இறைவனது அருள் மாத்திரம் இல்லையென்றால் இது சாத்தியமாகி இருக்காது…

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே! வரதட்சனை போன்ற தீமைகளை கண்டு மனம் வருந்தாமல், அதல் பங்கு கேட்ட ஆலிம்கள் இருந்த இந்த தமிழகம்  இறைவன் அருளால் மஹர் கொடுக்கும் சமுதாயமாக மாறியுள்ளது என்றால், அதற்கு இநத ஜமாஅத்தின் கடின உழைப்பு இறைவன் அளித்த பரிசு என்றே சொல்லலாம். இறைவனது அருள் மாத்திரம் இல்லையென்றால் இது சாத்தியமாகி இருக்காது. அந்த வகையில், இறைவன் அருளால் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஒரு சில மாற்றங்களை மாத்திரம் இங்கே குறிப்பிட விரும்புகிறேன்.

எட்டுத் திக்கும் எட்டு ரக்அத் இரவுத் தொழுகை

நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியர் ஆயிஷா (ரலி) அவர்களிடம், “ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமலான் அல்லாத மற்ற காலங்களிலும் பதினொரு ரக்அத்களை விட அதிகமாகத் தொழ மாட்டார்கள். (முதலில்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்” என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்  : அபூசலமா பின் அப்திர் ரஹ்மான்,

நூல் : புகாரி 1147

இது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுத இரவுத் தொழுகை. ரமளானிலும், ரமளான் அல்லாத காலங்களிலும் நபி (ஸல்) அவர்கள் 8+3 ரக்அத் இரவுத் தொழுகை தொழுதுள்ளார்கள். சில ஹதீஸ்களில் வித்ருடன் சேர்த்து 13 ரக்அத் தொழுததாகவும் இடம் பெற்றுள்ளது.

இது தான் ஷரீஅத் வரைபடத்தின் சரியான வடிவம். ஆனால் இது தலைகீழாக மாற்றப்பட்டு 20+3 ரக்அத்துகள் தொழும் வழக்கம் நடைமுறையில் இருந்து வருகின்றது.

தராவீஹ் என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த பித்அத்தை மாற்றி நபிவழியை நடைமுறைப் படுத்த தவ்ஹீது ஜமாஅத் முயன்ற போது சந்தித்த எதிர்ப்பைப் போன்று வேறு எதற்கும் எதிர்ப்பைச் சந்தித்திருக்காது. அந்த அளவுக்கு, எட்டு ரக்அத் இரவுத் தொழுகை என்று அறிவித்ததும் தமிழகமே அமர்க்களப்பட்டது; ஆர்ப்பாட்டம் அடைந்தது. இந்த அமர்க்களம், ஆர்ப்பாட்டம் எப்போது அடங்கியது? 8+3 ரக்அத்களை தவ்ஹீத் ஜமாஅத் செயல்படுத்திக் காட்டிய பிறகு தான் அடங்கியது.

இருபது ரக்அத் தொழுவோரிடம் காணப்படுகின்ற அவசரம், எட்டு ரக்அத் தொழுவோரிடம் இல்லை. இருபது ரக்அத்களும் அரை மணி நேரத்தில் முடிகின்றது என்றால் எட்டு ரக்அத் தொழுவதற்கு ஒரு மணி நேரத்தைத் தாண்டுகிறது. அவ்வளவு அமைதி! அந்த அளவுக்கு நிதானம்!

அவசர கதியில் குர்ஆனை ஓதி முடிக்காமல் நிறுத்தி, நிதானமாக கிராஅத் ஓதப்படுகின்றது. நிலையில், ருகூவில், ஸஜ்தாவில் நிறுத்தி நிதானமாகத் தொழும் இந்த இரவுத் தொழுகையில் கலந்து கொள்ள மக்கள் கூட்டம் கூட்டமாக வருகின்றனர். அப்படியொரு மாற்றத்தை, மறுமலர்ச்சியை, வணக்க வழிபாட்டுப் புரட்சியை தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் ஏற்படுத்தியது.

பத்து இரவுகளும் பட்டப்பகலான அதிசயம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ரமளானின் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுகளில் லைலத்துல் கத்ரைத் தேடுங்கள்!

அறிவிப்பவர்  : ஆயிஷா (ரலி),

நூல் : புகாரி 2017

அல்லாஹ்வின் தூதரின் இந்த உத்தரவு ஷரீஅத் வரைபடத்தின் சட்ட வடிவமாகும். ஆனால் இதற்கு மாற்றமாக 27ம் இரவில் மட்டும் அதுவும் முன்னேரத்தில் மக்கள் கூடி விட்டு, புரோட்டா கறி, பிரியாணிப் பொட்டலம், சேமியா பாயாசம் சகிதத்துடன் கலைந்து விடும் வழக்கம் இருந்து வந்தது. ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த லைலத்துல் கத்ரை அடையும் விஷயத்தில் மக்களிடம் இருந்த அலட்சியப் போக்கை மாற்றி, ஒரு சரித்திர மாற்றத்தைக் கொண்டு வந்தது தவ்ஹீது ஜமாஅத்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உத்தரவுக்கு உரிய மதிப்பையும் மரியாதையையும் கொடுக்கும் விதமாக, ரமளானின் பிந்திய பத்து இரவுகளும் பட்டப் பகலானது. தவ்ஹீத் ஜமாஅத்தின் பள்ளிவாசல்களில் இந்த நாட்களில் பின்னிரவு நேரத்தில் இரவுத் தொழுகை நிறைவேற்றப்படுகின்றது. மேலப்பாளையம் மஸ்ஜிதுர் ரஹ்மானில் நள்ளிரவில் நடைபெறும் இரவுத் தொழுகையில் கலந்து கொள்வதற்கு இரவு 12 மணிக்கே பெண்கள் பள்ளிக்கு வந்து காத்துக் கிடக்கின்றனர். பிந்திய பத்தில் நடைபெறும் இந்த இரவுத் தொழுகையில் ஐநூறுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொள்கின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்கள் திரண்டு வருகின்றனர். ஏன்? லைலத்துல் கத்ரை, அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான நேரத்தில் தேடுகின்ற புரட்சியை தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத் கொண்டு வந்தது.

தவ்ஹீது பள்ளிகளில் உள்ள ரம்மியமிகு ரமளானின் பிந்திய இரவுகளின் சிறப்புகளைப் பார்த்து விட்டு, சுன்னத் வல் ஜமாஅத் பள்ளிகளிலும் அந்த நேரத்தில் தஹஜ்ஜத் என்று கூறி மேலதிகமாக 8 ரக்அத்கள் தொழ ஆரம்பித்துள்ளனர். அந்த அளவுக்கு மாற்றத்தை, தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியது.

மக்ரிபுக்கு முன் சுன்னத்

நபி (ஸல்) அவர்கள் “மஃக்ரிப் தொழுகைக்கு முன் தொழுங்கள்’ (மூன்று முறை) கூறினார்கள். மூன்றாம் முறை கூறும் போது அதை (எங்கே) மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டிய ஒரு சுன்னத்தாக எடுத்துக் கொள்வார்களோ என்று அஞ்சி, “இது விரும்பியவர்களுக்கு மட்டும் தான்” என்றார்கள்.

அறிவிப்பவர்  : அப்துல்லாஹ் அல்முஸ்னீ (ரலி),

நூல் : புகாரி 1183

ஷரீஅத்தின் வரைபடத்திலுள்ள இந்த வணக்க வழிபாடு இன்று நடைமுறையில் இல்லை. ஷாஃபி மத்ஹபிலாவது ஒரு சில இடங்களில் மக்ரிபுக்கு முன் சுன்னத் தொழுவதைப் பார்க்க முடியும். ஆனால் ஹனபி மத்ஹபில் மருந்துக்குக் கூட இதைப் பார்க்க முடியாது. மக்ரிப் பாங்கு முடிந்தவுடன் இகாமத் சொல்லி தொழுகையை ஆரம்பித்து விடுவர். தொழுகை நேர அட்டவணையில் கூட “மக்ரிப் இகாமத்’ என்ற இடத்தில், “உடன்” என்று தான் போட்டிருப்பார்கள்.

ஆனால் அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் ஜமாஅத் இன்று மக்ரிபுக்கு முன் சுன்னத் தொழுவதை மகிழ்ச்சியுடன் நடைமுறைப்படுத்தி வருகின்றது.

தற்கொலை செய்தவருக்கு தொழுவதற்குத் தடை

ஒரு மனிதர் நோயுற்ற போது அவர் திடுக்கத்துக்குள்ளானார். அவருடைய அண்டை வீட்டுக்காரர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அவர் இறந்து விட்டார்” என்று சொன்னார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், “அவர் இறந்தது உனக்குத் தெரியுமா?” என்று கேட்டார்கள். “நான் அவரைப் பார்த்தேன் (அவர் இறந்து விட்டார்)” என்று அம்மனிதர் கூறினார். நபி (ஸல்) அவர்கள், “அவர் இறக்கவில்லை” என்று கூறினார்கள்.

பிறகு அம்மனிதர் (நோயாளியிடம்) வந்த போது, அவர் கூரிய ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதைக் கண்டார். உடனே நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அவர் இறந்து விட்டார்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “அவர் இறந்தது உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டார்கள். அதற்கு அம்மனிதர், “அவர் தன்னிடமிருந்த கூரிய ஈட்டியால் தன்னை அறுத்துக் கொண்டதை நான் பார்த்தேன்” என்று கூறினார். “நீ பார்த்தாயா?” என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அம்மனிதர், ஆம் என்றார். நபி (ஸல்) அவர்கள், “அப்படியானால் அவருக்கு நான் தொழுவிக்க மாட்டேன்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்  : ஜாபிர் பின் ஸமுரா (ரலி),

நூல் : அபூதாவூத் 2770

இது தான் ஷரீஅத் சட்டம். இந்தச் சட்டத்தில் தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை இல்லை. ஆனால் மத்ஹபுகளில் இதற்கு மாற்றமாக, தொழுகை நடத்திக் கொண்டிருக்கின்றனர். ஜனாஸா தொழுகை என்பது முஸ்லிம்களுக்குத் தானே தவிர, நரகம் என்று தெளிவாகி விட்டவருக்கு இல்லை. தற்கொலை செய்தவர் காஃபிராகி விடுகின்றார் என்பதைப் புகாரியில் இடம்பெறும் இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களுக்கு முன் இருந்தவர்கüடையே ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். (ஒரு முறை) அவர் காயமடைந்தார். அவரால்  பொறுக்க முடியாமல் ஒரு கத்தியை எடுத்துத் தன் கையைத் துண்டித்துக் கொண்டார். அவர் இறக்கும் வரை இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டேயிருந்தது. அல்லாஹ், “என் அடியான், தன் விஷயத்தில் (அவசரப் பட்டு) என்னை முந்திக் கொண்டான். அவன் மீது நான் சொர்க்கத்தை ஹராமாக்கி விட்டேன்” என்று கூறினான்.

அறிவிப்பவர்  : ஜுன்தப் (ரலி),

நூல் : புகாரி 3463

இந்த அடிப்படை விபரம் கூடத் தெரியாமல் மத்ஹபுவாதிகள், தற்கொலை செய்தவருக்கு ஜனாஸா தொழுகை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் மேற்கண்ட ஹதீஸ்களின் அடிப்படையில், தற்கொலை செய்து கொண்டவருக்கு ஜனாஸா தொழுகை நடத்தத் தடை என்பதை தவ்ஹீத் ஜமாஅத் நடைமுறைக்குக் கொண்டு வந்தது.

களாத் தொழுகை

ஒருவர் பருவ வயதை அடைந்ததும் அவருக்குத் தொழுகை கடமையாகின்றது. அவர் ஐம்பது வயது வரை தொழாமல் இருந்து விட்டு, பிறகு திருந்தி தொழத் துவங்குகின்றார். இப்போது இந்த மத்ஹபுவாதிகள், இவ்வளவு காலம் தொழாமல் இருந்ததையும் சேர்த்து களாவாகத் தொழ வேண்டும் என்று கூறுகின்றனர்.

இதற்குப் பயந்து அவர் தொழுவதையே விட்டு விடுகின்றார். இப்படி மார்க்கத்தில் இல்லாத களா தொழுகையை மக்களிடம் திணித்துக் கொண்டிருந்தார்கள்.

“யார் தொழுகையை மறந்து விடுவாரோ அல்லது தொழாமல் தூங்கி விடுவாரோ அவர் நினைவு வந்ததும் அதைத் தொழுவதே அதற்குரிய பரிகாரமாகும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்  : அனஸ் (ரலி),

நூல் : முஸ்லிம் 1217

தூக்கம், மறதி ஆகிய இரண்டிற்கு மட்டும் தான் களா உண்டு. மற்றபடி, தொழுகை என்பது நேரம் குறிக்கப்பட்ட கடமை என்று திருக்குர்ஆன் (4:103) கூறுவதை மக்களிடம் விளக்கி, களாத் தொழுகை என்ற சுமையை சமுதாயத்திலிருந்து தவ்ஹீது ஜமாஅத் அகற்றியது. வாழ் நாள் களாவுக்குப் பயந்து தொழாமலே இருந்த பலரைத் தொழுகையாளிகள் ஆக்கியது.

மாற்றப்பட்ட ஸஹர் நேரம்

வைகறை எனும் வெள்ளைக் கயிறு, (இரவு எனும்) கருப்புக் கயிறிலிருந்து தெளிவாகும் வரை உண்ணுங்கள்! பருகுங்கள்!

(அல்குர்ஆன்2:187)

சுப்ஹ் நேரம் வரும் வரை சாப்பிடலாம் என்பதை இந்த வசனம் கூறுகின்றது. இதற்கு விளக்கமாக வரும் ஹதீஸ்களும் சுப்ஹ் நேரம் வரை ஸஹர் உணவு உண்ணலாம் என்பதை வலியுறுத்துகின்றன.

பிலால் (ரலி) அவர்கள் (ஃபஜ்ருக்கு முன்) இரவிலேயே பாங்கு சொல்வார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், “இப்னு உம்மி மக்தூம் (ரலி) பாங்கு சொல்லும் வரை உண்ணுங்கள். பருகுங்கள். ஏனெனில் அவர் தாம் ஃபஜ்ரு நேரம் வந்ததும் பாங்கு சொல்கின்றார்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்  : ஆயிஷா (ரலி) இப்னு உமர் (ரலி),

நூல் : புகாரி 1918, 1919

திருமறைக் குர்ஆனும், நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளும் இவ்வளவு தெளிவாக இருந்தும், ஃபஜ்ரு நேரத்திலிருந்து அரை மணி நேரத்திற்கு முன்பே ஸஹர் நேரம் முடிந்து விடுவதாக பரவலான நம்பிக்கை மக்களிடம் உள்ளது. நோன்புக் கால அட்டவணைகளை அச்சிட்டு மக்களிடம் விநியோகிப்பவர்களும் ஸஹர் முடிவு நேரம் என்று காலை 4 மணியிலிருந்து 4.30க்குள் குறிப்பிடுகின்றார்கள்.

இந்த நிலையை மாற்றி, ஃபஜ்ருடைய பாங்கு சொல்லப்படும் வரை ஸஹர் செய்யலாம் என்ற நிலையை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியது. அல்லாஹ்வும், அவனது தூதரும் காட்டித் தந்த ஸஹர் நேரத்தை மக்களிடம் அறிமுகப்படுத்தி, அமல்படுத்தவும் செய்தது.

நோன்பு துறப்பதில் கால தாமதம்

“சூரியன் மறைந்து இந்தத் திசையிலிருந்து இரவு முன்னோக்கி வந்து, அந்தத் திசையிலிருந்து பகல் பின்னோக்கிப் போனால் நோன்பாளி நோன்பை நிறைவு செய்ய வேண்டும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்  : உமர் (ரலி),

நூல் : புகாரி 1954

“நோன்பை நிறைவு செய்வதை விரைவு படுத்தும் வரை மக்கள் நன்மையில் ஈடுபட்டவர்களாக இருப்பார்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்  : ஸஹ்ல் பின் ஸஃது(ரலி),

நூல் : புகாரி 1957

சூரியன் மறைந்தவுடன் நோன்பை நிறைவு செய்ய வேண்டும் என்பதைக் கூறும் ஹதீஸ்கள் ஏராளமாக இடம் பெற்றுள்ளன. ஆனால் இன்று நடைமுறையில் பேணுதல் என்ற பெயரில் சூரிய மறைவு நேரத்திலிருந்து ஐந்து அல்லது பத்து நிமிடங்கள் வரை தாமதமாக நோன்பு துறக்கின்றனர்.

ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் இதை மாற்றியமைத்து, சூரியன் மறைந்தவுடன் நோன்பு துறக்கும் நடைமுறையை ஏற்படுத்தியது.

வரதட்சணைக் கொடுமை

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை, கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்!

(அல்குர்ஆன் 4:4)

இது அல்லாஹ்வின் கட்டளை. இது தான் ஷரீஅத் வரைபடத்தில் உள்ளது. ஆனால் இவர்களோ பெண்களிடம் வாங்குகின்றனர். இலட்சக்கணக்கில் பணமாகவும், நகையாகவும், பொருட்களாகவும் வாங்கும் இந்தக் கொடுமையை எதிர்க்கக் கடமைப்பட்ட ஆலிம்கள், அதற்குப் போய் அல்ஃபாத்திஹா சொல்லி ஆசி வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கு எதிராக தவ்ஹீத் ஜமாஅத் ஒரு பெரும் யுத்தத்தையே அன்றிலிருந்து இன்று வரை நடத்திக் கொண்டிருக்கின்றது. அதன் பலனாக, அல்லாஹ் சொல்வது போன்று லட்சக்கணக்கில் மஹர் கொடுத்து மணம் முடிக்கும் இளைஞர்களை தவ்ஹீத் ஜமாஅத் உருவாக்கியுள்ளது. இந்தக் கருத்தை ஏற்பதற்கு முன் ஏற்கனவே வரதட்சணை வாங்கியவர்கள் கூட திருப்பிக் கொடுத்த வரலாறும் உண்டு.

தமிழகத்தில் பெரும்பான்மையான ஊர்களில் தலைப் பிரசவத்தைப் பெண் வீட்டுக்காரர்கள் தான் பார்க்க வேண்டும் என்று எழுதப்படாத சட்டம் அமலில் உள்ளது. பிள்ளைக்கும் தாய்க்கும் செலவளிப்பது ஆண்களின் கடமை என்ற (2:233) வசனத்தின் அடிப்படையில் தலைப் பிரசவம் மட்டுமல்லாமல் எல்லா பிரசவச் செலவையும் ஆண்களே செய்யும் நிலையை தவ்ஹீத் ஜமாஅத் ஏற்படுத்தியது.

கூலி வேலை செய்யும் மாப்பிள்ளைக்கு ஒரு விலை, அரசு உத்தியோகம் பார்க்கும் மாப்பிள்ளைக்கு ஒரு விலை என்று மாட்டுச் சந்தையில் விற்பது போல் மணமகனை விற்கும் நிலை தமிழகத்தில் உள்ளது. இதையெல்லாம் உடைத்தெறிந்து, பெண்களுக்கு மனமுவந்து கொடுக்கும் மாபெரும் வரலாற்றுப் புரட்சியை தவ்ஹீத் ஜமாஅத் படைத்துள்ளது.

முயற்சித்தால், இறைவன் வெற்றி தருவான்

இதெல்லாம் சாத்தியமா? என்று நினைக்காமல், இறைவன் அருள் இருந்தால் வெற்றி நிச்சயம் என்பதை நம் கண் முன்னே இறைவன் நிகழத்திக் காட்டியிருக்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் கூறினான், எவன் என் நேசரை பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்கல் நான் கடமையாக்கிய ஒன்றைவிட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்துகொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்து விடும்போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அப்பேன். ஓர் இறை நம்பிக்கையாளனின் உயிரைக் கைப்பற்றுவதில் நான் தயக்கம் காட்டுவதைப் போன்று, நான் செய்யும் எந்தச் செயலும் தயக்கம் காட்டுவதில்லை. அவனோ மரணத்தை வெறுக்கிறான். நானும் (மரணத்தின் மூலம்) அவனுக் குக் கஷ்டம் தருவதை வெறுக்கிறேன்.

அறிவிப்பவர்  : அபூஹுரைரா (ர),

நூல் : புகாரி (6502)

இறைவனது பாதையில் முயற்சி செய்து, சத்தியத்தை மக்களுக்கு போதிக்கும் நன்மக்களாக, ஏகத்துவவாதிகளாக  மரணிக்கிற நல்லடியார்களாக நம் அனைவரையும் அல்லாஹ் ஆக்கி அருள்புரிவானாக!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed