபி(ஸல்) அவர்கள், “ஓர் ஆட்டையேனும் மண விருந்தாக அளிப்பாயாக” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் – அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி),

நூல் – புகாரி 2048

இந்த ஹதீஸில் அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்களைப் பார்த்து, திருமணம் முடித்து விட்டாயா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டு விட்டு, வலீமா விருந்து கொடுக்கச் சொல்கின்றார்கள். இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் தான் வலீமா விருந்து கொடுக்க வேண்டும் என்றிருந்தால், நபி (ஸல்) அவர்கள், நீ இல்லறத்தில் ஈடுபட்டுவிட்டாயா? என்று கேட்டிருக்க வேண்டும். ஆனால், யாரை மணம் முடித்தாய்? எவ்வளவு மஹர் கொடுத்தாய்? என்றெல்லாம் விசாரிக்கும் நபி (ஸல்) அவர்கள், இல்லறத்தில் ஈடுபட்டது குறித்து எந்தக் கேள்வியும் கேட்கவில்லை.

வலீமா விருந்தளிப்பதற்கு, இல்லறத்தில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை என்பதை இதிலிருந்து அறிய முடிகின்றது. ஆனால் அதே சமயம் திருமண ஒப்பந்தம் முடிவதற்கு முன்னரே சில இடங்களில் விருந்தளிக்கப் படுகின்றது. இது வலீமா விருந்தாக ஆகாது. திருமண ஒப்பந்தம் முடிந்த பின்னர் அளிப்பது தான் வலீமா விருந்தாகும் என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும்.

பெண்களின் மாதவிடாய் நேரத்தில் உடலுறவு கொள்ளக் கூடாது என்று நாம் அறிந்து வைத்துள்ளோம். திருமணம் ஆன் நாளில் மனைவிக்கு மாதவிடாய் ஏற்பட்டால் உடலுறவுக்கு ஒருவாரம் அல்லது அதிக நாட்கள் ஆகலாம். இதையும் கவனத்தில் கொண்டால் திருமண விருந்துக்கு உடலுறவு கொண்டிருக்க வேண்டும் என்பதி நிபந்தனை அல்ல என்பதை அறியலாம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed