இஸ்லாமிய பார்வையில் இன்சூரன்ஸ்

இன்சூரன்ஸ் கூடுமா?

இன்ஷ்யூரன்ஸ் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் இல்லாத நவீன பிரச்சனையாகும். சமீப காலத்தில்தான் இது வழக்கத்துக்கு வந்துள்ளது. ஆயினும் இது குறித்து முடிவு எடுக்கத் தேவையான அடிப்படைகள் இஸ்லாத்தில் வகுக்கப்பட்டுள்ளன.

இஸ்லாம் தடுத்துள்ள வட்டி, மோசடி, ஏமாற்றுதல் போன்றவை இருந்தால் அது எந்த நவீன பிரச்சனையாக இருந்தாலும் அது தடுக்கப்பட்டதாகும். அவ்வாறு இல்லாவிட்டால் அது அனுமதிக்கப்பட்டதாகும்.

பொத்தாம் பொதுவாக இன்ஷ்யூரன்ஸ் கூடாது என்று சிலர் மார்க்கத் தீர்ப்பு அளித்து வருகின்றனர். இது தவறாகும்.

இன்ஷ்யூரன்ஸில் பல வகைகள் உள்ளன. அவற்றில் வட்டியை அடிப்படையாகக் கொண்டவையும் உள்ளன. அவை மட்டுமே மார்க்கத்தில் தடுக்கப்பட்டவையாகும். அவ்வாறு இல்லாத இன்ஷ்யூரன்ஸ் வகைகளைத் தடுப்பதற்கு தக்க காரணம் இல்லை.

உதாரணமாக ஆயுள் காப்பீடு என்ற வகையை எடுத்துக் கொள்வோம். ஒருவர் பத்து லட்சம் ரூபாய்க்கு ஆயுள் காப்பீடு எடுத்துள்ளார் என்றால் இந்தத் தொகையை குறிப்பிட்ட வருடங்கள் வரை ஆண்டுக்கு இவ்வளவு என்ற விகிதத்தில் அவர் கட்டி வர வேண்டும். முழுமையாகக் கட்டி முடித்து விட்டால் கட்டிய தொகை வட்டியுடன் திருப்பித் தரப்படும். அல்லது இடையிடையே கணக்குப் பார்த்து போனஸ் என்ற பெயரில் வட்டி தருவார்கள்.

பத்து லட்சம் ரூபாய்க்கு காப்பீடு எடுத்தவர் முதல் தவனை கட்டிய உடன் மரணித்து விட்டால் அவரது குடும்பத்தினருக்கு பத்து லட்சம் ரூபாய் கிடைத்து விடும்.

காப்பீடு எடுத்தவர் மரணிக்காமல் தொடர்ந்து தவணையைக் கட்டி வரும்போது காப்பீட்டு நிறுவனங்கள் வட்டி தருகிறார்கள். இது மார்க்கத்துக்கு எதிரானதாகும். இதன் காரணமாக ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் சேரக்கூடாது என்று கூறலாம். ஆயுள் காப்பீட்டுத் திட்டத்தில் நாம் செலுத்தும் பணத்துக்கு வட்டி தரப்பட மாட்டாது என்ற வகையில் இத்திட்டம் மாற்றப்பட்டால் இதைத் தடை செய்ய எந்த முகாந்திரமும் இல்லை.

மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை எடுத்துக் கொள்வோம்.

இதில் சேர்பவர்கள் வருடத்துக்கு ஒரு தொகையைக் கட்ட வேண்டும். இதில் சேரக்கூடியவர்களின் வயது, ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொருத்து இத்தொகை வேறுபடும்.

இத்திட்டத்தில் சேர்பவருக்கு பெரிய நோய் வந்து விட்டால் அவர் ஆயிரம் ரூபாய் கட்டி இருந்தாலும் அவரது மருத்துவச் செலவுக்கு காப்பீட்டு நிறுவனம் பொறுப்பேற்றுக் கொள்ளும். அந்த ஒரு வருடத்துக்குள் எந்த நோயும் வராவிட்டால் அவர் கட்டிய பணம் திரும்பத்தரப்பட மாட்டாது. கட்டிய பணமே திரும்பக் கிடைக்காது என்றால் வட்டியைக் கற்பனை செய்ய முடியாது.

அதாவது பல்லாயிரம் பேர் ஆயிரம் ரூபாய் கட்டுகிறோம். எங்களுக்கு நோய் வந்தால் அதற்கு மருத்துவம் செய்ய உதவுங்கள். நோய் வராவிட்டால் எங்கள் பணம் மற்றவர்களுக்கு உதவியாக இருக்கட்டும் என்ற அடிப்படையில்தான் இதில் சேர்பவர்கள் பணம் செலுத்துகிறார்கள். இதில் வட்டியும் இல்லை. மோசடியும் இல்லை. யாரையும் ஏமாற்றுதலும் இல்லை.

இதுபோல்தான் வாகனத்திற்கான இன்ஷ்யூரன்ஸும் உள்ளது. நாம் ஒரு வாகனத்தை வாங்கினால் அதில் மூன்று விதமான பாதிப்புகள் ஏற்படலாம்.

விபத்துகள் ஏற்படும்போது அந்த வாகனத்துக்குச் சேதம் ஏற்படலாம்.

அல்லது வாகனத்தை ஓட்டிச் சென்றவருக்குச் சேதம் ஏற்படலாம்.

அல்லது வாகனத்தினால் மற்றவருக்குச் சேதம் ஏற்படலாம்.

பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்கவோ, நமக்குரிய சிகிச்சை செய்து கொள்ளவோ, வாகனத்தைச் சீர்செய்யவோ நமக்கு இயலாமல் போகலாம். இதைக் கருத்தில் கொண்டுதான்

ஏதேனும் விபத்து அல்லது வாகனத் திருட்டு போன்றவை நடந்தால் காப்பீட்டு நிறுவனம் அதற்கான செலவை ஏற்றுக் கொள்ளும். மார்க்கத்தின் அடிப்படையில் இதைத் தடை செய்ய ஒரு முகாந்திரமும் இல்லை.

அது போல்தான் வீடுகள், கடைகள் இன்னபிற சொத்துக்களுக்கும் காப்பீட்டுத் திட்டங்கள் உள்ளன. இந்தக் காப்பீட்டுத் திட்டங்களில் ஆண்டு தோறும் நாம் செலுத்தும் தொகை அந்த ஆண்டுடன் காலாவதியாகி விடும். திரும்பத் தரப்படமாட்டாது. அசலும் தரமாட்டார்கள். வட்டியும் தர மாட்டார்கள். எனவே இவற்றைக் கூடாது எனக் கூற எந்த நியாயமும் முகாந்திரமும் இல்லை.

கலவரங்களின் போது முஸ்லிம்களின் வீடுகளும், கடைகளும், இன்னபிற சொத்துக்களும் சூறையாடப்படுகின்றன. முஸ்லிம்கள் காப்பீடு செய்வதில்லை; எனவே அவர்களின் சொத்துக்களை அழித்தால் அதோடு அவர்கள் பிச்சைக்காரர்களாக ஆவார்கள் என்று எதிரிகள் நன்றாக விளங்கி வைத்துள்ளதால் திட்டமிட்டு முஸ்லிம்களின் சொத்துக்களைச் சூறையாடுவதை ஒரு கொள்கையாக வைத்துள்ளனர்.

கடைகள் மற்றும் சொத்துக்களுக்கு காப்பீடு செய்தால் இவர்களின் சொத்துக்களை அழித்தாலும் மீண்டும் பழைய நிலைக்கு வந்துவிடுவார்கள் என்பதால் சொத்துக்களைச் சூறையாடுவது கூட தவிர்க்கப்படும். அப்படி சூறையாடினாலும் காப்பீட்டின் மூலம் இழப்பீட்டைப் பெற்று பழைய நிலையை அடைய முடியும்.

இதைக் கருத்தில் கொண்டு முஸ்லிம்கள் இயன்றவரை தொழில் நிறுவனங்களைக் காப்பீடு செய்வதுதான் அறிவுடமையாகும்.

வட்டி என்றால் என்ன?

இஸ்லாத்தில் எவை வட்டியாகக் கருதப்படும் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரத்தினச் சுருக்கமாக விளக்கியுள்ளனர்.

ரொக்கமாக நடக்கும் கொடுக்கல் வாங்கலிலும் வட்டி ஏற்படும். கடனாக நடக்கும் கொடுக்கல் வாங்கலிலும் வட்டி ஏற்படும்.

ஒரே இனத்தைச் சேர்ந்த இரண்டு பொருட்களுக்கு மத்தியில் பண்டமாற்று செய்யும்போது இரண்டும் சமமாக இருக்க வேண்டும். ஒன்று அதிகமாகவும், மற்றொன்று குறைவாகவும் இருந்தால் அது வட்டியாகக் கருதப்படும். வெவ்வேறு இனத்தைச் சேர்ந்த பொருட்களுக்கு மத்தியில் ரொக்கமாக நடக்கும் கொடுக்கல் வாங்கலில் வட்டி ஏற்படாது.

உதாரணமாக அரிசிக்குப் பதில் நாம் கோதுமையை வாங்கினால் இரண்டும் சமமாக இருக்க வேண்டியதில்லை. பத்து கிலோ அரிசிக்கு இருபது கிலோ கோதுமையை வாங்கலாம். அல்லது பத்து கிலோ அரிசியைக் கொடுத்து விட்டு ஐந்து கிலோ கோதுமையை வாங்கலாம். சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மக்கள் இதைத் தீர்மானித்துக் கொள்வார்கள். அரிசியும், கோதுமையும் வெவ்வேறு இனம் என்பதால் இது வட்டியாகாது.

பத்து கிலோ பாசுமதி அரிசியைக் கொடுத்து விட்டு இருபது கிலோ பொன்னி அரிசியை வாங்கினால் அது வட்டியாகிவிடும். ஏனெனில் இரண்டும் ஒரே இனத்தைச் சேர்ந்தவையாகும். இரண்டு அரிசிக்கும் தரத்தில் வேறுபாடு இருப்பதால் இந்த வித்தியாசம் ஏற்பட்டு இருக்கலாம் என்றாலும் இதுவும் வட்டி என்றே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் முடிவு செய்துள்ளனர்.

உணவுப் பொருட்களில் இதன் நுணுக்கம் நமக்குப் புரியாவிட்டாலும் நாணயங்களை மாற்றும்போது இதன் நுணுக்கத்தைப் புரிந்து கொள்ளலாம்.

ரூபாய் என்பது ஒரு இனத்தைச் சேர்ந்த நாணயம். 90 ஒரு ரூபாயைக் கொடுத்து விட்டு முழு நூறு ரூபாயை வாங்கினால் அது வட்டியாகி விடும். ரூபாய்க்குப் பதிலாக ரியால் அல்லது திர்ஹத்தை மாற்றினால் அதில் ஏற்படும் ஏற்றத்தாழ்வுகள் வட்டியாக ஆகாது.

இதற்கான ஆதாரங்கள் வருமாறு :

அபூசயீத் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் கூறியதாவது :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கைபருக்கு அதிகாரியாக நியமித்தார்கள். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உயர் ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், கைபரில் உள்ள பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இதே தரத்திலமைந்தவையா? என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை; அல்லாஹ்வின் தூதரே! மட்டமான பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாஉக்கு இந்தத் தரமான பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாஉவையும், மட்டமான பேரீச்சம் பழத்தில் மூன்று ஸாஉக்கு இந்தப் பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாஉவையும் நாங்கள் வாங்குவோம் எனக் கூறினார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், இவ்வாறு செய்யாதீர்! மட்டமான பேரீச்சம் பழத்தைக் காசுக்கு விற்று, அந்தக் காசின் மூலம் தரமான பேரீச்சம் பழத்தை வாங்குவீராக! எனக் கூறினார்கள்.

*நூல் : புகாரி 2202, 2303, 2321*

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! தங்கத்திற்கு வெள்ளியையும், வெள்ளிக்குத் தங்கத்தையும் விரும்பியவாறு விற்றுக் கொள்ளுங்கள்.

நூல் : புகாரி 2175, 2177, 2182

ஆனால் கடனாக நடக்கும் கொடுக்கல் வாங்கலில் ஒரே இனமாக இருந்தாலும் வெவ்வேறு இனமாக இருந்தாலும் கூடுதல் குறைவு இருக்கக் கூடாது.

இன்று நூறு மூட்டை நெல் தருகிறேன்; அடுத்த மாதம் நூற்றி இருபது மூட்டை நெல்லைத்தா என்று சொன்னால் அது வட்டியாகும். இன்று நூறு மூட்டை நெல் தருகிறேன். அடுத்த மாதம் நூற்றி பத்து மூட்டை கோதுமை தா எனக் கூறினாலும் அதுவும் வட்டியாகும். தவணை முறையில் கொடுக்கல் வாங்கல் நடக்கும்போது கொடுத்ததை விட அதிகமாக வாங்கினால் அது வட்டியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

சரிக்குச் சரியாகவே தவிர, தங்கத்திற்குத் தங்கத்தை விற்காதீர்கள்! ஒன்றைவிட மற்றொன்றை அதிகமாக்கி விடாதீர்கள்! சரிக்குச் சரியாகவே தவிர, வெள்ளிக்கு வெள்ளியை விற்காதீர்கள்! ஒன்றைவிட மற்றொன்றை அதிகமாக்காதீர்கள்! ஒன்று ரொக்கமாகவும் மற்றொன்று தவணையாகவும் இருக்கும் நிலையில் விற்காதீர்கள்!

நூல் : புகாரி 2177

வட்டிக்கு அறவே அனுமதி இல்லை!

இஸ்லாமியப் பொருளாதாரத்தில் வட்டிக்கு அறவே அனுமதி இல்லை. வட்டியில் இருந்து முற்றிலுமாக முஸ்லிம்கள் விலகிக் கொள்ள வேண்டும்.

வட்டியைக் குறித்து இஸ்லாம் கடுமையான போக்கைக் கொண்டுள்ளது. வட்டி வாங்குவோர் அல்லாஹ்வுடன் போர் செய்பவர்கள் என்று அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான். மேலும் வட்டி வாங்குவோருக்கு நிரந்தர நரகம் எனவும் அல்லாஹ் எச்சரிக்கிறான்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வர வேண்டிய வட்டியை விட்டு விடுங்கள்! அவ்வாறு நீங்கள் செய்யாவிட்டால் அல்லாஹ்விடமிருந்தும், அவனது தூதரிடமிருந்தும் போர்ப் பிரகடனத்தை உறுதி செய்து கொள்ளுங்கள்! நீங்கள் திருந்திக் கொண்டால் உங்கள் செல்வங்களில் மூலதனம் உங்களுக்கு உரியது. நீங்களும் அநீதி இழைக்கக் கூடாது. உங்களுக்கும் அநீதி இழைக்கப்படாது.

திருக்குர்ஆன் 2:278, 279

கொடும் வட்டிதான் தடுக்கப்பட்டுள்ளது; சிறிய அளவிலான வட்டிக்குத் தடை இல்லை என்று சிலர் வாதிட்டு இதற்கு ஆதாரமாகப் பின்வரும் வசனத்தை எடுத்துக் காட்டுகின்றனர்.

நம்பிக்கைகொண்டோரே! பன்மடங்காகப் பெருகிக் கொண்டிருக்கும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! இதனால் வெற்றி பெறுவீர்கள்.

திருக்குர்ஆன் 3:130

பன்மடங்கு வட்டி கூடாது என்றுதான் அல்லாஹ் இவ்வசனத்தில் கூறுகிறான்; எனவே சிறிய வட்டிக்கு அனுமதி உள்ளது என்று அவர்கள் வாதிடுகின்றனர்.

பன்மடங்காகப் பெருகும் நிலையில் வட்டியை உண்ணாதீர்கள் என்ற சொற்றொடர் இவர்கள் கூறும் கருத்தில் பயன்படுத்தப்படவில்லை. சிறிய வட்டியாக இருந்தாலும், பெரிய வட்டியாக இருந்தாலும் வட்டியின் தன்மையே பன்மடங்காகப் பெருகுவதுதான்.

ஒரு பொருளை ஒருவர் ஆயிரம் ரூபாய்க்கு விற்கிறார். அதில் அவருக்கு ஐம்பது ரூபாய் லாபம் கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம். அந்த ஐம்பது ரூபாய் லாபத்துடன் அந்த வியாபாரம் முடிந்து விடுகிறது.

ஆனால் ஆயிரம் ரூபாயை ஒருவர் மாதம் ஐம்பது ரூபாய் என்று வட்டிக்குக் கொடுக்கிறார். மாதாமாதம் ஐம்பது ரூபாய் என்று அது பன்மடங்காகிக் கொண்டே இருக்கும். பத்து ரூபாய் வட்டி என்று வைத்தாலும் அதுவும் பன்மடங்காகப் பெருகிக் கொண்டுதான் இருக்கும். வட்டியின் தன்மையே அதுதான். பெரிய வட்டி பெரிய அளவில் பன்மடங்காகும். சிறிய வட்டி சிறிய அளவில் பன்மடங்காகப் பெருகும்.

இதுதான் சிறிய வட்டிக்கும் பெரிய வட்டிக்கும் உள்ள வேறுபாடு.

எனவேதான் பன்மடங்காகப் பெருகிக் கொண்டுள்ள நிலையில் வட்டியை உண்ணாதீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். சிறிய வட்டியை அனுமதிக்கும் வகையில் இந்த வாசகம் அமையவில்லை.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் வரவேண்டிய வட்டியை விட்டு விடுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். *பார்க்க 2:278,279*

சிறிய வட்டி கூடும் என்றால் வரவேண்டிய வட்டியில் பெரிய வட்டியை விட்டு விடுங்கள் என்று அல்லாஹ் சொல்லி இருப்பான். வரவேண்டிய வட்டி சிறிதாக இருந்தாலும், பெரிதாக இருந்தாலும் அதை விட்டுவிட வேண்டும் என்ற கருத்தில் இவ்வசனம் அமைந்துள்ளதால் வட்டி முழுமையாகத் தடை செய்யப்பட்டுள்ளதை அறிந்து கொள்ளலாம்.

அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது :

பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றையும் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

*நூல் : புகாரி 2086 5347 5945*

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது :

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், வட்டி வாங்குபவரையும் வட்டி கொடுப்பவரையும், அதை எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் சபித்தார்கள். மேலும், இவர்கள் அனைவரும் (பாவத்தில்) சமமானவர்கள் ஆவர் என்று கூறினார்கள்.

*நூல் : முஸ்லிம் 4177*

 

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

0 thoughts on “இன்சூரன்ஸ் கூடுமா❓ காப்பீடு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed