இறைவனுக்காகப் பலியிடப்படுபவை ஏழைகளுக்கே!
இஸ்லாமிய நம்பிக்கையின்படி இறைவன் தேவைகளற்றவன்; அவனுக்கு எந்தப் பொருளையும் நாம் படையல் செய்யத் தேவையில்லை. அப்படியானால் இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவது ஏன் என்ற கேள்விக்கு இந்த வசனம் (22:37) பதிலளிக்கிறது.
அறுத்துப் பலியிடுவதால் அதன் இரத்தமோ, மாமிசமோ இறைவனைச் சென்றடையாது; அது இறைவனுக்குத் தேவையில்லை என்று தெள்ளத் தெளிவாக இந்த வசனம் கூறுகிறது.
பொதுவாக, பொருளாதாரம் தொடர்பான வணக்கங்களில் அதன் பயன்பாடுகள் ஏழைகளுக்குச் சென்றடைய வேண்டும் என்பது தான் இஸ்லாத்தின் நிலை.
இறைவனுக்காக பிராணிகளை அறுத்துப் பலியிட்டு அதன் மாமிசங்கள், இறைச்சிகள் ஏழைகளுக்குக் கிடைக்க வேண்டும் என்பதும், இறைவன் கட்டளையிட்டால் நான் எதையும் செய்வேன் என்ற உணர்வை மனிதன் பெறுவதும் தான் குர்பானியின் நோக்கமே தவிர கடவுளுக்குப் படைப்பதல்ல என்பதற்கு இந்த வசனம் சான்றாகும்.