இஸ்லாத்தை அழிக்க முடியாது

இன்றைக்கு உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கு எதிராக மட்டுமே ஏராளமான சூழ்ச்சிகள் செய்யப்படுகின்றன. முஸ்லிம்கள் மட்டுமே குறி வைத்து தாக்கப்படுகிறார்கள். எனினும், அல்லாஹ் இஸ்லாம் எனும் இந்த ஜோதியை ஒருகாலும் யாராலும் அழிக்க முடியாது என்று சூழுரைக்கிறான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் எனக்கு பூமியைச் சுருட்டிக் காண்பித்தான். அதில் சூரியன் உதிக்குமிடங்களையும் அது மறையுமிடங்களையும் கண்டேன். என்னிடம் சுருட்டிக் காட்டப்பட்ட அந்தப் பகுதிகளை எனது சமுதாயத்தின் ஆட்சி சென்றடையும். நான் தங்கம், வெள்ளிச் சுரங்கங்கள் வழங்கப்பட்டிருந்தேன். (இதைக் கண்ட பின்) “எனது சமுதாயத்தைப் பெரும் பஞ்சத்தின் மூலம் அழித்து விடாதே! என் சமுதாய மக்களின் ஆட்சி அதிகாரத்தை அழித்தொழிக்கும் எந்த ஒரு பிற சமுதாய எதிரியையும் அவர்கள் மீது சாட்டி விடாதே!” என்று என் சமுதாயத்திற்காக என் இறைவனிடம் துஆச் செய்தேன்.

“முஹம்மதே! நான் ஒரு விவகாரத்தில் முடிவு செய்து விட்டால் அது நிச்சயமாக மாற்றப்படாது. நான் உமது சமுதாயத்திற்காக (நீர் கேட்டவற்றை) உமக்கு வழங்குகின்றேன். நான் உமது சமுதாய மக்களை பெரும் பஞ்சத்தின் மூலம் அழிக்க மாட்டேன். உமது சமுதாய மக்களின் ஆட்சியதிகாரத்தை அழித்தொழிக்கும் எந்த ஒரு பிற சமுதாயத்து எதிரியையும் அவர்கள் மீது சாட்ட மாட்டேன். அந்த எதிரிகள் இப்பூமியின் எந்தப் பாகங்களில் அணி திரண்ட போதிலும் சரியே! உமது சமுதாய மக்களில் ஒருவர் இன்னொருவரை அழித்து, ஒருவர் இன்னொருவரை சிறைப் பிடிக்கும் நிலைக்குச் செல்லாத வரை! (இந்த உத்தரவாதம் நீடிக்கும்)” என்று என்னுடைய இறைவன் கூறினான்.

அறிவிப்பவர்  : ஸவ்பான் (ரலி),

நூல் : முஸ்லிம் 5144

இந்தச் சமுதாயத்தை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது என்று அல்லாஹ் தனது தூதருக்கு வாக்களித்திருக்கும் போது எப்படி புஷ், பிளேர் போன்ற கொடுங்கோலர்கள் ஈராக்கில் அத்துமீறி நுழைந்து நம் மக்களை அழிக்கத் துணிந்தார்கள்? இங்கு தான் அல்லாஹ் விதித்த அந்த நிபந்தனை குறுக்கிடுகின்றது.

ஆம்! ஓர் ஆப்கானிஸ்தான் அழிந்தது எனில், ஒரு பாகிஸ்தான் களம் அமைத்துக் கொடுத்தது. அதனால் ஆப்கான் இஸ்லாமிய அரசை இவர்களால் வீழ்த்த முடிந்தது. இப்போது இராக் அருகில் இருக்கும் முஸ்லிம் நாடுகள் வான்வழி, தரைவழி, கடல்வழி என்று மூன்று வழிகளின் வாசல்களைத் திறந்து விட்டதால் தான் அமெரிக்க, பிரிட்டானிய வெறி நாய்கள் – வேட்டை நாய்கள் உள்ளே நுழைந்து வேட்டு வைக்க முடிந்தது. இல்லையெனில் இந்த வெறிநாய்கள் அமெரிக்காவிலும், பிரிட்டனிலும் கிடந்து குரைத்துக் கொண்டு மட்டுமே இருந்திருக்கும்!

ஏன் இந்த முஸ்லிம் நாடுகள் இந்த வன விலங்குகளுக்கு வழி திறந்து விட்டன? அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் சொல்கின்றார்கள்.

“உணவு உண்பவர்கள் தங்களது தட்டின் பக்கம் அழைப்பது போல் ஒவ்வொரு திக்கிலிருந்தும் பிற சமுதாயங்கள், உங்களில் ஒருவர் இன்னொருவரைக் கொன்றிட அழைத்திடும் கட்டம் வரும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். “அன்றைய தினம் நாங்கள் சிறுபான்மையாக இருப்போம் என்பதாலா?” என்று ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அந்நாளில் நீங்கள் பெரும்பான்மையாகவே இருப்பீர்கள். எனினும் வெள்ளத்தில் மிதந்து செல்லும் நுரையைப் போன்று ஆகி விடுவீர்கள். உங்கள் விரோதியின் உள்ளங்களிலிருந்து (உங்களைப் பற்றிய) அச்சம் கழன்று விடும்! உங்களுடைய உள்ளங்களில் அல்லாஹ் “வஹ்னை’ ஏற்படுத்தி விடுவான்” என்று பதிலளித்தார்கள். “அல்லாஹ்வின் தூதரே! வஹ்ன் என்றால் என்ன?” என்று நாங்கள் கேட்டோம். “உலகத்தை நேசிப்பது, மரணத்தை வெறுப்பது” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்  : ஸவ்பான் (ரலி),

 நூல் : அஹ்மத் (21363)

நபி (ஸல்) அவர்களின் இந்த ஹதீஸ் இன்றைய முஸ்லிம் நாடுகளின் நிலையைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகின்றது. வளைகுடா நாடுகளை இந்த “வஹன்’ வளைத்து நிற்கின்றது. அதாவது முஸ்லிம்களின் உள்ளங்களில் உலக மோகமும், உயிர் மோகமும் குடிகொண்டு விட்டது. அதனால் தான் இந்த நாடுகள் எங்கோ உள்ள அமெரிக்க, பிரிட்டன் நாடுகளிடம் மண்டியிட்டுக் கிடக்கின்றன! இது அமெரிக்க, பிரிட்டன் வெறி நாய்களின் உள்ளங்களில் தெம்பை அளித்துள்ளது. அதன் பயனாய் இன்று இராக்கில் முஸ்லிம்கள் எரிந்து சாம்பலாகிக் கொண்டிருக்கின்றனர்.

முஸ்லிம்களாகிய நாம் ஓர் ஆட்சியின் குடிமக்களாக இருந்தாலும் சரி! அதில் ஆளுபவர்களாக இருந்தாலும் சரி! மரணத்தைக் கண்டு அஞ்சினோம் என்றால் இந்த உலகம் நம் தலை மேல் விழும் நெருப்பாகும். மரணம் நம்மைக் கண்டு அஞ்சினால் இந்த உலகம் நமது காலில் விழும் செருப்பாகும். இதை மனதில் கொள்வோம்! மரண பயத்தைக் கொல்வோம்! மறுமையை வெல்வோம்!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed