இடது கையில் கடிகாரம் அணியலாமா?

இடது கையில் கைக்கடிகாரம் கட்டலாமா? உங்கள் பயானை ஒரு தரீக்காவாதியிடம் கொடுத்த போது தாங்கள் கடிகாரத்தை இடது கையில் கட்டியிருப்பதாகவும், வலதை முற்படுத்துவது நபிவழியென்றிருந்தும் பீஜே போன்றவர்கள் அதை மீறுவது ஏன்? என்றும் கேட்கின்றார். எனக்குப் பதில் சொல்லத் தெரியவில்லை. கட்டாயம் பதிலை அனுப்பவும்.

அனைத்து நல்ல காரியங்களையும் வலது கரத்தால் ஆரம்பிக்க வேண்டும் என்பது நபிவழி தான். ஆனால் இதைச் சரியான முறையில் அவர் புரிந்து கொள்ளாததால் இப்படிக் கேட்டுள்ளார்.

எந்தக் காரியங்கள் வலது கையாலும், இடது கையாலும் செய்வது சமமான தரத்தில் உள்ளதோ அது போன்ற காரியங்களில் வலதைப் புறக்கணித்து விட்டு இடது கைக்கு முக்கியத்துவம் அளித்தால் தான் வலது பக்கக்கத்துக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை என்று ஆகும்.

எந்தக் காரியம் வலது கையால் செய்வதை விட இடது கையால் செய்வது தான் அதிக வசதியானது என்று உள்ளதோ அந்தக் காரியத்தை இடது கையால் செய்வது நபிவழியைப் புறக்கணித்ததாக ஆகாது. வலது பகுதியைப் புறக்கணித்ததாகவும் ஆகாது.

பொதுவாக வலது கை தான் அனைத்துக் காரியங்களையும் செய்வதற்கு அதிகம் பயன்படுத்தப்படும் நிலையில் உள்ளது. அந்தக் கையில் கடிகாரம் கட்டினால் கடிகாரத்துக்குச் சேதம் ஏற்படும். அல்லது சேதம் ஏற்படுமோ என்ற எண்ணம் காரணமாக இயல்பாக வேலைகளைச் செய்ய முடியாது.

இடது கை அதிகம் பயன்படாத காரணத்தால் அதில் கடிகாரம் கட்டுவது தான் இயல்பாக உள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வெள்ளி மோதிரத்தை இடது கையில் அணிந்ததற்கு ஆதாரங்கள் உள்ளன.

1124 ஸாபித் பின் அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மோதிரம் தொடர்பாக அனஸ் (ரலி) அவர்களிடம் மக்கள் வினா எழுப்பினார்கள். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் பின்வருமாறு பதிலளித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் இஷாத் தொழுகையைப் பாதி இரவுவரை அல்லது பாதி இரவு கழியும்வரை தாமதப்படுத்தினார்கள். பிறகு அவர்கள் வந்தார்கள். மக்கள் தொழுதுவிட்டு உறங்கிவிட்டார்கள். (ஆனால், நீங்கள் இவ்வளவு நேரம் காத்திருக்கிறீர்கள்.) நீங்கள் ஒரு தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் வரை அந்தத் தொழுகையிலேயே உள்ளீர்கள் (அதுவரை அதன் நன்மை உங்களுக்குக் கிடைத்துக் கொண்டேயிருக்கும்) என்று சொன்னார்கள். (அப்போது அவர்களது விரலில் மோதிரத்தைப் பார்த்தேன்.) இப்போதும் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வெள்ளி மோதிரம் மின்னுவதைப் பார்ப்பதைப் போன்றுள்ளது. எனக் கூறி தமது இடது கை சுண்டு விரலை உயர்த்திக் காட்டினார்கள்.

நூல் : முஸ்லிம் 1224

4254 ஸாபித் அல்புனானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த விரலில் மோதிரம் அணிந்திருந்தார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறி தமது இடக் கையின் சுண்டுவிரலை நோக்கி சைகை செய்தார்கள்.

நூல் : முஸ்லிம் 4254

மேலும் இன்று செல்போனில் அடிக்கடி பேசுகிறோம். வலது கைக்குப் பல வேலைகள் உள்ளதால் வலது கையில் செல்போனை வைத்து பேசிக் கொண்டிருந்தால் வலது காயால் பல வேலைகளைச் செய்ய முடியாத நிலை ஏற்படும். இந்தக் காரணத்துக்காக இடது கையில் செல்போனை வைத்துக் கொண்டு பேசினால் வலது கைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்று ஆகாது. மாறாக வலது கையால் மற்ற வேலைகளைச் செய்வதற்கு முக்க்கியத்துவம் கொடுத்ததாகவே ஆகும்.

பயணத்தில் வலது கையால் பொருட்களைத் தூக்கிச் செல்வதை விட இடது கையால் தூக்கிச் செல்வது அதிக பயனுள்ளது என்பதற்காக இடது கையில் தூக்கிச் சென்றால் வலதைப் புறக்கணிப்பதாக ஆகாது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed