இசை கூடும் என்று சிலர் கூறுகிறார்களே?

எகிப்தை மையமாகக் கொண்டு இயங்கும் இஹ்வானுல் முஸ்லிமீன் என்ற இயக்கத்தினர் இசை கேட்பது இஸ்லாத்தில் தடுக்கப்படவில்லை என்கிறர்களே? இது பற்றி விளக்குக?

இஸ்லாம் இசையைத் தடைசெய்துள்ளது. இதற்கான ஆதாரங்களையும் இசை கேட்பது கூடும் என்று சொல்பவர்கள் வைக்கும் வாதங்களுக்கு சரியான பதிலையும் நமது இணையதளத்தில் பலமுறை தெளிவுபடுத்தியுள்ளோம்.

இசை ஹராமா?

இசை ஹராமா? பாடல் இல்லாமல் இசை மட்டும் இசைப்பது ஹராமா ஹதீஸ் ஆதாரத்துடன் பதிலை எதிர்பார்க்கிறேன்?

இசை மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட அம்சமாகும். இதனைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என் சமுதாயத்தாரில் சில கூட்டத்தினர் தோன்றுவார்கள். அவர்கள் விபச்சாரம், பட்டு, மது, இசைக் கருவிகள் ஆகியவற்றை அனுமதிக்கப்பட்டவையாகக் கருதுவார்கள். இன்னும் சில கூட்டத்தினர் மலை உச்சியில் தங்குவார்கள். அவர்களின் ஆடுகளை இடையன் (காலையில் மேய்த்துவிட்டு) மாலையில் அவர்களிடம் ஓட்டிச் செல்வான். அவர்களிடம் தன் தேவைக்காக ஏழை (உதவிக்காகச்) செல்வான். அப்போது அவர்கள்

நாளை எங்களிடம் வா என்று சொல்வார்கள். (ஆனால்) அல்லாஹ் இரவோடு இரவாக அவர்கள் மீது மலையைக் கவிழ்த்து அவர்க(ளில் அதிகமானவர்க)ளை அழித்து விடுவான். (எஞ்சிய) மற்றவர்களை குரங்குகளாகவும், பன்றிகளாகவும் மறுமை நாள் வரை உருமாற்றி விடுவான்.

அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி)

நூல் : புகாரி 5590

விபச்சாரம், மது, பட்டு போன்ற தடை செய்யப்பட்ட பொருட்களுடன் இசையையும் சேர்த்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். மேலும் இவற்றை ஆகும் எனக் கருதுவார்கள் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். இதிலிருந்து இசை ஆகுமானதல்ல என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

புஆஸ் எனும் போரின் போது அன்சாரிகள் பாடிய பாடல்களை இரு அன்சாரிச் சிறுமிகள் என்னருகில் பாடிக் கொண்டிருந்தனர். அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (உண்மையில்) அவ்விரு சிறுமியரும் பாடகியர் அல்லர். (இதைக் கண்ட) உடனே அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைத்தூதரின் இல்லத்திலேயே சைத்தானின் இசைக் கருவிகளா? என்று (கடிந்து) பேசினார்கள். இது நடந்தது ஒரு பெருநாள் தினத்திலாகும். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூபக்ரே ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் பண்டிகை நாள் ஒன்று உண்டு. இது நமது பண்டிகை நாள் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : முஸ்லிம் 2098

மேற்கண்ட ஹதீஸ் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்தே மேலும் இரு அறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் வந்துள்ளது. அதில் இரு சிறுமியர் கஞ்சிராக்களை அடித்து விளையாடிக் கொண்டிருந்தனர் என்று வந்துள்ளது.

சைத்தானின் இசைக் கருவிகளா? என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிய கருத்தை மறுக்கவில்லை. மாறாக இன்றைக்குப் பெருநாளாக இருப்பதால் இன்றைக்கு மாத்திரம் விட்டுவிடுமாறு விதிவிலக்கு தருகிறார்கள்.

இசைக்கருவிகள் சைத்தானுடையது என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறியது தவறு என்றிருந்தால் நீ சொல்வது தவறு. இசைக் கருவிகள் அனுமதியளிக்கப்பட்டவை தான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் கூறியிருப்பார்கள். இன்றைக்கு மட்டும் விட்டுவிடு என்று அவர்கள் கூறுவதிலிருந்து மற்ற நாட்களில் இசைப்பது கூடாது என்பதைப் புரிந்து கொள்ளலாம். எனவே இந்த ஹதீஸும் இரு பெருநாட்களில் தவிர இசையைக் கேட்பது கூடாது என்பதற்கு ஆதாரமாக உள்ளது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ் உங்களுக்கு மதுவையும், சூதாட்டத்தையும், மத்தளத்தையும் தடை செய்துள்ளான். போதையூட்டக்கூடிய அனைத்தும் தடை செய்யப்பட்டதாகும்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : அஹ்மத் 3274

ஒரு இடையனின் குழலோசை இப்னு உமர் (ரலி) அவர்களின் காதில் விழுந்தது. அப்போது அவர்கள் தமது இரு காதுகளிலும் விரலை வைத்துக் கொண்டு அந்தப் பாதையை விட்டுவிட்டு வாகனத்தைத் திருப்பினார்கள். உனக்குக் கேட்கிறதா? என்று வினவினார்கள். அதற்கு நான் ஆம் என்றேன். அவர்கள் (சிறிது தூரம்) சென்ற பிறகு எனக்குக் கேட்கவில்லை என்று நான் கூறினேன். கைகளை (காதிலிருந்து) எடுத்து விட்டு மறுபடியும் அதே பாதைக்கு வாகனத்தைத் திருப்பினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு இடையனின் குழலோசையைக் கேட்ட போது அவர்கள் இதைப் போன்று செய்வதை நான் பார்த்தேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : நாஃபிஃ (ரஹ்)

நூல் : அஹ்மத் 4965

குழலோசையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெறுத்துள்ளார்கள் என்பதை இந்த ஹதீஸிலிருந்து புரிந்து கொள்ளலாம்.

மேற்கண்ட ஆதாரங்களின் மூலம் பொதுவாக இசை தடை செய்யப்பட்டது என்பதை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

இசை கேட்பது கூடும் என்று இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தினரும் நமது நாட்டில் அவர்களைப் பின்பற்றுவோரும் கூறுகிறார்கள்.

இக்வானுல் முஸ்லிமீன் இயக்கத்தினர் இஸ்லாமிய ஆய்வாளர்கள் அல்லர். நமது நாட்டில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகளைப் போல் இவர்கள் எகிப்து நாட்டின் அரசியல்வாதிகள். இங்குள்ள முஸ்லிம் அரசியல் கட்சிகள் எப்படி இசை மூலம் பாடல்களை ஒளிபரப்பி ஓட்டுப் பொறுக்குகிறார்களோ அது போல் அவர்களும் செய்கிறார்கள். மக்கள் கூட்டததைச் சேர்ப்பதற்கு இசை உதவும் என்பதற்காகவே இவர்கள் இசை கூடும் என்று பத்வா கொடுக்கின்றனர்.

இசை கூடும் என்பதற்கு மார்க்க அடிப்படையிலான ஆதாரம் ஏதும் இவர்களிடம் இல்லை.

இசை பற்றி அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் என்ன சொன்னார்கள் என்று இவர்கள் பார்க்கவில்லை. இது இவர்களுக்குத் தேவையுமில்லை. இது பற்றிப் பேச அழைத்தால் முன்வரமாட்டார்கள்.

இவர்களின் தேர்தல் பிரச்சாரத்துக்கு இசை பயன்படுகின்றது என்ற ஒரு காரணத்துக்காகவே இசை கூடும் என்று கூறுகின்றனர். சுய நலனுக்காக மார்க்கத்தில் விளையாடும் இவர்களை சமுதாயம் அடையாளம் காண வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed