ஈருலக வாழ்வையும் இருளாக்கும் வாடஸ்அப் பேஸ்புக்

செல்போன் கண்டுபிடிப்பிற்குப் பிறகு இன்றைக்கு இரண்டு வயது குழந்தை முதல் தள்ளாத வயோதிகர் வரை அனைவரின் கரங்களிலும் அதன் பயன்பாடு அதிகரித்துள்ளது. செல்போன் பயன்பாட்டின் மிக  அசுர வளர்ச்சியின் அடையாளமாக வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகியவை நவீன அறிவியல் உலகில் மிக முக்கிய தகவல் தொடர்பு வழித்தடமாகத் திகழ்கின்றன.

இந்த வாட்ஸ்அப், பேஸ்புக் பயன்பாடுகள் சிலருக்கு நல்வாய்ப்பாகவும் பலருக்கு துர்பாக்கியமாகவுமே உள்ளன. ஆம்! இன்றைக்கு அதிகமானோர் இவற்றை இம்மை மற்றும் மறுமை வாழ்வை நாசமாக்கும் செயல்களுக்காகவே பயன்படுத்தி வருகின்றனர்.

வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் சிந்தனை ரீதியிலான மலட்டுத் தன்மையையும், நடைமுறை சமூக வாழ்விலிருந்து தனிமைப்படுதலையும் அதிகமான இளைஞர்களிடம் உருவாக்கியுள்ளது.

செல்போன்கள் மற்றும் கம்ப்யூட்டர்களின் ஊமைத் திரைகளில் நிலைகுத்திய பார்வையும்,  கீ போர்டுகளில் அசைந்து கொண்டிருக்கும் விரல்களுமாய் வெளி உலகத் தொடர்புகளை இழந்து, கணவன், மனைவி, தாய், தந்தை, குழந்தைகள், சகோதர சகோதரிகள் மற்றும் நண்பர்களுடன் கலந்துறவாட மறந்து, எந்நேரமும் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்குகளில் மூழ்கிக் கிடக்கும் மக்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றனர். இதனை நவீன விஞ்ஞான முன்னேற்றத்தினால் ஏற்பட்ட ஒரு கொள்ளை நோய் என்று கூட வர்ணிக்கலாம்.

சமூக வலைத்தளங்களில் மூழ்கியவர்கள் தாம் புதியதோர் உலகத்திலும், நட்பிலும், நேசத்திலும், விளையாட்டிலும் சஞ்சரிப்பதாய் எண்ணுகின்றனர். ஆனால் அந்த ஊமை உலகம் அவனுடைய சமூக வாழ்வையும் குடும்ப வாழ்வையும் பாழ்படுத்துகிறது என்பதை அறியாமல் உள்ளனர்.

ஒரு சராசரி இளைஞன் 7 நாட்களில் 38 மணிநேரம் அதாவது ஒரு வாரத்திற்கு ஒன்றரை நாட்கள் இணைய தளங்களில் மூழ்கிக் கிடப்பதாக நவீன ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இது ஒருபுறம் என்றால் இந்த வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாக ஏற்படும் பெரும்பாவங்கள் ஏராளமும் தாராளமும் ஆகும். அவற்றில் சிலவற்றைப் பற்றித்தான் இக்கட்டுரையில் காணவிருக்கின்றோம்.

பொய்ச் செய்திகளைப் பரப்புதல்

ஒரு செய்தியை மற்றவர்களுக்கு எடுத்துரைப் பதற்கான அடிப்படையை இஸ்லாம் வகுத்துத் தந்துள்ளது. செய்தியைக் கொண்டு வருபவன் நல்லவனா? கெட்டவனா? என்பதை ஆய்வு செய்ய வேண்டும். உண்மை என்று உறுதிப்படுத்தப்பட்ட செய்திகளைத் தான் பிறருக்கு எடுத்துரைக்க வேண்டும். கேள்விப்பட்டதையெல்லாம் பரப்புபவன் பொய்யர்களில் ஒருவனாவான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)

நூல்:  முஸ்லிம் முன்னுரை (6)

ஆனால் இன்றைக்கு பலர் தாம் கேள்விப் பட்டதையெல்லாம் வாட்ஸ்அப், பேஸ்புக் மூலம் மக்களுக்கு மத்தியில் பரப்பி விட்டு சந்தோசம் அடைகின்றனர். நிச்சயமாக பொய்களைப் பரப்புதல் என்பது நம்மை நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் கொடும்பாவம் என்பதை ஏராளமான வசனங்களும், நபிமொழிகளும் எச்சரிக்கை செய்கின்றன. சுருக்கத்தைக் கருதி அவற்றை நாம் இங்கே குறிப்பிடவில்லை. ஆனால் பொய் என்பது அதன் தன்மைக்கேற்ப மிகப் பெரும் பாவம் என்பதை நாம் உணர்ந்து செயல்பட வேண்டும்.

சமூகத்திற்கு பாதிப்பு ஏற்படுத்தும் செய்திகளைப் பற்றிக் கேள்விப்பட்டால் அவற்றை மக்களுக்கு மத்தியில் பரப்பிவிடுவது கூடாது. அதனைப் பற்றி தீர விசாரிக்கும் ஆற்றல் பெற்றவர்களிடம் தான் அதனைத் தெரிவிக்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இவ்வாறு பரப்பியவர்களை திருமறைக் குர்ஆன் கண்டித்து அது ஷைத்தானைப் பின்பற்றுதல் என்று எச்சரிக்கை செய்கிறது.

பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதைப் பரப்புகின்றனர். அதை இத்தூதரிடமும், (முஹம்மதிடமும்) தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் கொண்டு சென்றிருந்தால் ஆய்வு செய்வோர் அதை அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் அருளும், அவனது அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஷைத்தானைப் பின்பற்றியிருப்பீர்கள்.

(அல்குர்ஆன்:4:83.)

நன்மை செய்கிறோம், எச்சரிக்கிறோம் என்ற பெயரில் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களின் மூலம் பயத்தைப் பரப்புவதைச் சிலர் செய்கின்றனர். பரபரப்புக்காக செய்தி ஊடகங்கள் செய்யும் இந்த வேலையை முஸ்லிம்கள் செய்யக் கூடாது என்று இவ்வசனம் எச்சரிக்கை செய்கிறது.

ஒரு பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகச் செய்தி கிடைத்தால் அதைத் தக்கவர்களிடமும், ஆய்வு செய்வோரிடமும் கூற வேண்டும். மக்களிடம் பரப்பக் கூடாது.

“அங்கே பத்துப் பேர் செத்து விட்டார்கள். இங்கே நூறு வீட்டைக் கொளுத்தி விட்டார்கள்’’ என்பது போன்ற வதந்திகளைப் பரப்புவதால் நாளைக்கு வர வேண்டிய கலவரம் இன்றைக்கே வந்து விடும். சமுதாயமும் பீதியில் உறைந்து நிம்மதியை இழந்து விடும். அதுபோல் மிகப் பெரிய பாதுகாப்பின்மை ஏற்பட்டிருக்கும்போது அதை மறைத்தோ, குறைத்தோ பரப்புவதும் தவறாகும்.

இன்னும் சொல்வதானால் இது போன்ற செய்திகள் கிடைக்கப் பெற்றால் வழிநடத்தும் தலைவர்களின் கவனத்துக்குத்தான் கொண்டு செல்ல வேண்டும். நாமாகப் பரப்பக்கூடாது என்பதைத்தான் இவ்வசனம் கூறுகிறது. இதைத்தான் இன்றைக்கு சமூக வலைத்தளங்கள் மூலம் செய்து கொண்டிருக்கிறனர்.

எல்லாவற்றிற்கும் மேலாக இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்திகளையும், பலவீனமான ஹதீஸ்களையும் இன்றைக்குப் பலர் வாட்ஸ்அப் பேஸ்புக் மூலம் பரப்பி பெரும்பாவத்தைச் செய்துவருகின்றனர்.

இஸ்லாம் தொடர்பான ஒரு செய்தியைக் கூறும் போது அது உண்மையான செய்திதானா என்பதை நூறு சதவிகிதம் உறுதிப்படுத்திய பிறகே மற்றவர்களுக்குப் பரப்ப வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் மீது பொய் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது பொய்யுரைப்பவன் நிச்சயம் நரகத்தில் நுழைவான்.

அறிவிப்பவர்: அலீ (ரலி)

நூல்: புகாரி106, 107, 1291

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டுபவனை விட அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதுபவனை விட அநீதி இழைத்தவன் யார்? அநீதி இழைத்தோர் வெற்றி பெற மாட்டார்கள். 

(அல்குர்ஆன்:6:21.)

நபியவர்கள் கூறாத பொய்யான கட்டுக் கதைகளைப் பரப்புவது நம்மை நிரந்தர நரகத்தில் தள்ளும் மிகப் பெரும் பாவமாகும். இப்பெரும் பாவத்திற்கு உலைக்களமாகப் பலர் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர் என்பதை நாம் மறுக்க இயலாது. எனவே சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர்கள் செய்தி களைப் பரப்புவதில் மிகவும் பேணுதலாகச் செயல்பட வேண்டும்.

ஆபாசங்கள் மற்றும் வதந்திகளைப் பரப்புதல்

சமூக வலைத்தளங்கள் மூலமாக ஆபாசம் மற்றும் வதந்திகளை சர்வ சாதரணமாகப் பரப்பி வருகின்றனர்.

நடிகர், நடிகைகளின் ஆபாசப் படங்களையும், ஒன்றுமறியாத அப்பாவிகளின் அந்தரங்கங்களைப் படம் பிடித்து அவர்களின் மீது அவதூறுகளைச் சுமத்தி பரப்பி விடுகின்றனர். இதனால் பலர் தற்கொலை செய்துள்ளனர். பல குடும்பங்கள் சீரழிந்துள்ளன. இதுபோன்ற காரியங்களில் ஈடுபடுவர்கள் நிச்சயமாக மறுமையில் இறைத்தண்டனையிலிருந்து தப்பிக்க இயலாது.

தவறையோ, பாவத்தையோ செய்து சம்பந்தமில்லா தவன் மீது அதைச் சுமத்துபவன் அவதூறையும் பகிரங்கமான பாவத்தையும் சுமந்து விட்டான்.

(அல்குர்ஆன்:4:112.)

அன்னை ஆயிஷா (ரலி) மீது அவதூறுச் செய்தி பரப்பப்பட்டது தொடர்பாக திருமறைக் குர்ஆன் பேசுவதைப் பாருங்கள்.

உங்கள் நாவுகளால் அதைப் பரப்பியதை எண்ணிப் பாருங்கள்! உங்களுக்கு அறிவு இல்லாததை உங்கள் வாய்களால் கூறினீர்கள். அதை இலேசானதாகவும் எண்ணிக் கொண்டீர்கள். அதுவோ அல்லாஹ்விடம் பயங்கரமானதாக இருக்கிறது.

(அல்குர்ஆன்:24:15.)

இதைக் கேள்விப்பட்ட போது ‘‘இதைப் பற்றிப் பேசுவது எங்களுக்குத் தகாது. (இறைவா) நீயே தூயவன். இது பயங்கரமான அவதூறு’’ என்று நீங்கள் கூறியிருக்கக் கூடாதா?

(அல்குர்ஆன்:24:16.)

இது போன்ற வதந்திகளையும், ஆபாசமான தகவல்களையும் பரப்புவது கூடாது என அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான்.

நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் ஒருபோதும் இது போன்று மீண்டும் செய்யாதிருக்குமாறு அல்லாஹ் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். வசனங்களை அல்லாஹ் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன். வெட்கக்கேடான செயல் நம்பிக்கை கொண்டோரிடம் பரவ வேண்டும் என விரும்புவோருக்கு இவ்வுலகிலும், மறுமையிலும் துன்புறுத்தும் வேதனை உண்டு. அல்லாஹ்வே அறிகிறான். நீங்கள் அறிய மாட்டீர்கள்.

(அல்குர்ஆன்:24:17, 18, 19.)

அது போன்று சமூக வலைத்தளங்கள் மூலமாக பரிசாகம், கேலி செய்தல், பட்டப் பெயர்களைச் சூட்டி அழைத்தல், குறைகூறுதல் போன்ற காரியங்களையும் பலர் செய்து வருகின்றனர். இதுவும் இஸ்லாம் தடுத்த, தீய பண்புகளில் உள்ளவையாகும். இதன் மூலம் இஸ்லாம் கூறும் சகோதரத்துவம் உடைகின்றது. பகைமை நெருப்பாய் எரிகின்றனது.

நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர் களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.  நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

(அல்குர்ஆன்:48:10, 11.)

இஸ்லாம் தடுத்துள்ள தீய பண்புகளை வளர்ப் பதற்கு சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துவதிலிருந்தும் நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

குடும்ப வாழ்வைச் சீரழிக்கும் சமூக வலைத்தளங்கள்

நவீன உலகில் சமூக வலைத்தளங்களின் தாக்கத்தினால் குடும்ப உறவுகள் சீரழிந்து வருகின்றன.

பெற்றோர் பிள்ளைகள் உறவு, கணவன் மனைவி உறவு,  குடும்பத்தினர் மத்தியிலான அந்நியோன்யம் போன்றவை பாழ்பட்டு வருகிறது.

அதிகமான பெற்றொர்கள் வாட்ஸ்அப்பிலும், பேஸ்புக்கிலும் மூழ்கிக் கிடக்கின்ற காரணத்தினால் குழந்தைகள் பெற்றோர்கள் மூலம் கிடைக்க வேண்டிய அரவணைப்பு இல்லாமல் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர். மன அழுத்தம், பலரோடு கலந்துறவாட வெறுத்து தனிமையில் ஒதுங்குதல், குழந்தையின் வளர்ச்சி மற்றும் மூளை செயல்பாடுகளில் ஏற்படும் குறைகள் (இதனை ஆட்டிசம் என்று குறிப்பிடுவார்கள்) இதுபோன்ற பல பாதிப்புகள் குழந்தைகளுக்கு ஏற்படுகின்றன.

பல பெற்றோர்கள் குழந்தைக்கு உணவூட்டும் நேரத்தில் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கை பார்த்துக் கொண்டே பல மணிநேரம் குழந்தைக்கு உணவூட்டுகின்றனர். குழந்தைகள் சாப்பிடுவதற்கு அடம்பிடித்தால் குழந்தையை அரவணைத்து அன்போடு அமுதூட்ட எரிச்சல்பட்டு  வாட்ஸ்அப் பார்க்கும் ஆர்வத்தில் குழந்தைகளை அடித்துத் திட்டுகின்றனர். பெற்ற பிள்ளைகளுக்கு உணவூட்டுவதை விட்டும் அவர்களை வாட்ஸ்அப் பேஸ்புக் திசைதிருப்பி விடுகிறது.

இன்னும் அதிகமான பெற்றோர்கள் குழந்தைகளின் கைகளில் ஏதாவது விளையாட்டுகள் அல்லது கார்ட்டூன்களை வைத்து பார்க்கக் கொடுத்து விட்டு, பல மணி நேரம் அவர்கள் வாட்ஸ்அப் பேஸ்புக்குகளில் மூழ்கி விடுகின்றனர்.

ஓடி விளையாட வேண்டிய குழந்தை யூடியூபில் கார்ட்டூன் பார்த்தவனாக ஒரு ஓரத்திலும், பெற்றோர்கள் வாட்ஸ்அப் பேஸ்புக்கில் மூழ்கியவர்களாக மறு ஓரத்திலும் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கின்றனர்.

இதனால் பல குழந்தைகள் குழந்தைப் பருவத்திலேயே பள்ளிவாசலுக்குச் செல்லுதல், மதரஸாவிற்குச் செல்தல், ஒழுக்க நடைமுறைகளைக் கற்றல் போன்றவற்றை வெறுப்பவர்களாகவும், கார்ட்டூன்களை அதிகம் நேசிப்பவர்களாகவும் மாறிவிடுகின்றனர்.

குழந்தைகளின் இம்மை மற்றும் மறுமை வாழ்விற்கு மிகப் பெரும் பாதிப்பாக பெற்றோர்களின் இந்தச் செயல்பாடு அமைவதுடன் பெற்றோர்களும் அல்லாஹ்விடம் குற்றவாளிகளாக மாறிவிடுகின்றனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் தன்னுடைய கணவனின் வீட்டிற்கும் அவனுடைய குழந்தைக்கும் பொறுப்புதாரியாவாள். தன்னுடைய பொறுப்பைப் பற்றி அவள் மறுமையில் விசாரிக்கப்படுவாள்.

அறிவிப்பவர்:  அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரி (2554)

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன்:66:6.)

குழந்தைகள் விஷயத்தில் கவனம் செலுத்தாத பெற்றோர்கள் மேற்கண்ட வசனம் மற்றும் நபிமொழியின் பிரகாரம் அல்லாஹ்விடத்தில் குற்றவாளிகளாக ஆகிவிடுவார்கள். எனவே வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்கில் மூழ்கி, குழந்தைகள் விஷயத்தில் போதிய கவனம் செலுத்தாத பெற்றோர்கள் அதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும்.

மேலும் கணவன் மனைவிக்கு மத்தியிலான உறவிலும் இந்த சமூக வலைத்தளங்கள் பெரிய அளவிலான பாதிப்பை உண்டாக்குகின்றன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இவ்வுலகம் (முழுவதும்) பயனளிக்கும் செல்வங்களே; பயனளிக்கும் இவ்வுலகச் செல்வங்களில் மிகவும் மேலானது, நல்ல மனைவியே.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி)

நூல்:முஸ்லிம்  2911

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு  மனிதன்  பெறுகின்ற  பொக்கிஷங்களிலேயே சிறந்த ஒன்றை நான் உனக்கு அறிவிக்கவா? (அவள் தான்)  நல்ல  மனைவியாவாள். கணவன் அவளை நோக்கினால் அவனை மகிழ்விப்பாள்.  அவன் கட்டளை இட்டால் கட்டுப்படுவாள். அவன் அவளிடம் இல்லாமல் இருக்கும்  போது (தன்னுடைய) கற்பை அவனுக்காகப் பாதுகாத்துக் கொள்வாள்.

அறிவிப்பவர்: உமர் (ரலீ)

நூல்: அபூதாவூத் 1412

மேற்கண்ட நபிமொழிகள் நல்லொழுக்கமுள்ள மனைவியின் இலக்கணத்தை எடுத்துரைக்கின்றன. கணவன் நோக்கும் போது அவனை மகிழ்விப்பதும், அவன் கட்டளையிட்டால் கட்டுப்படுவதும் நல்லொழுக்கமுள்ள மனைவியின் இலக்கணமாகும்.

ஆனால் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்குகள் இதற்கு உலை வைக்கின்றன. அதிகமான பெண்கள் வெளியிலிருந்து சோர்வாக வீடு திரும்பும் கணவனுடன் ஆசையுடன் உரையாடாமல் வாட்ஸ்அப்பில் தோழிகளுடனும் வேறு யார் யாருடனோ உறவாடிக் கொண்டுள்ளனர்.

இதனால் கணவனுடைய உள்ளத்தில் மனைவியைப் பற்றிய வெறுப்புணர்வு ஏற்படுகின்றது. மனைவியின் மீது சந்தேகமும், கணவனுக்கு நிம்மதியும் இல்லாமல் வாழ்க்கையே வெறுப்பானதாக மாறிவிடுகிறது.

கணவன் உணவருந்தும் நேரத்தில் அவர் என்ன விரும்புகின்றார் அவருக்கு என்ன தேவை என்பதைக் கவனிக்காமல் செல்போன்களின் வண்ணத்திரையில் நிலைகுத்தி விடுகின்றனர். அது போன்று கணவன்மார்களின் நிலையையும்  சொல்ல வேண்டியதில்லை.

‘‘முஃமின்களில் முழுமையானவர் குணத்தால் அழகானவரே! உங்களில் சிறந்தவர் தம் மனைவியிடம் குணத்தால் சிறந்தவராக இருப்பவரே!’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: திர்மிதி (1082)

அழகிய கணவனின் உதாரணத்தை மேற்கண்ட நபிமொழி எடுத்துரைக்கின்றது. ஆனால் இன்றைய நிலையில் ஆசையுடன் காத்திருக்கும் மனைவியுடன் உரையாடாமல் பேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் அதிகமானோர் தேவையற்ற உறவுகளை வளர்த்துக் கொள்கின்றனர்.

ஒருவரோடு ஒருவர் கலந்த உறவு என கணவன் மனைவி உறவை திருமறைக் குர்ஆன் குறிப்பிடுகிறது. ஆனால் வாட்ஸ்அப் மற்றும் பேஸ்புக்குகள் கணவன் மனைவியை ஒருவரை விட்டும் ஒருவரைப் பிரிந்த உறவுகளாக மாற்றிவிட்டது. ஆளுக்கொரு செல்போனை வைத்துக் கொண்டு ஊமைகளாக ஒரே அறையில் ஒதுங்கிக் கிடக்கின்றனர்.

கணவனின் அன்பிற்கும், ஆறுதலான பேச்சுக்கும் ஏங்கும் மனைவி அது கிடைக்காத போது கணவன் மீது வெறுப்புகின்றாள். இதனால் குடும்ப வாழ்வில் பல்வேறு விதமான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. சில சூழ்நிலைகளில் இது விவாகரத்து வரை கொண்டு சென்று விடுகின்றது.

சமூக வலைத்தளங்கள் என்பது கத்தியைப் போன்றதாகும். அதனை முறையாகப் பயன் படுத்தினால் அதன் மூலம் பல பயன்களை நாம் அடைந்து கொள்ளலாம். அதனை முறையற்றுப் பயன்படுத்தினால் அது நமக்கு மிகப் பெரிய பாதிப்புகளையே ஏற்படுத்தும்.

எனவே சமூக வலைத்தளங்களை முறையாகப் பயன்படுத்தி இம்மையிலும் மறுமையிலும் வெற்றிக்குரிய வழியைத் தேடுவோமாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed