இவ்வசனங்களில் (2:104, 4:46) மார்க்க விஷயத்தில் இரட்டை அர்த்தம் தரும் வகையில் பேசக்கூடாது என்ற அறிவுரை அடங்கியுள்ளது.
‘ராஇனா’ என்ற அரபுச்சொல் இரண்டு அர்த்தங்களுடைய சொல்லாகும். “எங்களைக் கவனித்து வழிநடத்துங்கள்” என்பது ஒரு பொருள். “எங்களின் ஆடு மேய்க்கும் இடையரே” என்பது மற்றொரு பொருள்.
யூதர்களில் நயவஞ்சகர்கள் தம் மனதுக்குள் ஆடு மேய்க்கும் இடையரே என்று நினைத்துக் கொண்டு “ராஇனா” என நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கூறி அற்ப திருப்திப்பட்டுக் கொண்டார்கள். முஸ்லிம்களோ முதல் அர்த்தத்தில் இதனைப் பயன்படுத்தி வந்தனர்.
எங்களைக் கவனித்து வழிநடத்துங்கள் என்ற பொருள் உன்ளுர்னா என்ற சொல்லுக்கும் உண்டு. ஆனால் இந்தச் சொல்லுக்கு ராயினா என்ற சொல்லுக்கு இருப்பது போல் இரண்டு அர்த்தங்கள் கிடையாது.
இரண்டு அர்த்தங்கள் கொண்ட ராயினா என்பதை விடுத்து ஒரு அர்த்தம் தரும் உன்ளுர்னா என்பதை மட்டும் முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கிப் பயன்படுத்த வேண்டும் என்று இங்கே கட்டளையிடப்படுகிறது.
அது போலவே ‘அதஃனா’ என்ற சொல் “கட்டுப்பட்டோம்’ என்ற ஒரு பொருளைக் கொண்ட சொல்லாக இருந்தாலும் ‘அதஃனா’ என்று கூறுவது போல் பாவனை செய்து ‘அஸய்னா’ என்று நயவஞ்சகர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நோக்கிக் கூறி வந்தனர். இதன் பொருள் “மாறுசெய்தோம்” என்பதாகும்.
இரட்டை அர்த்தத்தில் பேசி இரட்டை முகம் காட்டிய யூதர்களின் போக்கு இங்கே சுட்டிக்காட்டப்படுவதுடன் இது போன்ற பேச்சுக்களில் இருந்து முஸ்லிம்கள் விலகிக் கொள்ள வேண்டும் என்றும் கூறப்படுகிறது.
சொல்வதைத் தெளிவாகவும், குழப்பமில்லாமலும் சொல்ல வேண்டும் என்ற அறிவுரை இதில் அடங்கியுள்ளது.