*ஸஃபர் மாதம் பீடை மாதமா?*

——————————————

*இஸ்லாமிய மார்க்கம் பகுத்தறிவு மார்க்கமாகும்.

சகுனம், ஜோதிடம், நல்ல நாள் கெட்ட நாள் பார்த்தல் போன்ற காரியங்களை வேறு எந்த மார்க்கமும் தடுக்காத அளவுக்கு இஸ்லாம் தடை செய்துள்ளது.*

ஆனால் இஸ்லாத்தில் தடுக்கப்பட்ட இந்தக் காரியங்களை *முஸ்லிம்களே பால் கிதாபு, பார்வை பார்த்தல்* என்ற பெயர்களில் செய்து வருகின்றனர்.

இது போன்று இஸ்லாத்திற்கு முரணாக, முஸ்லிம்கள் செய்யும் காரியங்களில் ஒன்று தான் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதம் என்று கருதுவதாகும்.

பீடை மாதம் கிடையாது என்பதை உணர்த்தும் வண்ணமாக, ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார்கள்.

*ஜாஹிலிய்யா காலத்தில் வாழ்ந்த மக்கள் ஸஃபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதினார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு நினைப்பது தவறு* என்று கூறினார்கள்.

நூல்:அபூதாவூத் 2545

ஸஃபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதுவதற்கு மார்க்கத்தில் எந்த ஆதாரமும் இல்லை. மாறாக ஸஃபர் மாதத்தைப் பீடை மாதமாகக் கருதக் கூடாது என்று தான் உள்ளது.

*தொற்று நோயும், பறவைச் சகுனமும், ஸஃபர் பீடை என்பதும் கிடையாது* என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 5707, 5717

ஸஃபர் மாதம் வந்து விட்டால் அதில் சோதனைகளும், குழப்பங்களும் அதிகமாகிவிடும் என நம்பி அதைப் பீடை பிடித்த மாதமாக அன்றைய மக்கள் கருதினர். இந்த மூட நம்பிக்கையை ஒழிக்கும் வகையில் நபி (ஸல்) அவர்கள் ஸபர் என்பது இல்லை என்று கூறினார்கள்.

*காலத்தை நல்ல காலம், கெட்ட காலம் என்று பிரிப்பது தவறாகும்.*

உலகில் ஏற்படும் விளைவுகள் ஆட்களைப் பொருத்துத் தான் இறைவனால் தீர்மானிக்கப்படுமே தவிர நாட்களைப் பொருத்து அல்ல.

எல்லா மனிதர்களுக்கும் நன்மை மட்டுமே தருகின்ற எந்த நாளும் உலகில் இல்லை. எல்லா மனிதர்களுக்கும் தீமை செய்யும் ஒரு நாளும் உலகில் இல்லை.

அல்லாஹ் படைத்திருக்கக்கூடிய இந்த நாட்களை நல்ல நாள் கெட்ட நாள் என்று கூறுவது அல்லாஹ்வைக் குறை கூறுவதாகும்.

*ஆதமுடைய மகன் என்னை நோவினை செய்கின்றான். நானே காலமாக இருக்க அவன் காலத்தைத் திட்டுகின்றான். என் கையிலே ஆட்சியுள்ளது. இரவு பகலை நானே புரட்டி வருகிறேன்* என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா

நூல்: புகாரி 4826

எனவே நாட்களை நாம் *தீய நாட்கள் என்று பிரிப்பது இறைவனின் அதிருப்திக்குரிய செயலாகும்.*

நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் எண்ணற்ற துன்பங்கள் ஏற்பட்டது. யாரும் அனுபவிக்காத அளவுக்குப் பல துயரங்களுக்கு ஆளானார்கள். என்றைக்காவது நபி (ஸல்) அவர்கள் தன்னைப் பிடித்த பீடை நீங்குவதற்காக கடற்கரைக்கோ அல்லது புல் மிதிப்பதற்கோ சென்றார்களா என்றால் இல்லை.

*அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை*. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 10:107)

*பீடை நாள் என்று கருதி நாம் எங்கு சென்றாலும் நமக்கு வர வேண்டிய துன்பம் வந்தே தீரும். அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அதை நீக்க முடியாது* என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

*எனவே பீடை என்பது கிடையாது. நன்மை தீமை அனைத்தும் இறைவனின் விதிப்படியே நடைபெறுகின்றது.*

_____________

*ஏகத்துவம்*

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed