இஸ்லாத்தின் பார்வையில் கனவுகள்…
\நல்ல கனவு\
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’ நல்ல மனிதர் காணும் நல்ல (உண்மையான) கனவு, நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும்.
என அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
நூல்: ஸஹீஹ் புகாரி 6983
\கனவு கண்டால் என்ன செய்ய வேண்டும்\
அபூ ஸலமா(ரஹ்) அவர்கள் அறிவித்தார். நான் பல கனவுகளைக் கண்டு அதனால் உடல்நலம் பாதிக்கப்பட்டு வந்தேன். இறுதியில் அபூ கத்தாதா(ரலி) அவர்கள் (இவ்வாறு) கூற கேட்டேன்:
நானும் பல கனவுகளைக் கண்டு உடல் நலம் பாதிக்கப்பட்டுவந்தேன். இறுதியில் நபி(ஸல்) அவர்கள், நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வருவதாகும். எனவே, உங்களில் ஒருவர் தாம் விரும்புகிற கனவொன்றைக் கண்டால் தம் நேசத்துக் குரியவரைத் தவிர வேறெவரிடமும் அதைப் பற்றித் தெரிவிக்க வேண்டாம்.
மேலும், அவர் தாம் விரும்பாததைக் கண்டால் அந்த கனவின் தீமையிலிருந்தும் ஷைத்தானின் தீங்கிலிருந்தும் அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரி (தம் இடப் பக்கத்தில்) மூன்று முறை துப்பட்டும். அந்தக் கனவைப் பற்றி எவரிடமும் தெரிவிக்க வேண்டாம்.
- (அவ்வாறு செய்தால்) அது அவருக்கு எந்தப் பாதிப்பையும் ஒருபோதும் ஏற்படுத்திட முடியாது* என்று கூறியதைக் கேட்டேன்.
ஸஹீஹ் புகாரி 7044
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: காலம் சுருங்கும்போது ஒரு முஸ்லிம் காணும் கனவு பொய்யாகப் போவதில்லை. உங்களில் (நல்ல) உண்மையான கனவு காண்பவரே உண்மை பேசுகின்றவர் ஆவார். ஒரு முஸ்லிம் காணும் (நல்ல) கனவு நபித்துவத்தின் நாற்பத்தைந்து பாகங்களில் ஒன்றாகும்.
கனவுகள் மூன்று வகையாகும். நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தியாகும்.
கவலையளிக்கக்கூடிய கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும்.
இன்னொரு வகை ஒரு மனிதரின் உள்ளத்தில் தோன்றுகின்ற பிரமையாகும்.
ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்பாத கனவொன்றைக் கண்டால், உடனே அவர் எழுந்து (இறைவனைத்) தொழட்டும். அதைப் பற்றி மக்களிடம் தெரிவிக்க வேண்டாம். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் 4555
//தூங்கி எழுந்ததும் செய்ய வேண்டியவை..//
//ஓத வேண்டிய துஆ//
ஹுதைஃபா இப்னு அல்யமான்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் படுக்கைக்குச் செல்லும்போது, பிஸ்மிக்க அமூத்து வ அஹ்யா’ ( (இறைவா!) உன் பெயர் கூறியே இறக்கிறேன்; உயிர் வாழவும் செய்கிறேன்) என்று கூறுவார்கள்.
(உறக்கத்திலிருந்து) எழும்போது அல்ஹம்து லில்லாஹில்தீ அஹ்யானா பஅத மா அமாத்தனா வ இலைஹிந் நுஷூர்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே. அவன் எங்களை இறக்கச் செய்த பின்னர் எங்களுக்கு உயிரூட்டினான். மேலும், (மண்ணறையிலிருந்து வெளியேறி) அவனிடமே செல்லவேண்டியுள்ளது) என்று கூறுவார்கள்.
ஸஹீஹ் புகாரி 6312
\கைகளைக் கழுவுதல்.\
உங்களில் ஒருவர் விழித்தெழுந்தால் அவர், தாம் உளூச் செய்யும் தண்ணீரில் தம் கையை நுழைப்பதற்கு முன்னர் கழுவிக் கொள்ளட்டும்.
ஏனென்றால், (தூங்கத்தில்) தம் கை எங்கே இருந்தது என்பதை உங்களில் எவரும் அறியமாட்டார்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி 162
\பல் துலக்குதல்\
அண்ணல் நபி (ஸல்) அவர்களிடம் உளு செய்ய தண்ணீரும் பற்குச்சியும் (இரவிலேயே தயாராக) வைக்கப்படும். அவர்கள் இரவில் எழுந்ததும் மலஜலம் கழித்துவிட்டுப் பின்னர் பல் துலக்குவார்கள் என ஆயிஷா (ரலி) அறிவிக்கிறார்கள்..
நூல் : அபூதாவூத் 1654
\மூக்கை சுத்தம் செய்தல்\
அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். நீங்கள் தூக்கத்திலிருந்து எழுந்து உளூச் செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப்படுத்தி)க் கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும் போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கிறான்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி 3295
—————————
ஏகத்துவம்