ஆஷூரா பற்றிய ஹதீஸ்கள் பலவாறாக முரண்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.?

ரமலான் நோன்பு கடமையாவதற்கு முன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பை நோற்று வந்ததாக ஒரு ஹதீஸ் கூறுகிறது. மற்றொரு ஹதீஸில் நான் அடுத்த வருடம் இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு வைப்பேன் என்று கூறியுள்ளர்கள் என்று கூறப்பட்டுள்ளது.

அப்படியென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு வருடம் தான் ரமலான் நோன்பையும் வைத்துள்ளார்கள் என்று அர்த்தம் வருமே? ஆனால் ஹிஜ்ரி இரண்டாம் ஆண்டு முதலே ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்டு விட்டதே? விளக்கம் தரவும். ஆஷூரா நோன்பு குறித்த மாறுபட்ட நிலைபாடுகள் இருந்துள்ளன் என்பது உண்மைதான். ஆனால் இவை ஒரே காலகட்டத்தில் இருக்கவில்லை. பல்வேறு காலகட்டங்களில் இருந்த நிலைகளாகும்.

முதலாவது நிலை

நபிகள் நாயகம் (ஸல) அவர்கள் மக்காவில் இருந்த போது அன்றைய மக்கள் ஆஷூரா தினத்தில் நோன்பு வைத்ததன் அடிப்படையில் தாமும் நோன்பு நோற்றனர். இதற்குக் காரணம் மூஸா நபி காப்பாற்றப்பட்ட சம்பவம் அல்ல. மாறாக அன்றைய தினம் கஃஅபாவிற்கு புது திரை மாற்றப்படும் நாள் என்ற அடிப்படையில் அந்த நோன்பு வைக்கப்பட்டது.

1592 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: ரமளான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் 10ஆம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள்.

அது தான்  கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. அல்லாஹ் ரமளானுடைய நோன்பைக் கடமையாக்கிய போது, யார் (ஆஷூராவுடைய) நோன்பு நோற்க விரும்புகிறாரோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும்!

யார் அதை விட்டுவிட விரும்புகிறாரோ அவர் அதை விட்டுவிடட்டும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

பார்க்க: புகாரி : 1592

இரண்டாவது நிலை

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் இருந்த காலம்வரை ஆஷூரா நோன்பு கடமையான நோன்பாக இருந்தது. அவர்கள் மதீனா வந்த பின்னர் ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டது. ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின் ஆஷூரா நோன்பு மக்கள் விருப்பத்தில் விடப்பட்டது. விரும்பினால் வைக்கலாம். விரும்பினால் விட்டு விடலாம் என்பது இரண்டாவது நிலை.

1893 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: குறைஷிக் குலத்தினர் அறியாமைக் காலத்தில் ஆஷூரா தினத்தில் நோன்பு நோற்று வந்தனர். ரமளான் நோன்பு கடமையாக்கப்படும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் ஆஷூரா நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள்.

(ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்ட) பின்னர் (ஆஷூரா நாளின் நோன்பை) நோற்க விரும்புபவர் அதை நோற்கட்டும்! விட்டுவிட விரும்புபவர் அதை விட்டுவிடட்டும்! எனக் கூறினார்கள்.

மேலும் பார்க்க : புகாரி 1892, 1893, 2000, 2001, 2002, 2003

மூன்றாவது நிலை

இதன் பின்னர் அதே நாளில் யூதர்களும் நோன்பு நோற்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறிகிறார்கள். அவர்களிடம் இதற்கான காரணத்தை வினவுகிறார்கள். மூஸா நபி காப்பாற்றப்பட்ட நாள் என்று அவர்கள் சொன்ன போது மூஸா நபியை மதிப்பதில் நாங்கள் உங்களுக்கு சளைத்தவர்கள் அல்லர் என்று கூறி அன்றைய தினம் நோன்பு வைப்பதை ஆர்வமூட்டினார்கள். இது மூன்றாவது நிலையாகும்.

2004 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றதைக் கண்டார்கள்.

இது என்ன நாள்?

என்று கேட்டார்கள். யூதர்கள் இது நல்ல நாள்.

இஸ்ரவேலர்களை அவர்களின் எதிரிகளிடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய நாள்;

இதற்காக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள்’ என்று கூறினார்கள்.

உங்களைவிட மூஸாவுக்கு அதிக உரிமை படைத்தவன் நான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டுத் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்குக்) கட்டளையும் இட்டார்கள்.

பார்கக : புகாரி 2004, 3397, 3943, 4680, 4737

இந்த ஹதீஸ்களைக் கவனிக்கும் போது கீழ்க்காணும் விஷயங்கள் நமக்குத் தெரிய வருகிறது.

மக்காவில் கடமையான நோன்பாக நோன்பாக ஆஷூரா நோன்பு இருந்தது.

மதீனா வந்த ஆரம்ப கட்டத்தில் அது அனுமதிக்கப்பட்ட நோன்பாக ஆனது.

மூஸா நபியை அல்லாஹ் காப்பாற்றியதற்காக யூதர்கள் நோன்பு நோற்பதை நபியவர்கள் அறிந்த பின் அது ஆர்வமூட்டப்பட்ட சுன்னத்தாக மாறியது.

ஆரம்பத்தில் பல விஷயங்களில் யூதர்களுடன் ஒத்துப் போவதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரும்பியிருந்தார்கள்.

3558 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் முடியை, (தமது நெற்றியின் மீது) தொங்கவிட்டு வந்தார்கள். இணை வைப்பாளர்கள் தங்கள் தலை(முடி)களைப் பிரித்து (நெற்றியில் விழ விடாமல் இரு பக்கமும் தொங்க விட்டு) வந்தார்கள். வேதக்காரர்கள் தங்கள் தலை(முடி)களை (நெற்றியின் மீது) தொங்க விட்டு வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த விஷயங்களில் தமக்கு (இறைக்) கட்டளை எதுவும் இடப்படவில்லையோ அந்த விஷயங்களில் வேதக்காரர்களுடன் ஒத்துப் போக விரும்பி வந்தார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் தலை(முடி)யை (இரு பக்கங்களிலும்) பிரித்து (வகிடெடுத்து)க் கொண்டார்கள்.

பார்க்க : புகாரி 3558

பின்னர் யூதர்களுக்கு அனைத்து விஷயத்திலும் மாறுபட வேண்டும் என்ற நிலைபாட்டை எடுக்கிறார்கள்.

3456 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் அங்குலம் அங்குலமாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள்.

எந்த அளவிற்கென்றால் அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் புகுந்திருந்தால் கூட நீங்களும் அதில் புகுவீர்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், வேறெவரை? என்று பதிலளித்தார்கள்.

பார்க்க : புகாரி 3456, 7320

இந்த அடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய கடைசி வருடத்தில் அடுத்த ஆண்டு நான் உயிருடன் இருந்தால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு அவர்கள் உயிருடன் இருக்கவில்லை.

2088 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, நோன்பு நோற்குமாறு (மக்களுக்கும்) கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், “அல்லாஹ்வின் தூதரே! இது யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே?” என்று வினவினர்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம்” என்று கூறினார்கள்.

ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள்.

அடுத்த ஆண்டுவரை நான் உயிரோடிருந்தால் ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன்” என்று கூறியதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அதாவது ஆஷூரா நாளில்’ எனும் குறிப்புடன் இடம் பெற்றுள்ளது.

பார்க்க : முஸ்லிம் 2089

ஆஷூரா குறித்த மேற்கண்ட நிலைபாடுகள் வெவ்வேறு காலகட்டத்தில் நடந்தவையாகும். எனவே இதில் முரண்பாடு ஏதும் இல்லை.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed