இறையருளை விட்டும் தூரமாக்கும் ஈகோ

ஈகோ நம்மை இறையருளை விட்டும் தூரமாக்கி விடும். ஷைத்தான் இறையருளை விட்டும் தூரமானதற்கும் இறைவனின் சாபத்திற்குரியவனாகப் போனதற்கும் காரணமே இந்த ஈகோ எனும் அகங்காரம் தான்.

களிமண்ணால் மனிதனைப் படைக்கப் போகிறேன்; அவரைச் சீர்படுத்தி எனது உயிரை அவரிடம் நான் ஊதும் போது அவருக்குப் பணிந்து விழுங்கள்!’’ என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது இப்லீஸைத் தவிர வானவர் அனைவரும் பணிந்தனர். அவன் அகந்தை கொண்டான். (ஏக இறைவனை) மறுப்போரில் ஆனான்.

எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?’’ என்று (இறைவன்) கேட்டான்.

நான் அவரை விடச் சிறந்தவன். என்னை நெருப்பால் நீ படைத்தாய். அவரைக் களிமண்ணால் படைத்தாய்’’ என்று அவன் கூறினான்.

இங்கிருந்து வெளியேறு! நீ விரட்டப்பட்டவன். தீர்ப்பு நாள் வரை உன் மீது எனது சாபம் உள்ளது’’ என்று (இறைவன்) கூறினான்.

அல்குர்ஆன் 38: 71-78

ஆதம் (அலை) அவர்கள் களிமண்ணால் படைக்கப்பட்டுள்ளார்கள். இப்லீஸ் நெருப்பால் படைக்கப்பட்டுள்ளான்.

களிமண்ணை விட சிறந்த மூலப்பொருள் எது என்று பார்த்தால் நெருப்புதான்.

இத்தகைய உயர்ச்சியின் காரணத்தினால் ஆதம் (அலை) அவர்களை இழிவாகக் கருதி அவர்களுக்குப் பணிய மறுக்கிறான்.

மேலும், அல்லாஹ்வுக்கு முன்னிலையில் நாம் அனைவரும் சமம்தான். அவன் சொல்லும் கட்டளையை நிறைவேற்ற வேண்டும் என்ற உண்மையை இப்லீஸ் தலைக்கேறிய ஈகோவினால் மறக்கிறான்.

இதனாலே, வானவர்களுடன் இருந்தவன் இறை சாபத்திற்குரியவனாக மாறிவிட்டான்.

இத்தகைய மாபாதகக் கெட்ட குணமான ஈகோ இன்றைக்குப் பல இடங்களில் தலைவிரித்தாடுகிறது.

நண்பர்களுக்கு மத்தியில், நிர்வாகங்களில், அலுவலகங்களில், பாடசாலைகளில் என்று மக்கள் எங்கெல்லாம் ஒன்றிணைகிறார்களோ அங்கெல்லாம் இந்த ஈகோ எனும் ஷைத்தானிய குணமும் சேர்ந்து வந்துவிடுகிறது.

இவ்வளவு ஏன் ஒரு குடும்பம் என்று எடுத்துக் கொண்டால் கூட அதில் இருக்கின்ற ஒவ்வொரு உறுப்பினருக்கும் மத்தியில் ஈகோ.

கணவன், தன் தாயை விடத் தன் மீதே அன்பு செலுத்த வேண்டும் என்று மனைவிக்கு ஈகோ;

மகன் திருமணத்திற்குப் பிறகு தன் மனைவியுடன் அதீத அன்பு செலுத்தி விடுவானோ என்று மாமியாருக்கும் மருமகளுக்கும் மத்தியில் ஈகோ;

கணவனை விட மனைவி படித்திருந்தால் கணவன் மனைவிக்கு மத்தியில் ஈகோ;

ஒரு வீட்டில் பல மருமகள்கள் இருந்தால் ஒவ்வொருவருக்கும் மற்றவருடன் ஈகோ;

ஒரு பெண் ஆலிமாவாக இருந்தால் அவளது கணவன் அவளுக்கு அறிவுரை சொல்லும்போது அதை ஏற்காமல், நான் ஆலிமாவாக இருக்கிறேன்; நீங்கள் எனக்கு அறிவுரை செய்யுமளவுக்கு நான் ஒன்றும் தெரியாதவளா? அல்லது என்னை விட தங்களுக்கு எல்லாம் தெரியுமா? என்று மனைவி கணவனின் மீது கொள்ளும் ஈகோ;

ஒரு ஆண் குர்ஆன் கூட ஓதத் தெரியாதவனாக இருப்பான். மனைவியோ ஆலிமா. மனைவியிடம் சென்று ஓதக் கற்றுக் கொண்டு, ஓர் ஆண் என்ற ஆணவத்தை விட்டுக் கொடுக்க நான் தயாராக இல்லை என்று கணவனுக்கு மனைவியின் மீது ஈகோ.

இப்படி ஈகோ என்பது ஒரு குடும்பத்திற்குள் எடுத்துப் பார்த்தால் கூட பல பரிமாணங்களில் பரந்து விரிந்திருக்கிறது.

இந்த ஈகோ என்பது குடும்பம் உட்பட மக்கள் ஒன்றிணையும் எந்த இடத்தில் ஏற்பட்டாலும் அந்த இடத்தில் பிளவுகளும், பிரிவினைகளும் ஏற்பட்டு சீர்கெட்டுப் போய்விடும்.

கணவன் மனைவிக்கு மத்தியில் ஏற்படும் ஈகோ பிரச்சனைகளினால் குழந்தைகள் பாதிக்கப்பட்டு விடுகின்றனர்.

மாமியார் மருமகள் மத்தியில் ஏற்படும் ஈகோவினால் முதியோர் இல்லங்களும் விவாகரத்து பிரச்சனைகளும் தான் அதிகரிக்கின்றன.

ஈகோவை விட்டொழிக்க இஸ்லாத்தின் வழிகாட்டல்

நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள் தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள்ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோத ரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

அல்குர்ஆன் 49:10-13

மூஃமின்கள் அனைவரும் சகோதரர்களாக இருக்க வேண்டும் என்றும் தங்களுக்கு மத்தியில் பிணக்கு ஏற்படாமலிருக்க என்னென்ன வழிமுறையைப் பேண வேண்டும் என்றும் மேற்கண்ட வசனங்களில் இறைவன் குறிப்பிடுகிறான்.

யாரும் யாரையும் விட சிறப்பானவர்களாக இருக்கலாம். ஒருவர் தன்னிடம் இருக்கும் சிறப்பை வைத்து இன்னொருவனைக் கேலியாகக் கருதினால் கேலி செய்யப்படுபவன் இன்னொரு விஷயத்தில் அவனை விட உயர்ந்தவனாக இருப்பான் என்றும் அதனால் ஒருவர் மற்றொருவரை இழிவாகக் கருதாதீர்கள் என்றும் இறைவன் குறிப்பிடுகிறான்.

அத்துடன் குலம், கோத்திரம் அடிப்படையில் எந்த மனிதனும் இன்னொரு மனிதனை இழிவுப்படுத்தக் கூடாது.

இன்றைக்கும் இஸ்லாமிய சமூகத்தில் சிலர் தொழிலின் அடிப்படையில் தங்களுக்கு மத்தியில் உள்ள பிரிவுகளான மரைக்காயர், இராவுத்தர், லெப்பை போன்றவைகளை வைத்து மரைக்காயர் என்றால் நான் உயர்ந்தவன், நீ எனக்குக் கீழே தான் இருக்க வேண்டும் என்று ஈகோ கொள்ளும் தன்மைகள் சில இடங்களில் இருந்து வருகிறது.

அல்லாஹ்வை அஞ்சுபவர்கள் தான் சிறந்தவர்களே தவிர, குலம் கோத்திரத்தால் எந்தச் சிறப்பும் கிடையாது என்று இவ்வசனங்களில் இறைவன் தெளிவுபடுத்துகிறான்.

மேற்படி வசனங்களில் இறைவன் சொன்ன வழிமுறைகளைக் கையாண்டாலே ஈகோவிற்குப் பலியாவதிலிருந்து நம்மை நாமே தற்காத்துக் கொள்ளலாம்.

அடுத்து, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆன்மீகத் தலைமைப் பொறுப்பையும் பெற்றிருந்தார்கள்.

தனக்காக உயிரையே கொடுக்கும் தொண்டர் படையைப் பெற்றிருந்தார்கள்.

இப்படிப்பட்ட அனைத்து விதமான அதிகாரமும் வழங்கப்பட்டவர்களாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இருந்தார்கள்.

ஆனால், தனது வாழ்நாளில் ஒரு நாள் கூட பிறரை இழிவாகக் கருதியது கிடையாது. தனக்குக் கீழ்நிலையில் இருக்கிறார்கள் என்ற காரணத்திற்காக யார் சொல்லும் உண்மையையும் மறுத்தது கிடையாது. எந்த ஈகோவும் அவர்களது உள்ளத்தில் கடுகளவும் வந்தது கிடையாது.

ஒரு யூதப் பாதிரியார் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்தார். ‘‘முஹம்மதே! நீங்கள் (கடவுளுக்கு) இணை கற்பிக்காமல் இருந்தால் நீங்கள் தான் சிறந்த சமுதாயம்’’  என்று கூறினார். இதைக் கேட்ட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘‘சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்)’’ என்று ஆச்சரியத்துடன் கூறி விட்டு, ‘‘அது என்ன?’’ என்று வினவினார்கள்.

அதற்கு அந்தப் பாதிரியார், ‘‘நீங்கள் சத்தியம் செய்யும் போது கஅபாவின் மீது ஆணையாகஎனக் கூறுகிறீர்களே! அது தான்’’  என்று அவர் விளக்கினார். சற்று நேரம் மவுனமாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ‘‘இனிமேல் சத்தியம் செய்வதாக இருந்தால் கஅபாவின் எஜமான் மீது ஆணையாக’  எனக் கூறுங்கள் என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள்.

பின்னர் அந்தப் பாதிரியார், ‘‘முஹம்மதே! நீங்கள் அல்லாஹ்வுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்யாமல் இருந்தால் நீங்கள் தான் சிறந்த சமுதாயம்’’  என்று கூறினார். சுப்ஹானல்லாஹ்என்று ஆச்சரியத்தை வெளிப்படுத்திய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்,  ‘அது என்ன?’  என்ற கேட்டார்கள். 

‘‘இது அல்லாஹ் நினைத்ததும் நீங்கள் நினைத்ததுமாகும் என்று கூறுகிறீர்களே அது தான்’’  என்று அவர் விடையளித்தார். சற்று நேரம் மவுனமாக இருந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவர் விமர்சித்து விட்டார். எனவே, ‘‘இனிமேல் யாரேனும்  அல்லாஹ் நினைத்த படிஎன்று கூறினால் சற்று இடைவெளி விட்டுப்  பின்னர் நீங்கள் நினைத்தீர்கள்’  என்று கூறுங்கள்’’ என்று (முஸ்லிம்களுக்குக்) கூறினார்கள்.

நூல்: அஹ்மத் 25845

ஏகத்துவத்தை எடுத்துச்சொல்ல வந்த இறைத்தூதரிடமே வந்து ஒரு யூதர் நீங்கள் இணை கற்பிக்கிறீர்கள் என்று சொல்லுகிறார்.

அப்போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான் ஒரு இறைத்தூதர்; எனக்குத் தெரியாதது ஒரு யூதனான உனக்குத் தெரிந்துவிட்டதா? என்று வந்தவரை அவமதிக்காமல், ஈகோ கொண்டு அவரை விரட்டிவிடாமல் அவர் சொல்லும் செய்தி என்ன என்று நபி (ஸல்) அவர்கள் நிதானிக்கிறார்கள்; தவறைத் திருத்தியும் கொள்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் அள்பாஎன்று அழைக்கப்பட்ட ஒட்டகம் ஒன்று இருந்தது. அது பந்தயத்தில் எவரும் அதை முந்த முடியாத (அளவுக்கு விரைவாக ஓடக் கூடிய)தாக இருந்தது. அப்போது கிராமவாசி ஒருவர் ஆறு வயதுக்குட்பட்ட ஒட்டகம் ஒன்றின் மீது வந்தார். அது நபி (ஸல்) அவர்களின் ஒட்டகத்தை முந்திக் கொண்டது. இது முஸ்லிம்களுக்கு மனவேதனையை அளித்தது. இதையறிந்த போது நபி (ஸல்) அவர்கள், “உலகில் உயர்ந்து விடுகின்ற பொருள் எதுவாயினும் (ஒரு நாள்) அதைக் கீழே கொண்டு வருவதே அல்லாஹ்வின் நியதியாகும்’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 2872

அல்லாஹ்வின் தூதரின் ஒட்டகத்தை ஒரு கிராமவாசியின் ஒட்டகம் முந்திவிட்டதே என்று மக்கள் நினைக்கிறார்கள்.

ஒரு ஜனாதிபதியின் ஒட்டகத்தை, ஒரு சாதாரண கிராமப்புறக் குடிமகனுடைய ஒட்டகம் எப்படி முந்தலாம் என்று அவருக்கு எதிராகவோ, அவருடைய ஒட்டகத்திற்கு எதிராகவோ ஈகோ கொண்டு நபி (ஸல்) தாக்குதல் தொடுக்கவில்லை.

இன்றைக்கு இது போன்ற அரசியல் செல்வாக்கு உள்ள மனிதருக்கு ஏற்பட்டால் என்னவாகும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.

ஆனால், நபி (ஸல்) அவர்கள் எந்த உயர்வுக்கும் ஒரு தாழ்வு இருக்கிறது என்று ஓர் அழகான நியதியை எடுத்துரைக்கிறார்கள்.

உதாரணத்திற்கு மேற்சொன்ன நிகழ்வுகள் மட்டும். இதுபோன்று தான் நபி (ஸல்) அவர்கள் தன் வாழ்க்கை நெடுக எந்த ஈகோவும் இல்லாமல் வாழ்ந்து இருக்கிறார்கள்.

இஸ்லாம் சொல்லும் அறிவுரைகளை ஏற்று, நீயா நானா எனும் ஈகோவை விட்டொழித்து, தூய உள்ளத்துடன் நாம் வாழ்ந்தாலே மறுமை வெற்றி நமக்குக் கிட்டும். இல்லையேல் நரகப் படுகுழிக்குக் கொள்ளிக்கட்டைகளாகி விடுவோம். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும்.

உள்ளத்தின் மீதும் அதை வடிவமைத்ததன் மீதும் சத்தியமாக!

அதன் (உள்ளத்தின்) நன்மையையும், தீமையையும் அதற்கு அவன் அறிவித்தான்.

அதைத் தூய்மைப்படுத்துகிறவர் வெற்றி பெற்றார்.

அதைக் களங்கப்படுத்தியவர் இழப்பு அடைந்தார்.

அல்குர்ஆன் 91:7-10

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed