இறைவனுக்கு மகன் இல்லை

அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொண்டான்  எனக் கூறுகின்றனர். அவ்வாறில்லை! அவன் தூயவன். வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அனைத்தும் அவனுக்கே அடிபணிகின்றன.

(திருக்குர்ஆன்:2:116.)

வேதமுடையோரே! உங்கள் மார்க்கத்தில் வரம்பு மீறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது உண்மையைத் தவிர (வேறெதனையும்) கூறாதீர்கள்! மர்யமின் மகன் ஈஸா எனும் மஸீஹ் அல்லாஹ்வின் தூதரும் அவனது கட்டளையா(ல் உருவானவருமா)வார். அக்கட்டளையை அவன் மர்யமிடம் போட்டான். அவனது உயிருமாவார். எனவே அல்லாஹ்வையும், அவனது தூதர்களையும் நம்புங்கள்! (கடவுள்) மூவர் எனக் கூறாதீர்கள்! விலகிக் கொள்ளுங்கள்! (அது) உங்களுக்குச் சிறந்தது. அல்லாஹ்வே ஒரே வணக்கத்திற்குரியவன். அவனுக்குப் பிள்ளை இருப்பதை விட்டும் அவன் தூயவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ் பொறுப்பேற்கப் போதுமானவன்.

(திருக்குர்ஆன்:4:171.)

ஜின்களை அல்லாஹ்வே படைத்திருக்கும் போது அவர்களை அவனுக்கு இணையாக்கி விட்டனர். அவனுக்கு ஆண் மக்களையும், பெண் மக்களையும் அறிவில்லாமல் கற்பனை செய்து விட்டனர். அவனோ தூயவன். அவர்கள் வர்ணிப்பதை விட்டும் அவன் உயர்ந்து விட்டான்.

(திருக்குர்ஆன்:6:100.)

(அவன்) வானங்களையும், பூமியையும் முன்மாதிரியின்றி படைத்தவன். அவனுக்கு மனைவி இல்லாத நிலையில் அவனுக்கு எவ்வாறு பிள்ளை இருக்க முடியும்? அவனே எல்லாப் பொருட்களையும் படைத்தான். அவன் அனைத்துப் பொருட்களையும் அறிந்தவன்.

(திருக்குர்ஆன்:6:101.)

உஸைர் அல்லாஹ்வின் மகன்  என்று யூதர்கள் கூறுகின்றனர்.  மஸீஹ் அல்லாஹ்வின் மகன்  என்று கிறித்தவர்கள் கூறுகின்றனர். இது வாய்களால் அவர்கள் கூறும் கூற்றாகும். இதற்கு முன் (ஏக இறைவனை) மறுத்தோரின் கூற்றுக்கு ஒத்துப் போகிறார்கள். அல்லாஹ் அவர்களை அழிப்பான். எவ்வாறு திசை திருப்பப்படுகின்றனர்?

(திருக்குர்ஆன்:9:30.)

அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்  என்று கூறுகின்றனர். இதற்கு உங்களிடம் ஆதாரம் இல்லை. அவன் தூயவன். அவன் தேவையற்றவன். வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ளவையும் அவனுக்கே உரியன. அல்லாஹ்வின் மீது நீங்கள் அறியாததை இட்டுக்கட்டிக் கூறுகின்றீர்களா?

(திருக்குர்ஆன்:10:68.)

சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

(திருக்குர்ஆன்:17:111.)

அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அவன் தான் தனது அடியார் மீது இவ்வேதத்தை நேரானதாகவும், தனது கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பதற்காகவும், நல்லறங்கள் செய்யும் நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய கூலி உண்டு; அதில் என்றென்றும் தங்குவார்கள்  என நற்செய்தி கூறுவதற்காகவும், அல்லாஹ் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்  என்று கூறுவோரை எச்சரிப்பதற்காகவும், (இவ்வேதத்தை) எவ்விதக் கோணலும் இன்றி அருளினான்.

(திருக்குர்ஆன்:18:1-4.)

எந்தப் பிள்ளையையும் ஏற்படுத்திக் கொள்வது அல்லாஹ்வுக்குத் தகுதியானதன்று. அவன் தூயவன். ஒரு காரியத்தைப் பற்றி அவன் முடிவெடுத்தால் ஆகு  என்று தான் அதற்குக் கூறுவான். உடனே அது ஆகி விடும்.

(திருக்குர்ஆன்:19:35.)

அளவற்ற அருளாளன் பிள்ளையை ஏற்படுத்திக் கொண்டான்  என்று அவர்கள் கூறுகின்றனர். அபாண்டத்தையே கொண்டு வந்து விட்டீர்கள். அளவற்ற அருளாளனுக்குப் பிள்ளை இருப்பதாக அவர்கள் வாதிடுவதால் வானங்கள் வெடித்து, பூமி பிளந்து மலைகள் நொறுங்கி விடப் பார்க்கின்றன. பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளும் அவசியம் அளவற்ற அருளாளனுக்கு இல்லை. வானங்களிலும், பூமியிலும் உள்ள ஒவ்வொருவரும் அளவற்ற அருளாளனிடம் அடிமையாகவே வருவார்கள்.

(திருக்குர்ஆன்:19:88-93.)

அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்  எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள்.

(திருக்குர்ஆன்:21:26.)

அல்லாஹ் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அவனுடன் எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறிருந்தால் தான் படைத்தவற்றுடன் ஒவ்வொரு கடவுளும் (தனியாகப்) போயிருப்பார்கள். ஒருவரையொருவர் மிகைத்திருப்பார்கள். அவர்கள் கூறுவதை விட்டும் அல்லாஹ் தூயவன்.

(திருக்குர்ஆன்:23:91.)

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

(திருக்குர்ஆன்:25:2.)

 

உமது இறைவனுக்குப் பெண் குழந்தைகள்! இவர்களுக்கு ஆண் குழந்தைகளா? என்று இவர்களிடம் கேட்பீராக! வானவர்களை நாம் பெண்களாகப் படைக்கும் போது அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்களா? கவனத்தில் கொள்க! அல்லாஹ் (பிள்ளைகளைப்) பெற்றெடுத்தான் என்று அவர்கள் இட்டுக்கட்டியே கூறுகின்றனர். அவர்கள் பொய் கூறுபவர்கள். ஆண் மக்களை விட அவன் பெண் மக்களைத் தேர்வு செய்து விட்டானா? உங்களுக்கு என்ன நேர்ந்தது? எவ்வாறு தீர்ப்பளிக்கிறீர்கள்?  சிந்திக்க மாட்டீர்களா? அல்லது உங்களுக்குத் தெளிவான சான்று உள்ளதா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் வேதத்தைக் கொண்டு வாருங்கள்!

(திருக்குர்ஆன்:37:149-157.)

அல்லாஹ் மகனை ஏற்படுத்திக் கொள்ள நாடியியிருந்தால் தான் படைத்தவற்றில் தான் நாடியதை எடுத்துக் கொண்டிருப்பான். அவன் தூயவன். அவனே அடக்கியாளும் ஏகனாகிய அல்லாஹ்.

(திருக்குர்ஆன்:39:4.)

அளவற்ற அருளாளனுக்குச் சந்ததி இருந்தால் அவரை நானே முதலில் வணங்குபவன் என (முஹம்மதே!) கூறுவீராக!

(திருக்குர்ஆன்:43:81.)

எங்கள் இறைவனின் மகத்துவம் உயர்ந்தது. அவன் மனைவியையோ,  பிள்ளைகளையோ ஏற்படுத்திக் கொள்ளவில்லை.

(திருக்குர்ஆன்:72:3.)

(யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை.

(திருக்குர்ஆன்:112:3.)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed