*இஸ்லாத்தில் தொற்று நோய் உண்டா..❓**கொரோனா வைரஸ் தொற்று நோய் தானே..❓*
கொரோனா வைரஸ் மட்டுமல்லாது பல்வேறு நோய்களுக்குக் வைரஸ்கள் காற்றிலோ, தண்ணீர் மூலமாகவோ அல்லது வேறு ஏதேனும் வகையிலோ பரவுவது அறிவியல் ரீதியில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், தொற்று நோய் கிடையாது. ஸஃபர் பீடை கிடையாது. ஆந்தையால் சகுனம் பார்ப்பதும் கிடையாது என்று கூறினார்கள்.**அப்போது கிராமவாசி ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! மணலில் மான்களைப் போன்று (ஆரோக்கியத்துடன் துள்ளித்) திரியும் என் ஒட்டகங்களிடம் சிரங்கு பிடித்த ஒட்டகம் வந்து அவற்றுக்கிடையே கலந்து அவற்றையும் சிரங்கு பிடித்தவையாக ஆக்கி விடுகின்றனவே! அவற்றின் நிலை என்ன? என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், அப்படியென்றால் முதல் ஒட்டகத்திற்கு (அந்த நோயைத்) தொற்றச் செய்தது யார்? என்று திருப்பிக் கேட்டார்கள்.*
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 5717
இந்த ஹதீஸில் தொற்று நோய் கிடையாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.
ஆனால் ஒரு ஒட்டகத்திலிருந்து மற்றொரு ஒட்டகத்திற்கு சிரங்கு தொற்றிக் கொள்வதை அனுபவப்பூர்வமாக உணர்ந்த ஒரு கிராமவாசி அது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேள்வி எழுப்புகின்றார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அளிக்கும் பதில் இங்கு கவனிக்கத்தக்கதாகும்.
முதல் ஒட்டகத்திற்கு அந்த நோயைத் தந்தவன் யார்? என்ற வாதத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முன் வைக்கின்றார்கள்.
இதன் மூலம் தொற்று நோய் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரேயடியாக மறுக்காமல், தொற்று நோயைக் காரணம் காட்டி, இறைவனுடைய விதியை மறுத்து விடக் கூடாது என்பதை உணர்த்துகின்றார்கள்.
ஒருவருக்கு நோய் ஏற்படுகின்றது என்றால் அது இறைவனின் நாட்டப்படியே ஏற்படுகின்றது என்ற நம்ப வேண்டும்.
ஒருவரிடமிருந்து மற்றவருக்கு நோய் தொற்றும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மறுக்கவில்லை. தொற்றுவதால் மட்டுமே நோய் ஏற்படுகிறது என்பதைத் தான் மறுக்கின்றார்கள். முதல் ஒட்டகத்துக்கு நோயைக் கொடுத்தவன் யார் என்று கேள்வி எழுப்பியதன் மூலம் முதன் முதலில் ஒருவருக்கோ சிலருக்கோ இறைவன் நோயை ஏற்படுத்துகிறான். அதன் மூலம் மற்றும் சிலருக்கு பரவச் செய்கிறான் என்று தெளிவுபடுத்துகிறார்கள்.
நடைமுறையிலும் இதை நாம் அனுபவப் பூர்வமாக உணர்கிறோம்.
குறிப்பிட்ட ஒரு நோய் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்துகிறது. பின்னர் அந்த நோய் உலகில் யாருக்கும் ஏற்படுவதில்லை. சில வருடங்கள் கழித்து மீண்டும் ஏற்படுகிறது. நோய்கள் இயற்கையாக ஏற்படுவதில்லை. மாறாக இறைவன் நாடும் போது அதை ஏற்படுத்துகிறான் என்பதை இது உறுதி செய்கிறது.
மேலும் ஒரு வீட்டில் ஒருவருக்கு தொற்று நோய் ஏற்படுகிறது. அந்த நோய் அந்த வீட்டில் வேறு யாருக்கும் தொற்றாமல் வேறு தெருவில் உள்ளவருக்கு தொற்றுவதைக் காண்கிறோம். தொற்றுதல் என்பது இறைவனின் நாட்டத்தைப் பொருத்தது என்பது இதிலிருந்தும் தெரிகின்றது.
இதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் உணர்த்துகின்றதே தவிர தொற்று நோய் அறவே கிடையாது என்று கூறவில்லை. தொற்று நோய் உண்டு என்ற கருத்தில் அமைந்த பல்வேறு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் இதை வலியுறுத்துகின்றன.
*ஓர் ஊரில் கொள்ளை நோய் பரவியிருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அந்த ஊருக்கு நீங்களாகச் செல்லாதீர்கள். நீங்கள் ஓர் ஊரில் இருக்கும் போது அங்கு கொள்ளை நோய் ஏற்பட்டால் அதிலிருந்து வெருண்டோடு வதற்காக (அங்கிருந்து) வெளியேறாதீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், சொல்ல நான் கேட்டேன் என்று கூறினார்கள். (சுருக்கம்)*
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 5729
கொள்ளை நோய் ஏற்பட்டுள்ள ஊருக்குச் செல்ல வேண்டாம் என்றும், அந்த ஊரில் இருப்பவர்கள் அங்கிருந்து வெளியேற வேண்டாம் என்றும் இந்த ஹதீஸ் கூறுகின்றது. தொற்று நோய் இல்லை என்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கட்டளையிடத் தேவையில்லை. எனவே தொற்று நோய் உண்டு என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.
கிருமிகள் மூலமாக நோய் தொற்றிக் கொள்வதை இஸ்லாம் மறுக்கவில்லை. அதே சமயம், இறைவனின் நாட்டப்படியே அந்த நோய் பரவியது என்பதையும் மறுக்கக் கூடாது.
அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.
[அல்குர்ஆன் 112:1]