இமாம்களின் பெயரால் கற்பனைக் கதைகள்

மத்ஹபுகள் என்பன திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் எதிரானதாக இருந்தும் எப்படி இச்சமுதாயத்தில் நிலைபெற்றன என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

மார்க்கக் கல்வி கற்கச் செல்லும் சிறு வயதினரை மூளைச்சலவை செய்து மத்ஹபு வெறியை ஊட்டி ஆலிம்களை உருவாக்குவார்கள். மத்ஹபு இமாம்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் என்றும், அல்லாஹ்வுக்கு நெருக்கமானவர்கள் என்றும், நபிகள் நாயகத்துக்குச் சமமானவர்கள் என்றும், நபிகள் நாயகத்தை விட மேலானவர்கள் என்றும் கட்டுக்கதைகளைப் போதிப்பார்கள்.

ஆலிம் படிப்பு படிக்கச் சென்றவருக்கு சிறு வயதில் இப்படி பக்தி ஊட்டப்பட்டு பின்னர் அது வெறியாக மாற்றப்பட்டு விடுகிறது. இதன் காரணமாகத்தான் மத்ஹபில் உள்ள அபத்தங்கள் மக்களுக்குப் புரியும் அளவுக்கு ஆலிம்களுக்குப் புரிவதில்லை. இமாம்களின் கருத்தில் தவறே வராது என்று மூளைச் சலவை செய்யப்பட்டுள்ளதே இதற்குக் காரணம்.

திருக்குர்ஆனுக்கும், ஹதீஸ்களுக்கும் முரணான மத்ஹப் சட்டங்கள் குறித்து யாரும் கேள்வி எழுப்பக் கூடாது என்பதற்காக மத்ஹப் இமாம்களை அல்லாஹ்வின் தூதருக்குச் சமமாகவும், அல்லாஹ்வின் தூதருக்கு மேலானவாரகவும் ஆக்கியுள்ள கொடுமைகளைப் பாருங்கள்

அபூஹனீஃபா அவர்கள் நாற்பது ஆண்டுகளாக (அதாவது பதினைந்தாயிரம் நாட்களாக) இஷாவுக்குச் செய்த உளூவின் மூலம் பஜ்ரு தொழுகை தொழுதுள்ளார்கள். ஐம்பத்தி ஐந்து தடவை ஹஜ் செய்திருக்கின்றார்கள். தமது இறைவனை நூறு தடவை கனவில் பார்த்திருக்கிறார்கள்.

அபூஹனீஃபா அவர்கள் தமது கடைசி ஹஜ்ஜின் போது ஒரு இரவு கஅபாவின் காவலாளியிடம் கஅபாவிற்குள் நுழைய அனுமதி கேட்டார்கள். அவரும் அனுமதி கொடுத்தார். உள்ளே நுழைந்து – இரண்டு தூண்களுக்கிடையில் இடது காலை வலது காலின் மீது வைத்துக் கொண்டு, வலது காலில் நின்றார்கள். இப்படியே பாதி குர்ஆனை ஓதி முடித்தார்கள். பின்னர் ருகூவு செய்து, ஸஜ்தா செய்தார்கள். பின்னர் வலது காலை இடது காலின் மீது வைத்துக் கொண்டு இடது காலில் நின்றார்கள். மீதி இருந்த பாதி குர்ஆனையும் ஓதி முடித்தார்கள். ஸலாம் கொடுத்ததும் தம் இறைவனிடம் பின்வருமாறு உரையாடினார்கள்.

என் இறைவா! உனது பலவீனமான இந்த அடியான் உன்னை வணங்க வேண்டிய விதத்தில் வணங்கவில்லை. ஆயினும் உன்னை அறிய வேண்டிய விதத்தில் அறிந்துள்ளேன். எனவே எனது முழுமையான அறிவின் காரணமாக என் பணியில் ஏற்படும் குறைகளைப் பொறுத்துக் கொள் என்று அபூஹனீஃபா கூறினார்கள்.

உடனே கஅபாவின் மூலையிலிருந்து,”அபூஹனீஃபாவே! நம்மை அறிய வேண்டிய விதத்தில் அறிந்து விட்டீர். அழகிய முறையில் பணியும் செய்து விட்டீர். எனவே உம்மையும், கியாம நாள் வரை உம்மைப் பின்பற்றுவோரையும் நான் மன்னித்து விட்டேன்” என்று ஓர் அசரீரி கேட்டது.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

இதில் உள்ள அபத்தமான விஷயங்களைப் பாருங்கள்!

இஷாவுக்குச் செய்த உளூவைக் கொண்டு பதினைந்தாயிரம் நாட்கள் பஜ்ரு தொழுகை தொழுதார்கள் என்றால் என்ன பொருள்?

15 ஆயிரம் இரவுகள் அவர் உறங்கவில்லை! மலஜலம் கழிக்கவில்லை! காற்றுப் பிரியவில்லை! மனைவியுடன் குடும்பம் நடத்தவில்லை! என்பதுதான் இதன் பொருள். இப்படி எந்த மனிதராலும் நடக்க முடியுமா? இவ்வாறு நடக்க மார்க்கத்தில் அனுமதி உள்ளதா? அபூஹனீஃபா அவர்கள் ஹிஜ்ரி 80ல் பிறந்து 150ல் மரணித்தார்கள். ஐம்பத்தி ஐந்து தடவை ஹஜ் செய்தார் என்றால் அவர் பருவம் அடைந்த 15 வயதில் இருந்து மரணித்த 70 வயது வரை ஒரு வருடம் கூட விடாமல் ஹஜ் செய்துள்ளார் என்று ஆகின்றது.

ஆனால் தாரீக் பக்தாத் நூலில் இடம்பெற்றுள்ள வரலாற்றுக் குறிப்பைப் பாருங்கள்!

நான் ஹஜ் செய்ய நாடியபோது அய்யூப் அவர்களிடம் பயணம் சொல்லச் சென்றேன். அப்போது அவர்கள் இந்த ஆண்டு அபூஹனீஃபா ஹஜ் செய்ய வருவதாக எனக்குத் தகவல் கிடைத்துள்ளது. அவரை சந்தித்தால் அவருக்கு என் சலாமைக் கூறுங்கள் என்றார்கள் என ஹம்மாத் பின் ஸைத் கூறுகிறார். அபூஹனீஃபா ஒரு வருடம் விடாமல் ஹஜ் செய்பவராக இருந்தால் அய்யூப் அவர்கள் இந்த ஆண்டு ஹஜ் செய்ய வருகிறார் என்று சொல்லத் தேவையில்லை. அபூஹனீபா 55 தடவை ஹஜ் செய்ததாக அபூஹனீஃபா சொன்னாரா? அவரது மாணவர்கள் சொன்னார்களா? பிற்காலத்தில் வந்தவர்கள் தான் இப்படி இட்டுக்கட்டினார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒற்றைக் காலில் நின்று வணங்க மார்க்கத்தில் அனுமதியிருக்கிறதா? ஒரு இரவில் முழுக் குர்ஆனையும் முறைப்படி ஓத முடியுமா? அல்லாஹ்வை அறிய வேண்டிய விதத்தில் அறிந்து விட்டேன் என்று அல்லாஹ்விடம் ஒருவர் கூறலாமா? நபிமார்கள் அல்லாத மனிதர்களிடம் அல்லாஹ் இவ்வாறு உரையாடுவானா? அபூஹனீஃபாவை மட்டுமின்றி கியாம நாள் வரை அவரைப் பின்பற்றக் கூடியவர்களையும் மன்னித்து விட்டதாக அல்லாஹ் கூறியிருக்க முடியுமா?

மத்ஹபின் மேல் வெறி ஏற்றுவதற்காக இப்படியெல்லாம் கட்டுக்கதைகளைச் சொல்லி மூளையை மழுங்கடிக்கின்றனர். அபூ ஹனீஃபாவிடம் அல்லாஹ் பேசி அவரை மட்டுமின்றி கியாம நாள் வரை அவரது மத்ஹபினரையும் மன்னித்து விட்டதாக நம்ப வைக்கப்படுகின்றனர்.

மத்ஹபுகளில் எவ்வளவு பாரதூரமான தவறுகளை நாம் எடுத்துக் காட்டினாலும் ஆலிம்களை அது கடுகளவும் பாதிக்காது. மத்ஹப் தவறாகவே இருந்தாலும் அதை அல்லாஹ் மன்னித்து விட்டதால் நம் வழியை மாற்றிக் கொள்ளத் தேவை இல்லை என்று முடிவு செய்கின்றனர்.

அபூஹனீஃபா பற்றி அவிழ்த்து விட்ட மற்றொரு கட்டுக்கதையைப் பாருங்கள்!

எல்லா நபிமார்களும் என் மூலம் பெருமையடைகின்றனர். ஆனால் நானோ அபூஹனீஃபாவின் மூலம் பெருமையடைகின்றேன். யார் அவரை நேசிக்கிறாரோ அவரை நானும் நேசிக்கிறேன். யார் அவரை வெறுக்கிறாரோ அவரை நானும் வெறுக்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

அபூஹனீஃபா மூலம்தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பெருமை என்றால் நபி (ஸல்) அவர்களை விட அபூஹனீஃபா சிறந்தவர் என்றும், உயர்ந்தவர் என்றும் போதிக்கிறார்கள். ஆனால் இதில் எடுத்துக் காட்டுவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவேயில்லை. அவர்கள் பெயரால் இட்டுக்கட்டி அபூஹனீஃபா பற்றி ஒரு சித்திரத்தை ஆலிம் படிப்பு படிக்கச் செல்லும் சின்னஞ்சிறுவர்களின் உள்ளங்களில் பதியச் செய்கின்றனர்.

நபியின் பெயரால் மேலும் இட்டுக்கட்டிக் கூறுவதைப் பாருங்கள்!

என்னை வைத்து ஆதம் பெருமை அடைந்தார். என் சமுதாயத்தில் தோன்றக் கூடிய நுஃமான் எனும் அபூஹனீஃபாவை வைத்து நான் பெருமை அடகிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

மேற்கண்டவாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவேயில்லை. துணிந்து நபியின் பெயரால் பொய்யை இட்டுக்கட்டி உள்ளனர்.

மேலும் இதன் கருத்து மிகவும் ஆபத்தானதாக உள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகிலத்தின் அருட்கொடை என்பதால் அவர்களை வைத்து ஆதமுக்குப் பெருமை என்று கூறுவதை ஏற்க முடிகிறது. ஆனால் நபிகள் நாயகத்துக்குப் பெருமை அபூஹனீஃபாவை வைத்துத் தான் என்று சொன்னால் அபூஹனீஃபா நபிகள் நாயகத்தை விட மேலானவர் என்பதாகும். இப்படி ஒரு நச்சுக்கருத்தையும் மார்க்கக் கல்வி கற்கச் சென்றவர்களிடம் விதைக்கிறார்கள்.

நபிகள் நாயகத்தை விட அபூஹனீஃபா பெரியவர் என்ற கருத்தை விதைத்து விட்டால் ஹதீஸ்களை விட அபூஹனீஃபாவின் கருத்துக்கு மக்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என்பது தான் இந்தக் கட்டுக் கதையின் நோக்கம்.

மேலும் புளுகியுள்ளதைக் காணுங்கள்!

மூஸா நபி, ஈஸா நபி ஆகியோரின் சமுதாயங்களில் அபூஹனீஃபா போன்றவர் இருந்திருந்தால் அவர்கள் யூதர்களாகவோ, கிறிஸ்தவர்களாகவோ ஆகியிருக்க மாட்டார்கள் என்று அப்துல்லாஹ் துஸ்தரி கூறினார்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

அபூஹனீஃபா என்பவர் இந்த உம்மத்தில் பிறந்ததால் தான் இந்த உம்மத் வழிகெடாமல் இருக்கிறது என்றால் இது எவ்வளவு பெரிய திமிர்பிடித்த வாதம்? அபூபக்ர், உமர் மற்றும் அனைத்து நபித்தோழர்களை விடவும் இவர் மேலானவரா? இவரது மத்ஹபைப் பின்பற்றும் மக்களில் அதிகமானவர்கள் சமாதி வழிபாட்டில் ஈடுபட்டு யூத கிறித்தவர் வழியில் போய்க்கொண்டு இருக்கிறார்களே? தன் மத்ஹபில் உள்ளவர்களையே ஷிர்க்கில் விழாமல் காப்பாற்ற இவரால் முடியவில்லையே?

இது இட்டுக்கட்டப்பட்ட பச்சைப் பொய் அல்லவா? அபூ ஹனீஃபா என்பவர் இந்த உம்மத்தில் பிறந்திருந்தும் ஷியாக்கள், காரிஜியாக்கள், முஃதஸிலாக்கள், மத்ஹபுவாதிகள் சமாதி வழிபாடு செய்வோர், பித்அத்வாதிகள் ஆகியோர் உருவானது எப்படி?

மேலும் எல்லை மீறி புகழ்வதைக் கேளுங்கள்!

அபூஹனீஃபாவின் சகாக்களுக்கும், அவரைப் பின்பற்றுவோருக்கும் அல்லாஹ் ஞானத்தை வழங்கி விட்டான். (அல்லது அதிகாரத்தை வழங்கி விட்டான்) இறுதியில் இவரது மத்ஹபின்படியே ஈஸா நபி தீர்ப்பு வழங்குவார்கள்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

ஈஸா நபி, ஹனஃபி மத்ஹபைப் பின்பற்றுவார்கள் என்று எவ்வித ஆதாரமும் இல்லாமல் துணிந்து பொய் கூறியுள்ளனர். ஈஸா நபியை விட அபூஹனீஃபா சிறந்தவரா? நபிமார்களை அவமானப்படுத்திவிட்டு இவரது புகழைப் பரப்ப வேண்டும் என்று வெறியை ஊட்டி ஆலிம்களைத் தயாரிக்கின்றனர். தனது மத்ஹப் இமாமைப் போற்றுவதாக எண்ணி மற்ற இமாம்களை எந்த அளவுக்குக் கேவலப்படுத்தி உள்ளனர் என்று பாருங்கள்!

அபூஹனீஃபாவின் கருத்தை மறுக்கக் கூடியவர்களுக்கு மணல்களின் எண்ணிக்கை அளவுக்கு நமது இறைவனின் சாபம் (லஃனத்) உண்டாகட்டும்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

அபூஹனீஃபாவின் கருத்தை மறுத்தால் மணல்களின் எண்ணிக்கை அளவுக்கு அல்லாஹ்வின் சாபம் உள்ளது என்று பயமுறுத்தி உருவாக்கப்பட்டதால் தான் ஆலிம்களுக்கு குர்ஆன் ஹதீஸ் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை.

மேலும் மூன்று இமாம்கள் அபூஹனீஃபாவின் கருத்தை மறுத்துள்ளனரே! அபூஹனீஃபாவின் மாணவர்களான அபூ யூசுப், முஹம்மது போன்றவர்கள் பலசட்டங்களில் அபூ ஹனீஃபாவின் கருத்துக்களை மறுத்திருக்கிறார்களே! அவர்கள் எல்லாம் சாபத்துக்கு உரியவர்களா?

அதுபோல் அமைந்த ஒரு கட்டுக் கதையைப் பாருங்கள்!‏

சுருங்கச் சொல்வதென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புதங்களில் குர்ஆனுக்கு அடுத்த மகத்தான அற்புதம் அபூஹனீஃபா தான்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

மனிதர்களால் சாத்தியமற்ற சில காரியங்களை அல்லாஹ்வின் அனுமதியுடன் செய்து காட்டி இதுதான் நான் இறைத்தூதர் என்பதற்கான ஆதாரம் என்று இறைத்தூதர்கள் வாதிடுவார்கள். இதுவே முஃஜிஸா எனும் அற்புதமாகும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அற்புதங்களில் திருக்குர்ஆன் மகத்தானது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அதற்கடுத்த அற்புதம் அபூஹனீஃபா தான் என்றால் அதன் பொருள் என்ன?

அபூஹனீஃபா நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் வாழ்ந்தவரா? அவரை எடுத்துக் காட்டி இவர் தான் நான் இறைத்தூதர் என்பதற்கான ஆதாரம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்னார்களா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்க்காத, அவர்களின் காலத்தில் பிறந்திராத அபூஹனீஃபாவை, நபியவர்களின் அற்புதம் என்றால் அது எவ்வளவு பெரிய அபத்தம்? குர்ஆனில் எந்தத் தவறும் இல்லாதது போன்று, அபூஹனீஃபாவின் தீர்ப்புகளிலும் தவறே இருக்காது என்று இதன் மூலம் நச்சுக்கருத்து ஊட்டப்படுகிறது.

அபூபக்ர் (ரலி) அவர்களின் இடத்தை மற்ற சஹாபாக்கள் கூட அடைய முடியாது. இந்த உம்மத்தில் யாரும் அடைய முடியாது என்பதை சாதாரண முஸ்லிம்களும் அறிந்து வைத்துள்ளனர். ஆனால் ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார் எப்படி வெறியேற்றுகிறது என்று பாருங்கள்!

அபூஹனீஃபா அபூபக்ரைப் போன்றவராவார்.

அபூஹனீஃபா அபூபக்ரைப் போன்றவராவார்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

இப்படி மத்ஹப் இமாம்கள் மீது பக்தி ஊட்டியதன் காரணமாகவே மத்ஹப் உலமாக்கள் மத்ஹபின் மீது வெறி கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இது போல் ஷாஃபி மத்ஹப் நூலிலும் ஷாஃபி இமாமை அளவு கடந்து புகழ்ந்து பக்தி ஊட்டியுள்ளதைக் காணுங்கள்!

ஷாஃபி இமாம் அவர்கள், இரவில் ஒரு பாகத்தைக் கல்விக்காகவும், மற்றொரு பாகத்தைத் தொழுகைக்காகவும், மற்றொரு பாகத்தை தூக்கத்துக்காகவும் என மூன்று பாகங்களாகப் பிரித்துக் கொள்வார்கள். தினமும் ஒரு தடவை முழுக்குர்ஆனையும் தொழுகையில் ஓதி முடிப்பார்கள். ரமலான் மாதத்தில் தினமும் இரண்டு தடவை முழுக்குர்ஆனையும் தொழுகையில் ஓதி முடிப்பார்கள்.

ஆதாரம் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய இஆனதுத்தாலிபீன்

இதில் உள்ள அபத்தங்களைப் பாருங்கள்!

ஷாஃபி இமாம் இரவை மூன்று பாகங்களாகப் பிரித்து அதில் ஒரு பாகத்தை தொழுகைக்கு ஒதுக்குவார்கள் என்று இதில் சொல்லப்பட்டுள்ளது. அதாவது நான்கு மணி நேரத்தை தொழுகைக்காக அவர்கள் ஒதுக்கிக் கொள்வார்களாம். இந்த நான்கு மணி நேரத்தில் முழுக்குர்ஆனையும் ஓத முடியுமா? ருகூவு, சஜ்தா, இருப்பு ஆகிவற்றையும் செய்து கொண்டு முழுக்குர்ஆனையும் தொழுகையில் ஓத முடியுமா? ரமலான் மாத்த்தில் இரண்டு தடவை முழுக்குர்ஆனை இந்த நேரத்தில் ஓத முடியுமா?

ஒரு ஜுஸ்வை வேகமாக ஓதினால் குறைந்தது முப்பது நிமிடங்கள் ஆகும். முழுக்குர்ஆனையும் ஓத பதினைந்து மணி நேரங்கள் தேவைப்படும். இரண்டு தடவை ஓதிட முப்பது மணி நேரங்கள் ஆகும். தொழுகையில் ஓதுவதாக இருந்தால் நாற்பது மணி நேரங்கள் ஆகும். ஆனால் ஷாஃபி அவர்கள் தொழுகைக்காக ஒதுக்கிய நேரம் நான்கு மணி நேரம் தான்.

இதிலிருந்து இது கட்டுக்கதை என்று அறிந்து கொள்ளலாம். இவரைப் போல் யாராலும் செய்ய முடியாது என்று சித்தரித்து பக்தியை ஊட்டுவதே இதன் நோக்கம் என்பது பளிச்சென்று தெரிகின்றது.

குரைஷ் குலத்தைச் சேர்ந்த ஆலிம் ஒருவர் உலகெங்கும் கல்வியால் நிரப்புவார் என்ற நபிமொழி ஷாஃபி இமாமைக் குறித்ததாகும். ஆனால் பொறாமையின் காரணமாக இதை இட்டுக்கப்பட்ட ஹதீஸ் என்று சிலர் கூறுகின்றனர்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலான துஹ்ஃபா

இது இட்டுக்கட்டப்பட்டது என்று நல்லறிஞர்கள் ஆதாரத்துடன் விமர்சனம் செய்திருந்தும் அது பொறாமையால் சொன்னது என்று கூறி இந்தக் கட்டுக்கதையை வைத்து ஷாஃபி இமாமுக்கு மத்ஹபுக்கு பலம் சேர்க்கின்றனர்.

இப்படி ஆதாரப்பூர்வமான எந்த நபிமொழியும் இல்லை. இட்டுக்கட்டப்பட்ட செய்தியை எடுத்துக் காட்டி இது ஷாஃபியைத் தான் குறிக்கிறது என்று பக்தி ஊட்டப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஷாஃபி இமாமிடம் ஒரு தராசைக் கொடுப்பது போல் அவரது சகாக்கள் கனவு கண்டார்கள். ஷாஃபியின் மத்ஹபுதான் நேர்மையானதும், சுன்னத்துக்கு நெருக்கமானதும், அனைத்துப் பிரிவுகளை விட மேலானதும், ஞானத்துக்கு நெருக்கமானதும் ஆகும் என்றும் இதற்கு விளக்கம் கொடுக்கப்பட்டது.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துஹ்ஃபா

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே கனவின் மூலம் ஷாஃபி மத்ஹபுக்கு நற்சான்று கொடுத்துள்ளனர் என்ற கட்டுக்கதை மீது மத்ஹபை நிறுவியுள்ளனர். இதை நம்ப வைத்து விட்டால் ஷாஃபி மத்ஹபில் யாரும் குறைகாணத் துணிய மாட்டார்கள் அல்லவா? அதற்குத்தான் இந்த பில்டப்புகள்.

ஷாஃபி இமாம் மரணித்த சில நாட்களில் அவரது உடலை பக்தாதுக்கு மாற்றுவதாக முடிவு செய்யப்பட்டது. அவரது கப்ரைத் தோண்டும் போது தூய்மையான நறுமணம் ஏற்பட்டு கூடியிருந்தோரை மயக்கியது. இதனால் அவரது உடலை இடமாற்றம் செய்வதை விட்டு விட்டனர்.

நூல்: ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துஹ்ஃபா

அடக்கம் செய்த உடலை பக்தாதுக்குக் கொண்டு செல்லும் எந்த அவசியமும் இருக்கவில்லை. அப்படி எந்த முயற்சியும் நடக்கவில்லை. ஆனால் இப்படி ஒரு கட்டுக்கதை மூலம் ஷாஃபி இமாமின் உடல் நாற்றமெடுக்காமல் நறுமணம் கமழ்ந்தது என்று கூறி நபிமார்களைப் போன்ற தகுதி பெற்றவர் என்ற முத்திரை குத்துவதுதான் இதன் நோக்கம்.

ஷாஃபி இமாம் துஆ அங்கீகரிக்கப்பட்டவராக இருந்தார். அவர் சிறுபாவமோ, பெரும்பாவமோ செய்ததாக அறியப்படவில்லை.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய முக்னீ

இவர் எந்த துஆ செய்தாலும் ஏற்றுக் கொள்ளப்படும் என்பதும், மலக்குகளைப் போல் இவர் பாவம் செய்யாத புனிதராக இருந்தார் என்பதும் மத்ஹப் வெறியை ஊட்டுவதற்கான கட்டுக்கதையாகும்.

யாராவது ஷாஃபி இமாமையோ, அவரது மத்ஹபையோ குறை கூறினால் கூடிய சீக்கிரம் அவன் அழிந்து விடுவான் என்பது ஷாஃபி இமாமின் தனிச்சிறப்பாகும். ஏனெனில் குரைஷ் குலத்தைச் சேர்ந்தவரை ஒருவன் இழிவுபடுத்தினால் அவரை அல்லாஹ் இழிவுபடுத்துவான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர் என்று சுப்கீ கூறுகிறார்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஹாஷியா புஜைரமீ

குலவெறியை ஒழித்துக் கட்டிய இஸ்லாத்தில் குறைஷிகள் பற்றி ஒரு ஹதீஸை இட்டுக்கட்டி, ஷாஃபி இமாம் குரைஷ் குலம் என்பதால் அவருடன் மோத வேண்டாம் என்று கூறி மத்ஹபுக்கு ஆள் பிடித்துள்ளனர் என்று இதிலிருந்து தெரிகின்றது.

சில அவ்லியாக்கள் அல்லாஹ்வைக் கனவில் பார்த்தார்களாம். இறைவா நான் எந்த மத்ஹபைப் பின்பற்றுவது என்று அவர்கள் அல்லாஹ்விடம் கேட்டார்களாம். அதற்கு அல்லாஹ் ஷாஃபி மத்ஹப் தான் மேலானது என்று பதிலளித்தானாம்.

நூல் : ஷாஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய ஹாஷியா புஜைரமீ

அல்லாஹ்வே ஷாஃபி மத்ஹபைப் பின்பற்றச் சொல்லி விட்டான் என்று கூறினால் அதைப் பின்பற்ற மக்கள் ஆர்வத்துடன் முன்வருவார்கள் என்பதற்காகவே இதுபோல் இட்டுக்கட்டி மக்களை மடையர்களாக்கியுள்ளனர். கட்டுக்கதைகளை உருவாக்கித் தான் மத்ஹபைப் பரப்பினார்கள். ஆதாரங்களின் அடிப்படையிலோ, கொள்கை அடிப்படையிலோ அல்ல என்பதைப் புரிந்து கொள்வோமாக!

ஷாஃபி அவர்கள் அபூஹனீஃபாவின் கப்ருக்கு அருகே சுப்ஹு தொழுதார்கள். அப்போது குனூத் ஓதவில்லை. ஏன் என்று அவர்களிடம் கேட்கப்பட்ட போது, ”இந்தக் கப்ரில் இருப்பவரை மதிப்பதற்காக” என்று விடையளித்தார்கள். இவ்வாறே பிஸ்மியைச் சப்தமின்றி ஓதினார்கள்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

சுப்ஹு தொழுகையில் குனூத் ஓதுவது நபிவழி என்பது ஷாஃபி இமாம் அவர்களின் நம்பிக்கை. அது போல் பிஸ்மியை சப்தமாக ஓதுவது நபிவழி என்று அவர்கள் நம்பினார்கள். ஷாஃபி அவர்கள் எதை நபிவழி என்று நம்பினார்களோ அதை ஒரு மனிதருக்காக விட்டு விட்டார்கள் என்றால் நபியை விட அபூஹனீஃபாவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததாக ஆகின்றது.

உண்மையான இமாம்கள் ஒருக்காலும், உயிரே போனாலும் நபிவழியை எவருக்காகவும் விட்டுக் கொடுக்க மாட்டார்கள். ஷாஃபி இமாமை சந்தர்ப்பவாதியாகவும், கொள்கைப் பிடிப்பில்லாதவராகவும் காட்டி, தங்கள் இமாமுக்கு மதிப்பை உயர்த்தத் திட்டமிடுகின்றார்கள் என்பதை இதிலிருந்து அறியலாம்.

ஹனஃபி மத்ஹபுடைய சட்டப்படி இமாமைப் பின்பற்றித் தொழுபவர் எதையும் ஓதக்கூடாது. ஷாஃபி மத்ஹபுடைய சட்டப்படி இமாமைப் பின்பற்றி தொழுதாலும் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதியாக வேண்டும். இதைக் கவனத்தில் கொண்டு கீழ்க்காணும் வாசகத்தைப் பாருங்கள்!

நான் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதுவதை விட்டுவிட்டால் ஷாஃபி இமாம் என்னைக் கண்டித்துவிடுவாரோ என்று அஞ்சுகிறேன். நான் இதை ஓதினால் அபூ ஹனீஃபா இமாம் என்னைக் கண்டித்து விடுவாரோ என்று அஞ்சுகிறேன். எனவே இமாமத் பணியை நான் தேர்வு செய்து விட்டேன் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

அதாவது இரு மத்ஹபுகளின் படியும் இமாம் அல்ஹம்து அத்தியாயத்தை ஓதியாக வேண்டும். அதனால் இமாமத் பணியைத் தேர்வு செய்தாராம். மார்க்கத்தில் எவ்வாறு நடந்து கொள்வதற்கு ஆதாரம் உள்ளது என்பதில் இவர்களுக்கு அக்கறை இல்லை. மாறாக ஷாஃபி கண்டித்து விடக்கூடாது என்பதற்காகவும், அபூஹபனீபா கண்டித்து விடக்கூடாது என்பதற்காகவும் இருவரிடமும் மாட்டிக் கொள்ளாத ஒரு முறையை இவர் தேர்வு செய்கிறாராம்.

அபூஹனீஃபா, ஷாஃபி ஆகியோர் கண்டித்து விடக்கூடாது என்பதற்குத்தான் அஞ்சுகிறேன் என்று கூறுபவர் முஸ்லிமாக இருக்க முடியுமா? அதுவும் அவர்கள் மரணித்து மக்கிப் போன பின் அவர்களுக்கு அஞ்சுகிறார் என்றால் என்ன பொருள்? மறுமையில் அவர்கள் கண்டிப்பார்கள் என்ற கருத்தில் தான் இவ்வாறு கூறுகிறார். மறுமை நாளில் அல்லாஹ் விசாரிப்பது போல் இவ்விருவரும் ஒவ்வொருவரையும் விசாரிக்க அதிகாரம் பெற்றவர்கள் என்பதற்கு நிகரான ஷிர்க் எதுவும் இருக்க முடியுமா?

இவர்களுக்கு தவ்ஹீதின் அரிச்சுவடி கூட தெரியவில்லை. இவர்கள் இமாம்களா? ஷைத்தானின் உடன்பிறப்புகளா? நான்கு மத்ஹபுகளும் சுன்னத் ஜமாஅத்தினர் தான் என்று பொதுமக்கள் மத்தியில் சொல்லிக் கொள்ளும் இவர்கள் தங்கள் மத்ஹப் மட்டுமே சரியானது என்றும் மற்ற மூன்று மத்ஹபுகள் தவறானது என்றும் தமக்குள் போதிக்கின்றனர்.

நமது கொள்கை குறித்தும், நமக்கு எதிர் கருத்து உள்ளவர்களின் கொள்கை குறித்தும் நம்மிடம் கேட்கப்பட்டால் எங்கள் கொள்கை தான் சரியானது; மற்றவர்களின் கொள்கை தவறானது என்று சொல்வது கட்டாயக் கடமையாகும்.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

அபூ ஹனீஃபாவின் மத்ஹபிலிருந்து ஷாஃபி மத்ஹபிற்கு மாறியவனின் சாட்சியும் ஏற்கப்படாது.

நூல் : ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலாகிய துர்ருல் முக்தார்

நான்கு மத்ஹபும் நல்வழி என்று பொதுமக்களிடம் கூறும் இவர்கள் உள்ளுக்குள் எப்படி பாடம் கற்பிக்கின்றனர் என்று பாருங்கள்!

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed