இரண்டு கைகளால் முஸாபஹா செய்யலாமா?

மத்ஹபை ஆதரிக்கும் சகோதரர்கள் இரண்டு கைகளால் முஸாபஹா செய்கின்றார்கள். ஆனால் குர்ஆன் ஹதீஸைப் பின்பற்றுபவர்கள் ஒரு கையால் முஸாபஹா செய்கின்றார்கள். இரண்டில் எது சரி என்பதை ஆதாரத்துடன் விளக்கவும்.

இரண்டு பேர் சந்தித்துக் கொள்ளும் போது, ஒருவருடைய கையை மற்றவர் பிடித்து பரஸ்பரம் நட்பைப் பரிமாறிக் கொள்வதற்கு முஸாபஹா என்று பெயர்.

ஸாஃபஹ என்ற சொல்லில் இருந்து தான் முஸாஃபஹா என்ற சொல் பிறந்துள்ளது.

இச்சொல்லுக்கு ஒரு கையால் மற்றவரின் ஒரு கையைப் பிடித்தல் என்பதே பொருளாகும்.

صافح فلانا: حياه يدأ بيد. – القاموس الفقهي

والمُصافَحَةُ: الأَخْذُ باليَدِ، كالتَّصافُحِ. القاموس المحيط

والمُصافَحَةُ : الأَخْذُ باليَدِ القاموس المحيط

முஸாஃபஹா என்ற சொல்லுக்கு ஒரு கையால் மற்றவரின் ஒரு கையைப் பிடித்தல் என்பதே பொருள் என்பதால் இரு கைகளால் செய்வது முஸாஃபஹாவில் சேராது.

இரு கைகளல் முஸாஃபஹா செய்ய வேண்டும் என்ற கருத்துடையோர் புகாரியில் பதிவு செய்யப்பட்ட பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரு கைகளுக்கிடையில் என் கை இருந்த நிலையில் குர்ஆனின் அத்தியாயத்தைக் கற்றுத் தருவது போன்று தஷஹ்ஹுத் (எனும் அத்தஹிய்யாத்)-ஐ எனக்கு அவர்கள் கற்றுத் தந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி 6265

இந்த ஹதீஸில் இரண்டு கைகள் என்று வருவதால் இரண்டு கைகளால் முஸாபஹா செய்யலாம் என்று வாதிடுகின்றனர்.

ஆனால் இரண்டு பேர் சந்திக்கும் போது செய்யப்படும் முஸாஃபஹா குறித்து இந்த ஹதீஸில் கூறப்படவில்லை. மாறாக, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தஹியாத்தைக் கற்றுக் கொடுப்பதற்காக இரண்டு கைகளால் பிடித்து சொல்லிக் கொடுக்கின்றார்கள்.

பொதுவாக ஒரு விஷயத்தைக் கற்றுக் கொடுப்பதற்காக இவ்வாறு செய்வது நடைமுறையில் உள்ளது தான். இதை முஸாஃபஹாவுக்கு ஆதாரமாகக் காட்ட முடியாது.

மேலும் இந்த ஹதீஸில் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களது ஒரு கையை, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு கைகளால் பிடித்திருந்தார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது.

ஒருவர் ஒரு கையாலும் மற்றவர் இரு கைகளாலும் யாரும் முஸாஃபஹா செய்வதில்லை. எனவே இது இரு கைகளால் முஸாஃபஹா செய்பவர்களுக்கு ஆதாரமாக ஆகாது.

இரு கைளால் முஸாஃபஹா செய்வதற்கு இந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டுவதற்குக் காரணம் புகாரி அவர்கள்இந்த ஹதீஸை, இரண்டு கைகளால் முஸாஃபஹா செய்வது என்ற தலைப்பில் பதிவு செய்திருப்பது தான்.

புகாரி அவர்கள் இதை முஸாஃபஹா தலைப்பில் பதிவு செய்தாலும் இந்த ஹதீஸ் முஸாஃபஹா பற்றியது அல்ல என்பது பளிச்சென்று தெரிகிறது. அவர் தலைப்பிட்டவாறு ஹதீஸின் கருத்து இல்லாததால் அவர் தலைப்பிட்டதை ஆதராமாகக் கொள்ள முடியாது.

ஒரு கையால் முஸாஃபஹா செய்வது மேற்கத்திய கலாச்சாரத்தில் கை குலுக்குவதைப் போல் உள்ளது; இதற்கு மாறு செய்ய வேண்டும் எனவே இரண்டு கைகளால் தான் முஸாஃபஹா செய்ய வேண்டும் என்று சிலர் கூறுகின்றனர்.

முஸாஃபஹா தொடர்பான ஹதீஸ்களில் ஒரு கை என்றே இடம் பெறுவதால் இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த இஸ்லாமிய கலாச்சாரம் தான். இதைத் தான் மேற்கத்தியர்கள் எடுத்துக் கொண்டார்களே தவிர நாம் அவர்களைப் பின்பற்றவில்லை என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed