இணைவைப்புக்கு இணங்கா இஸ்லாமியப் பெண்கள்

ஏக இறைவனாகிய அல்லாஹ் ஓரிறைக் கொள்கையை எடுத்துரைக்கும் அனைத்து இடத்திலும் தன்னை வணங்க வேண்டும் என்று மட்டும் கூறாமல் அந்த இறைவணக்கத்தில் வேறு யாரையும் கூட்டாக்கிக் கொள்ளக் கூடாது என்றும் கட்டளையிடுகின்றான். ஆனால் அல்லாஹ்வை மட்டும் வணங்குபவர்களை விட அவனுடன் மற்றவற்றையும் சேர்த்து வணங்குபவர்களே அதிகம் என்று தனது அருள்மறையாம் திருமறையில் குறிப்பிடுகின்றான்.

அவர்களில் பெரும்பாலானோர் இணை கற்பிப்போராகவே தவிர அல்லாஹ்வை நம்புவதில்லை.

(அல்குர்ஆன்:12:106)

இரண்டுமே பெண்கள் தான்

இணைவைப்பை ஆதரித்தவர்களும் பெண்கள்தான். இந்த இணைவைப்பைக் கடுமையாக கண்டித்து அதற்கு எதிராகப் புரட்சி செய்தவர்களும் பெண்கள்தான்.  ஆம். பண்டைய காலம் முதல் இன்றைய காலம் வரை இந்த இணைவைப்பில் பெரும் பங்கு வகிப்பவர்கள் பெண்களே! இதற்கு எடுத்துக்காட்டாக லூத் மற்றும் நூஹ் நபியின் மனைவிமார்களைக் குறிப்பிடலாம்.

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவ்விரு பெண்களும் அவ்விருவருக்கும் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. “இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்!” என்று கூறப்பட்டது.

(அல்குர்ஆன் 66:10)

இணைவைப்பை ஆதரித்தவர்களும் பெண்கள்தான். இந்த இணைவைப்பைக் கடுமையாக கண்டித்து அதற்கு எதிராகப் புரட்சி செய்தவர்களும் பெண்கள்தான். கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன் என்றிருந்த பெண்கள் கூட எதை இழந்தாலும் இழப்போம் பகட்டு வாழ்க்கையை மட்டும் இழக்க மாட்டோம் என்று இறுமாப்புடன் இருந்த பெண்களெல்லாம் வரலாற்றை வென்றெடுத்த பெண்களாக மாறி சரித்திரத்தில் சாதனை படைத்துள்ளார்கள் என்பதற்கு ஃபிர்அவ்னின் மனைவி சிறந்த எடுத்துக்காட்டாவார்.

இணைவைப்புக்கு எதிராக பிர்அவ்னின் மனைவி

என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கொரு வீட்டை எழுப்புவாயாக! பிர்அவ்னிடமிருந்தும், அவனது சித்திரவதையிலிருந்தும் என்னைக் காப்பாயாக! அநீதி இழைத்த கூட்டத்திலிருந்தும் என்னைக் காப்பாயாக!” என்று பிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் கூறுகிறான்.

(அல்குர்ஆன் 66:11)

மன்னனின் மனைவியாக இணைவைப்பில் இருப்பதை விட படைத்தவனின் அடிமையாக இருப்பதே மேல் என்று எண்ணற்ற துன்பங்களை ஏற்றவர்கள் பிர்அவ்னின் மனைவி ஆஸியா அம்மையார் ஆவார்கள்.

இவ்வுலக இன்பத்தை விட மறு உலக இன்பமே மேல் என்பதை விளங்கி இணைவைப்புக்கு மறுமையில் கிடைக்கும் தண்டனைக்குப் பயந்து இறை நம்பிக்கையாளருக்கு முன்மாதிரியாகத் திழந்தவர்கள் அன்னை ஆஸியா அம்மையார். உலக மக்கள் இவ்விசயத்தில் அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு நடக்க வேண்டும்.

இணைவைப்புக்கு எதிராக உடன்படிக்கை செய்த நபித்தோழியர்கள்

நபிகளார் காலத்தில் கற்சிலைகளை வணங்கிக் கொண்டிருந்த பெண்கள் இஸ்லாத்தை ஏற்ற பிறகு நபி (ஸல்) அவர்களிடம் உடன்படிக்கை கொடுக்கும்போது அல்லாஹ்விற்கு எதையும் இணையாக்க மாட்டோம் என்று உடன்படிக்கை செய்து இணை வைப்பிற்கு எதிராகக் களமிறங்கிய காட்சியை நாம் காணமுடிகின்றது. அதுவே அவர்களின் உடன்படிக்கைகளில் முதன்மையாகவும் இருந்தது.

நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் வந்து “அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக்கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறுசெய்ய மாட்டோம்” என்று உம்மிடம் உறுதிமொழி கொடுத்தால் அவர்களிடம் உறுதிமொழி எடுப்பீராக! அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 60:12)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் நபியே! இறைநம்பிக்கைக் கொண்ட பெண்கள் உங்களிடம் “அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்க மாட்டோம்; திருட மாட்டோம்; விபச்சாரம் செய்ய மாட்டோம்; எங்கள் குழந்தைகளைக் கொல்ல மாட்டோம்; நாங்களாக இட்டுக்கட்டி எந்த அவதூறையும் கூற மாட்டோம்; நல்ல விஷயத்தில் உமக்கு மாறுசெய்ய மாட்டோம்” என்று உறுதிமொழி அளித்தால், அவர்களிடம் உறுதிமொழி வாங்குங்கள் எனும் (60:12ஆவது) இறைவசனத்தை ஓதி வாய்மொழியாக விசுவாசப் பிரமாணம் வாங்குவார்கள். (கையால் தொட்டு வாங்க மாட்டார்கள்.) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கை, அவர்களுக்குச் சொந்தமான பெண்களை (துணைவியரை)த் தவிர வேறெந்தப் பெண்ணின் கையையும் தொட்டதில்லை.

நூல் : புகாரி (7214)

இவ்வாறாக இணைவைப்புக் கொள்கையை எதிர்ப்பதில் காலம் காலமாக பெண்களின் பங்களிப்பு இருந்து கொண்டே இருந்தது. இத்தகைய பட்டியலில் உள்ளவர்கள்தாம் சத்திய சஹாபியப் பெண்மணிகளும். அவர்கள் தம் உயிரிலும் மேலான இஸ்லாத்தைப் பாதுகாப்பதற்காக சந்தித்த சோதனைகள் ஏராளம். ஆரம்ப காலத்தில் எதிரிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட கொடுமைகளின் போதும், மக்கத்து குரைஷிகள் முஸ்லிம்களிடத்தில் நடந்து கொண்ட வெறித்தனமான செயல்களின் போதும், ஹிஜ்ரத், ஜிஹாத் போன்ற முக்கியமான காலகட்டங்களின்போதும் ஸஹாபியப் பெண்மணிகளிடம் காணப்பட்ட உறுதியும், பொறுமையும், சகிப்புத் தன்மையும்
சொல்லி மாளாதவைகளாகும்.

தனி வாழ்விலும், பொது வாழ்விலும் ஓர் மகத்தான இஸ்லாமியப் புரட்சியை, மறுமலர்ச்சியை ஏற்படுத்தியதில் சஹாபியப் பெண்மணிகள் ஆற்றிய சேவை மகத்தானது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க நபித்தோழியர்களின் வாழ்க்கைப் பாதையை இன்றைய இஸ்லாமியப் பெண்மணிகளும் பின்பற்றி சமூக சீர்த்திருத்தப் பணியில் எழுச்சியூட்டும் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும்.

குறிப்பாக ஸஹாபியப் பெண்மணிகள் எவ்வாறு வாழ்ந்துள்ளார்கள்? அவர்கள் வரலாறு கூறும் படிப்பினைகள் என்னவென்பதை இன்றைய பெண்மணிகள் அறிந்திட வேண்டும். நபித்தோழியர்கள் எவ்வாறு தங்களின் வாழ்க்கையை இஸ்லாத்தின் அடிப்படையில் அமைத்துக் கொண்டார்களோ அவ்வாறே நாமும் திருக்குர்ஆன் மற்றும் நபிவழியின் அறிவுரைகளை ஏற்று அதன்படி செயல்பட முன் வரவேண்டும்.

 

எம்.எஸ். ஜீனத் நிஸா, ஆசிரியை, அல் இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்வியகம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed