இஸ்லாம் கூறும் சமூக ஈடுபாடு

இந்த உலகில் உயிரோடு படைக்கப்பட்ட எல்லா உயிரினங்களும், தன்னை சுற்றி வாழும் மற்ற உயிரினங்கள் மீது ஏதோ ஒரு விதத்தில் அக்கறை கொள்ளக் கூடியதாகத்தான் படைக்கப்பட்டுள்ளன. மனிதர்களின் பார்வையில் அக்கறை என்பது இரண்டு விதமாகப் பார்க்கப்படுகிறது. ஒன்று “என் குடும்பத்தார்கள், என் உறவினர்கள், என் நண்பர்கள்” என்ற சுயநலம் கலந்த சுயநல அக்கறையாகும்.

மற்றொன்று சமூகம் தவறான வழியில் தன் பயணத்தைத் துவக்கும் பொழுது “என் நாட்டவர், என் சமூகத்தார்” என்று கூறும் சுயநலமில்லா பொதுநலம் கொண்ட சமூக அக்கறையாகும். இவ்விரண்டில் சுயநல அக்கறை என்பது எல்லா மனிதர்களிடத்திலும் ஒரு குறிப்பிட்டக் காலகட்டத்தில் தானாக உருவெடுத்துவிடும்.

ஆனால் சமூக அக்கறை என்பது குறிப்பிட்ட சில நபர்களை தவிர எல்லா நபர்களிடத்திலும் தானாக வருவதில்லை. எனவே இஸ்லாமிய மார்க்கம் இந்த உலக மாந்தர்களுக்கு சமூக அக்கறையை எந்த அளவிற்கு வலியுறுத்துகிறது என்பதையும், அதை நாம் கடைப்பிடித்தால் ஏற்படும் விளைவுகளையும் நாம் அறிந்து கொள்வோம்..

சமூக அக்கறையாளர்களை உருவாக்கும் இஸ்லாம்

உலகம் படைக்கப்பட்ட நாள் முதல், மனிதகுலத்திற்குச் சீரான வழியை காட்டக்கூடியதாகவும், மாபெரும் ஒரு அருட்கொடையாகவும் இறைவன் தனது தூதர்கள் மூலமாக தந்ததுதான் இந்த மார்க்கம். அந்த மார்க்கம் குறித்து இறுதித் தூதர் (ஸல்) அவர்கள் மிக அழகாகவும், ரத்தினச் சுருக்கமாகவும் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள், “இந்த (இஸ்லாமிய) மார்க்கம் என்பது பிறர் நலம் நாடக்கூடியது” என்று சொன்னார்கள். அப்போது நாங்கள், யாருக்கு? என்று கேட்டோம். அதற்கு அவர்கள், “இறைவனுக்கும் அவனது தூதருக்கும் முஸ்லிம் சமுதாயத்தின் தலைவர்களுக்கும் பொது மக்களுக்கும் (நலம் நாடுவது)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: தமீமுத்தாரி (ரலி)

நூல்: முஸ்லிம் 205

நபி (ஸல்) அவர்கள் இந்த மார்க்கத்தைக் குறித்து, பிறர் நலம் நாடக்கூடியது என்று அறிமுகப் படுத்துகிறார்கள். அப்போது நபிகளாரின் தோழர்களில் சிலர் யாருக்கு நலம் நாடவேண்டும்? என்று கேட்கிறார்கள். அப்போது நபிகள் நாயகம் அவர்கள் கூறும் பட்டியலில் பொதுமக்களையும் இணைத்துச் சொல்கிறார்கள். இந்தப் பொன்னான நபிமொழியிலிருந்து பொதுமக்களுக்கு நலம் நாடக்கூடிய சமூக அக்கறையாளர்களைத் தான் இஸ்லாம் உருவாக்குகிறது என்பது நமக்கு தெளிவாகத் தெரிகிறது.

மரணத்திற்கு பின்பும் சமூக அக்கறைகொண்ட நல்லடியார்

இறைவன் தன் வேதத்தில் ஒரு ஊராரிடத்தில் மூன்று தூதர்களை ஒன்றன்பின் ஒன்றாக அனுப்பியதையும், அவர்களை ஏற்றுக் கொள்ள மக்கள் மறுத்த நிலையில் ஒருவர் கடைக்கோடியிலிருந்து விரைந்து வந்து இறைவனை நம்பிக்கை கொண்டதையும், அவரை அக்கூட்டத்தார் கொலை செய்த காரணத்தால் அவருக்கு இறைவன் வழங்கும் பரிசுகளைப் பற்றியும், அவர் தன் மரணத்திற்குப் பின்னால் தன் சமூகத்தார் மீது கொண்ட அக்கறையின் வெளிப்பாட்டையும், யாஸீன் என்ற அத்தியாயத்தில் படம்பிடித்துக் காட்டுகிறான். அதை பாருங்கள்.

அந்நகரத்தின் கடைக்கோடியிலிருந்து ஒருவர் விரைந்து வந்து “என் சமுதாயமே! தூதர்களை பின்பற்றுங்கள்! உங்களிடம் கூலியைக் கேட்காத நேர்வழி பெற்றோரைப் பின்பற்றுங்கள் என்னை படைத்தவனை நான் எப்படி வணங்காதிருக்க முடியும்? அவனிடமே திரும்ப நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். அவனன்றி வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொள்வேனா? அளவற்ற அருளாளன் எனக்கு ஒரு தீங்கை நாடிவிட்டால் அவர்களின் பரிந்துரை எனக்கு எந்தப் பயனையும் அளிக்காது.

அவர்கள் என்னைக் காப்பாற்றவும் மாட்டார்கள். அப்போது நான் பகிரங்கமான வழிகேட்டில் ஆவேன். நான் உங்கள் இறைவனை நம்பி விட்டேன். எனக்கு செவிசாயுங்கள்” என்று கூறினார்.

சொர்க்கத்திற்கு செல்” என்று (அவரிடம்) கூறப்பட்டது. அதற்கவர், “என் இறைவன் என்னை மன்னித்ததையும் மரியாதைக்குரியோரில் என்னை ஆக்கியதையும் எனது சமூதாயத்தினர் அறிந்து கொள்ளக்கூடாதா?” என்றார்.

(அல்குர்ஆன்:36:20-27)

பொதுவாக நாம் அளவுகடந்து விரும்பும் விஷயங்களை நாம் அடைந்து விட்டோமேயானால் உண்மை நிலை தெரியாமல் மெய்மறந்து போய்விடுவோம். ஆனால் தன்னைக் கொலை செய்த கூட்டமாக அந்த மக்கள் இருந்தும் கூட அவர் இறைவனின் மன்னிப்பையும் மகத்தான கூலிகளையும் பார்த்ததற்குப் பின்னால் இதுபோன்ற பரிசுகளை அவர்களும் பெறவேண்டுமே!

ஆனால் அது சாத்தியமற்ற விஷயமாக மாறிவிட்டதே! என்று வருத்தப்படுகிறார் அந்த நல்லடியார். அப்படியானால் எந்த அளவிற்கு அவருடைய உள்ளத்தில் சமூக அக்கறை ஆழமாகப் பதிந்து இருக்கும் என்பதை சற்றுச் சிந்திக்கத் தான் வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) நமது உயிரை விட மேலாக நாம் மதிக்கக்கூடிய நபி (ஸல்) அவர்களிடத்தில் சமூக அக்கறை அளவுகடந்து இருந்ததை நாம் அறிவோம் அதை அல்லாஹ் குர்ஆனிலும் வர்ணித்து கூறுகிறான்.

உங்களிடம் உங்களை சார்ந்த தூதர் வந்து விட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்கு பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவராக இருக்கிறார். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும் இரக்கமும் உடையவர்.

(அல்குர்ஆன்:9:128)

மேற்கூறப்பட்ட இந்த வசனத்தைப் பிரதிபலிக்கும் விதமாக நபிகளாரின் வாழ்வில் பல சம்பவங்கள் இருந்தாலும் சுருக்கத்தைக் கவனத்தில் கொண்டு ஒரே ஒரு சம்பவத்தை மட்டும் நாம் குறிபிடுகிறோம்.

நபி(ஸல்) அவர்கள், ‘நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்து விட்டேன். அவர்களால் நான் சந்தித்த துன்பங்களிலேயே மிகக் கடுமையானது ‘அகபா (தாயிஃப்) உடைய நாளில் சந்தித்த துன்பமேயாகும்.

ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் இப்னி அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்குப் பதிலளிக்கவில்லை.

எனவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். ‘கர்னுஸ் ஸஆலிப்’ என்னுமிடத்தை நான் அடையும் வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை. அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன். அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழலிட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல்(அலை) அவர்கள் இருந்தார்கள்.

அவர்கள் என்னை அழைத்து, ‘உங்கள் சமுதாயத்தாரிடம் நீங்கள் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அளித்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்களிடம் அனுப்பியுள்ளான்’ என்று கூறினார்கள்.

உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு மீது சலாம் சொல்லி, பிறகு, ‘நபியே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரண்டு மருங்கிலுமுள்ள) இந்த இரண்டு மலைகளையும் அவர்களின் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)’ என்று கூறினார்.

உடனே, ‘(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்களின் சந்ததிகளில் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை அல்லாஹ் உருவாக்குவான் என்று நம்புகிறேன்’ என்று சொன்னேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 3231

இச்சம்பவத்தில் தனது சுயநினைவை இழக்குமளவிற்குக் கடுமையான பாதிப்பிற்கு நபி (ஸல்) அவர்கள் ஆளாகிறார்கள். அதன் காரணத்தினால் தான் இறைவனாக முன்வந்து நபிகளாரின் பாதிப்பிற்கு நிவாரணம் அளிப்பதற்காக அக்கூட்டத்தாரின் முடிவை நபியின் கைவசம் ஒப்படைத்து மலைகளை நிர்வகிக்கும் வானவர்களை அனுப்புகிறான்.

அந்தச் சூழ்நிலையில் கூட நபி (ஸல்) அவர்கள் சமூக அக்கறை கொண்டதால் தொலைநோக்குப் பார்வையோடு, அவர்களின் சந்ததிகள் ஏகத்துவக் காற்றை சுவாசிப்பார்கள் என்பதை யோசித்தார்கள். அன்று நபிகளாரின் சமூக அக்கறையின் வெளிபாடுதான் இன்று தாயிஃப் நகரம் தவ்ஹீத் நகரமாக மாறியுள்ளது. அல்ஹம்துலில்லாஹ்.

இதே சமூக அக்கறை இன்றைய காலத்தில் நம்முடைய ஒவ்வொரு ஊர்களிலும் மாவட்டங்களிலும் மாநிலங்களிலும் நாடுகளிலும் வெளிபட்டால் இந்த உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் ஏகத்துவம் முழங்கப்படும் இன்ஷா அல்லாஹ்!

உலகளாவிய சூழ்ச்சிகளை முறியடிக்க…

மனிதநேயத்தை போதிப்பதில் தலையாய மார்க்கமான இஸ்லாத்தைக் கடைபிடிக்கக்கூடிய முஸ்லிம்களுக்கு எதிராக, முஸ்லிம் என்றாலே தீவிரவாதி என்ற பொய் பிரச்சாரம் உலகளாவிய அளவில் நடைபெற்று வருகிறது. இனியும் நடைபெறும். குறிப்பாக நம் இந்தியாவில், நாம் வெள்ளையனிடமிருந்து விடுதலை பெற்ற நாளிலிருந்து இன்று வரைக்கும் பல சூழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

அதன் வெளிப்பாடுதான் “நீ முஸ்லிமா? பாகிஸ்தானுக்குப் போ” என்ற கோஷம் முழங்கப்படுகிறது. இப்படிப் பல ஆண்டுகளாக நடந்து வரும் சூழ்ச்சிகளைத் தவிடுபொடியாக்கியது எது? கடந்த 2015, டிசம்பர் மாதம் தமிழகத்தைப் புரட்டிப் போட்ட வெள்ளம். அதையொட்டி சமுதாய மக்கள் மீது ஏற்பட்ட முஸ்லிம்களின் சமூக அக்கறை! சங் பரிவார்களின் பல ஆண்டு சூழ்ச்சிகளை சில நாட்கள் செய்த சமூகப் பணிகள் முகவரி இல்லாமல் ஆக்கி விட்டதே! அந்தச் சமூக அக்கறை அன்றாடம் நம்மிடத்தில் இருந்தால்?

கண்ணியத்திற்குரிய இறைவனின் அடியார்களே! இந்த உலகத்தில் பல கொள்கை, கோட்பாடுகள் இருந்தாலும் இஸ்லாம் மட்டும் தான் சமூக அக்கறையை போதிக்கக் கூடிய மார்க்கமாக இருக்கிறது. எனவே, இஸ்லாத்தைப் பின்பற்றும் நாமும் அதைக் கடைப்பிடித்து பிற மக்களுக்கும் எடுத்துரைக்கக் கூடிய மக்களாக நாம் மாற வேண்டும். அப்படி ஒரு மாற்றம் நம்மிடம் ஏற்பட்டால் நாம் நினைக்கின்ற மாற்றங்களைச் செய்ய முடியும், இன்ஷா அல்லாஹ்!

தம்மிடம் உள்ளதை ஒரு சமுதாயம் மாற்றி கொள்ளாத வரை அச்சமுதாயத்தில் உள்ளதை அல்லாஹ் மாற்றமாட்டான்.

(அல்குர்ஆன்:13:11)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *