அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவோம்.

நல்ல எண்ணம், கெட்ட எண்ணம் என்ற நேர் எதிரான குணங்கள் உள்ளவனாக மனிதன் படைக்கப்பட்டுள்ளான். நல்ல செயல்கள் செய்யக் கூடியவர்களை நற்பண்பாளர் என்று போற்றப்படுவதுண்டு. தீய செயல்களை செய்யக் கூடியவர்களை மோசமானவன் என்று தூற்றப்படுவதுண்டு.

மனிதன் என்ற நிலையிலிருந்து ஒருவர் செய்யும் அனைத்துக் காரியங்களையும் நூறு சதவிகிதம் சரியாகச் செய்ய முடியாது. அதே போல் ஒருவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சரியான முடிவுகளாகவே அமையும் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் ஆதமின் சந்ததிகள் தவறிழைக்கக் கூடியவர்களாகவே படைக்கப்பட்டுள்ளார்கள்.

குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவது இயல்பே! இந்தச் சண்டைகள் உச்சக்கட்டத்தை அடையும் போது, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உன்னிடத்தில் நான் இனிமேல் பேசவே மாட்டேன் என்று கூறி விடுவதுண்டு. இதே போல், நான் இறந்தால் என்னைப் பார்க்க வரக் கூடாது என்பது போன்ற கடுமையான சொற்களைக் கூறி விடுகின்றனர்.

நன்மைக்காகப் பிரார்த்திப்பது போலவே தீமைக்காகவும் மனிதன் பிரார்த்தனை செய்கிறான். மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன் 17:11)

இவ்வாறு அவசரப்பட்டு சொன்ன, ஈட்டி போன்ற வார்த்தைகளால் எதிரில் உள்ளவர்களின் உள்ளங்கள் காயமாகி விடும் என்று சிந்திப்பதில்லை.

அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல் வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.

(அல்குர்ஆன் 3:134)

ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),

நூல் : புகாரி (6065)

மக்களைத் தனது பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி (6114)

அல்லாஹ் நேசிக்கக்கூடிய இரு குணங்கள் உங்களிடம் உள்ளன.

1. அறிவாற்றல்

2. நிதானம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி),

நூல் : முஸ்லிம் (250)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ஆயிஷா! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

நூல் : முஸ்லிம் (5055)

மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கி விடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகி விடும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

நூல் : முஸ்லிம் (5056)

இது போன்ற நபிமொழிகளின் கருத்துக்களைக் கண்டு கொள்ளாமல் செயல்படுவதால் பல இன்னல்களைச் சந்திக்க நேருகிறது.

மார்க்கம் தடை செய்த வார்த்தைகளை உணர்ச்சி வசப்பட்டுக் கூறியிருந்தாலோ அல்லது அவசரப்பட்டுக் கூறியிருந்தாலோ அல்லது வேண்டுமென்றே கூறியிருந்தாலோ, அது தவறு என்று தெரிந்தவுடன் செய்ததை எண்ணி வருத்தப்பட வேண்டும். மாறாக, நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று கூறுவது போல் செய்த தவறை நியாயம் கற்பிக்க முயலக் கூடாது. இவ்வாறு பிடிவாதம் செய்வது தீய குணமாகும்.

பிடிவாதமாக (ஏக இறைவனை) மறுத்து, நல்லதைத் தடுத்து, வரம்பு மீறி, சந்தேகம் கொண்டு, அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த, ஒவ்வொருவரையும் நீங்களிருவரும் நரகில் போடுங்கள்! இவனை நீங்கள் இருவரும் கடுமையான வேதனையில் போடுங்கள்! (என்று அவ்விரு வானவர்களுக்கும் கூறப்படும்).

(அல்குர்ஆன் 50:24-26)

யாரிடம் கடுமையாக நடந்து கொண்டோமோ அவரிடம் தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்ள வேண்டும். அவரோடு உறவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேட வேண்டும்.

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 3:135)

இவ்வாறு நடந்து கொள்ளும் போது நம்மை விட்டுத் தீய குணங்கள் ஓடிப் போய் விடும். இந்த இடத்தில் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பிறகு, நபித்தோழர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறினால் பொருத்தமாக இருக்கும்.

