இஸ்லாம் கொடிய மார்க்கமல்ல! எளிய மார்க்கமே!

தீவிரவாதம் என்றால் அது திருப்பி விடப்படுவது இஸ்லாத்தை நோக்கித் தான்! பயங்கரவாதம் என்றால் பார்க்கப்படுவது இஸ்லாம் தான்! சுருங்கக் கூறின் இஸ்லாம் ஒரு கொடிய மார்க்கம் என்று ஊடகங்கள் சித்தரித்துக் கொண்டிருக்கின்றன.

உண்மையில் இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வாழ்க்கையை உன்னிப்பாகக் கவனிப்பவர்கள் அறிந்து கொள்ளலாம்.

தொழுகைக்கான பள்ளிவாசலில் சிறுநீர் கழித்த ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் நடந்து கொண்ட விதத்தைப் பாருங்கள்.

ஒரு கிராமவாசி பள்ளிவாச-ல் சிறுநீர் கழித்து விட்டார்.  உடனே மக்கள் அவரைப் பிடித்தனர்.  நபி (ஸல்) அவர்கள், “அவரை விட்டு விடுங்கள். அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளி தண்ணீரை ஊற்றி விடுங்கள்.  நீங்கள் நளினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக அனுப்பப்பட்டுள்ளீர்கள்.  கடினமாக எடுத்துச் சொல்பவர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி); நூல்: புகாரி 220

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இங்கு எளிமையைப் போதிக்கிறார்கள்; இனிமையைப் போதிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்த போது ஒரு மனிதர் தாறுமாறாக நடந்து கொள்கிறார். தொழுது முடித்ததும் தன்னை நபி (ஸல்) அவர்கள் கடுமையாகத் தண்டிக்கப் போகிறார்கள் என்று எதிர்பார்க்கிறார். ஆனால் அவரது எதிர்பார்ப்புக்கு மாற்றமாக, நபியவர்களின் இதமான பேச்சில் தன்னையே பறி கொடுக்கிறார்; அன்னாரைப் பார்த்து பரவசப்பட்டு நிற்கிறார்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருக்கும் போது கூட்டத்தில் ஒருவர் தும்மினார்.  உடனே நான், “யர்ஹமுகுமுல்லாஹ் – அல்லாஹ் உங்களுக்கு அருள் செய்வானாக’ என்று சொன்னேன்.  உடன் மக்கள் என் மீது தங்கள் பார்வைகளைச் செலுத்தினர். 

“(உங்கள்) தாய் தொலைந்து போகட்டும்!  உங்கள் செய்தி என்ன? என்னையே பார்க்கிறீர்களே!” என்று நான் கேட்டேன்.  அதற்கு நபித்தோழர்கள் என்னை (கண்டிக்கும் விதமாக) தங்கள் தொடைகளில் கைகளால் அடித்துக் காட்டினர்.  அவர்கள் என்னைப் பேசாமல் இருக்கச் சொல்கிறார்கள் என்று அறிந்து மவுனமாகி விட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் (கடுமையாகப் பிடிப்பார்கள் என்று நினைத்தேன்) என் தாயும் தந்தையும் அவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்.  அவர்களை விட அழகிய முறையில் போதிக்கும் ஓர் ஆசிரியரை அவர்களுக்கு முன்னரும் பின்னரும் நான் கண்டதே இல்லை.  அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னை அரற்றவில்லை;  என்னை அடிக்கவில்லை;  என்னை ஏசவுமில்லை. 

“நிச்சயமாக இது தொழுகை!  இதில் மக்கள் பேச்சு எதுவும் பேசுதல் முறையாகாது.  நிச்சயமாக தொழுகை என்பது இறைவனைத் துதித்தல், அவனைப் பெருமைப்படுத்துதல், குர்ஆன் ஓதுதல் ஆகியவை மட்டும் அடங்கியதாகும்” என்று கூறினார்கள். (ஹதீஸின் சுருக்கம்)

அறிவிப்பவர்: முஆவியா பின் ஹகம்(ரலி); நூல்: முஸ்லிம் 836

இங்கும் நபி (ஸல்) அவர்களின் எளிய அணுகுமுறையைக் கண்டு வியந்து நிற்கிறோம்.

“நபி (ஸல்) அவர்கள் மீது மரணம் உண்டாகட்டும்’ என்று யூதர்கள் தங்கள் வெறுப்பை அள்ளிக் கொட்டுகின்றனர். அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் காட்டிய நளினமான, இனிய நடைமுறையைப் பாருங்கள்.

யூதர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் நேரட்டும்)” என்று (முகமன்) கூறினர். உடனே நான், “(அது) உங்களுக்கு நேரட்டும். மேலும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து உங்களை அப்புறப்படுத்தி, உங்கள் மீது அல்லாஹ் கோபம் கொள்ளட்டும்” என்று (அவர்களுக்குப் பதில்) சொன்னேன்.

(அப்போது) நபி (ஸல்) அவர்கள், “ஆயிஷா! நிதானம்! நளினமாக நடந்து கொள். மேலும் வன்மையுடன் நடந்து கொள்வதிலிருந்தும் அருவருப்பாகப் பேசுவதிலிருந்தும் உன்னை நான் எச்சரிக்கிறேன்” என்று சொன்னார்கள்.

அப்போது நான், “அவர்கள் சொன்னதை நீங்கள் செவியேற்க வில்லையா?” என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீ கேட்கவில்லையா? (வஅலைக்கும் – அவ்வாறே உங்கள் மீது உண்டாகட்டும் என்று) அவர்களுக்கு நான் பதிலளித்து விட்டேன்.

அவர்களுக்காக நான் செய்த பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப்படும். எனக்காக அவர்கள் செய்த பிரார்த்தனை ஏற்றுக் கொள்ளப் படாது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி); நூல்: புகாரி 6030

இப்போது சொல்லுங்கள்! இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டதா? அல்லது நற்குணங்களால் பரப்பப்பட்டதா? இஸ்லாம் ஒரு கொடிய மார்க்கமா? அல்லது எளிய மார்க்கமா? என்பதைப் புரிந்து கொள்ள இது போன்ற ஏராளமான சம்பவங்களை நபி (ஸல்) அவர்களின் வாழ்விலிருந்து நாம் எடுத்துக் காட்ட முடியும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed