இப்லீஸ்
முதல் மனிதர் ஆதம் படைக்கப்படுவதற்கு முன் நல்லோரில் ஒருவனாக இருந்தவன் இப்லீஸ். இவன் நெருப்பில் படைக்கப்பட்ட ஜின் எனும் படைப்பைச் சேர்ந்தவன்.
முதல் மனிதரைப் படைத்தவுடன் அவருக்கு மரியாதை செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிட்டான். வானவர்கள் அனைவரும் மரியாதை செலுத்தினார்கள். அவர்களுடன் இருந்த இப்லீஸ் ஆதமுக்குப் பணிவது தனக்கு இழுக்கு எனக் கருதினான். மரியாதை செய்ய மறுத்தான். மனிதர்களை வழிகெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு அளித்தால் வழிகெடுக்க முடியும் என இறைவனிடம் வேண்டினான்.
“என்னையே முழுமையாக நம்பும் நல்லோரை உன்னால் கெடுக்க முடியாது. தனது மனோ இச்சைகளுக்கு அடிமைப்பட்டவர்களையே உன்னால் வழிகெடுக்க முடியும்” என்று கூறி இறைவன் வாய்ப்பளித்தான். இவனது சந்ததிகள் தாம் ஷைத்தான்கள் எனப்படுவோர்.