குணத்ததை மாற்றிக் கொண்ட அன்னை

ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது வீடு ஒன்றை) விற்றது தொடர்பாக அல்லது நன்கொடையாக வழங்கியது தொடர்பாக (அவர்களுடைய சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் (அதிருப்தியடைந்து) அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தமது முடிவைக்) கைவிட வேண்டும். அல்லது நான் அவரைத் தடுத்து நிறுத்துவேன் என்று கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கடம் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், அவரா இப்படிச் சொன்னார்? என்று கேட்டார்கள். மக்கள், ஆம் என்றனர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும் பேச மாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன் என்று கூறிவிட்டார்கள். நீண்ட நாட்கள் பேச்சு வார்த்தை நின்று போன போது ஆயிஷா (ரலி) அவர்கடம் (தமக்காகப்) பரிந்து பேசுமாறு (முஹாஜிர்களை) இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறே அவர்கள் பரிந்து பேசிய போது) ஆயிஷா (ரலி) அவர்கள், முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் விஷயத்தில் ஒருபோதும் நான் (எவருடைய) பரிந்துரையையும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன். என் சத்தியத்தை நான் முறித்துக் கொள்ளவும் மாட்டேன் என்று கூறி விட்டார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் இப்னு ஸுபைர் அவர்கடம் பேச்சை நிறுத்தி நீண்ட நாட்களாகி விட்ட போது பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்தி யகூஸ் (ரலி) ஆகிய இருவரிடமும் இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வை முன் வைத்து உங்கள் இருவரிடமும் நான் வேண்டுகிறேன். என்னை (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கடம் அழைத்துச் செல்லக் கூடாதா? என் உறவை முறித்துக் கொள்வதாக அவர்கள் செய்துள்ள சத்தியம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்லவே! என்று கூறினார்கள். ஆகவே, மிஸ்வர் (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர் களும் தம் மேலங்கிகளை அணிந்து கொண்டு, இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்கடம் சென்றார்கள்.

(அங்கு சென்ற) உடனே அஸ்ஸலாமு அலைக்கி வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு என்று சலாம் சொல்லிவிட்டு, நாங்கள் உள்ளே வரலாமா? என்று அனுமதி கேட்டனர். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், உள்ளே வாருங்கள் என்று அனுமதி வழங்கினார்கள். அப்போது அவர்கள் (மூவரும்) நாங்கள் அனைவரும் உள்ளே வரலாமா? என்று கேட்டனர். ஆயிஷா (ரலி) அவர்கள், ஆம்; அனைவரும் உள்ளே வாருங்கள் என்று அவர்கள் இருவருடனும் இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் இருப்பதை அறிந்து கொள்ளாமலேயே கூறினார்கள்.

அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்ததும், இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் (தம் சிறிய தாயாரான ஆயிஷா இருந்த) திரைக்குள் நுழைந்து அவர்களைத் தழுவிக் கொண்டு அவர்கடம் முறையிட்டு அழத் தொடங்கினார்கள். மிஸ்வர் (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களும் (வெயே இருந்தபடி) இப்னு ஸுபைர் (ரலி) அவர்கடம் பேசியே தீர வேண்டும் என்றும் அவருக்காகத் தாங்கள் செய்யும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஆயிஷா (ரலி) அவர்கடம் வேண்டிக் கொண்டிருந்தனர். மேலும், அவர்கள் இருவரும், ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என நபி (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளதை தாங்கள் அறிந்தே உள்ளீர்கள் என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கடம் (உறவைப் பேணுவதன் சிறப்பு குறித்து) நினைவூட்டியும், (உறவை முறிப்பதன் பாவம் குறித்து) கசப்பூட்டியும் அவர்கள் அதிகமாகப் பேசிய போது (தாம் செய்த சத்தியத்தைப் பற்றி) அவர்கள் இருவருக்கும் நினைவூட்டியவாறு ஆயிஷா (ரலி) அவர்கள் அழலானார்கள்.

மேலும், (நான் அவரிடம் பேசமாட்டேன் என) சத்தியம் செய்து விட்டேன். சத்தியம் மிகவும் கடுமையானதாகும் என்று (அவர்கள் இருவரிடமும் திரும்பத் திரும்பக்) கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆயிஷாவிடம் அவர்கள் இருவரும் (தங்கள் கருத்தை) வலியுறுத்திக் கொண்டேயிருந்தனர். இறுதியில் ஆயிஷா (ரலி) அவர்கள் (தம் சகோதரியின் புதல்வர்) இப்னு ஸுபைரிடம் பேசிவிட்டார்கள். தமது சத்தியத்தை முறித்துவிட்டதற்குப் பரிகாரமாக நாற்பது அடிமைகளை விடுதலை செய்தார்கள். அதற்குப் பிறகும் கூடத் தமது சத்தியத்தை நினைவு கூர்ந்து தமது முகத்திரை நனையுமளவிற்கு அவர்கள் அழுவார்கள்.

அறிவிப்பவர் : அவ்ஃப் பின் மாலிக்,

நூல் : புகாரி (6073, 6074, 6075)

மேற்கண்ட செய்தியில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுப் பேச மாட்டேன் என்று முடிவு எடுக்கிறார்கள். பிறகு நபித்தோழர்கள், இவ்வாறு இருப்பது மார்க்கத்தில் அனுமதியில்லை என்றும் உறவுகளை பேண வேண்டும் என்றும் கூறுகின்றனர். உடனே தமது முடிவை மாற்றிக் கொள்கிறார்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சி அழுகின்றார்கள். எனவே அல்லாஹ்வும் அவன் தூதரும் கட்டளையிட்டதற்கு மாற்றமாக முடிவு எடுத்தோம் என்றால் அது தவறு என்று தெரிந்தவுடன் திருத்திக் கொள்வதே நல்லவர்களின் பண்பாடாகும். அவ்வாறு நடந்து அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவோம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed