ஆஷூரா நோன்பு எப்போது எத்தனை நாட்கள் நோற்க வேண்டும்?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பு நோற்பதை நமக்கு சுன்னத்தாக ஆக்கியிருக்கிறார்கள்.

ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் மக்கள் ஆஷூரா (முஹர்ரம் பத்தாம் நாளில்) நோன்பு நோற்று வந்தார்கள். அது தான் கஅபாவுக்குப் புதிய திரை போடப்படும் நாளாக இருந்தது. ரமலானுடைய நோன்பை அல்லாஹ் கடமையாக்கிய போது, யார் ஆஷூராவுடைய நோன்பு நோற்க விரும்புகிறார்களோ அவர் அதை நோற்றுக் கொள்ளட்டும். யார் அதை விட்டு விட விரும்புகிறாரோ, அவர் அதை விட்டு விடட்டும். என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 1592

இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

அறியாமைக் கால (குறைஷி) மக்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்று வந்தனர். ரமலான் நோன்பு கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும், முஸ்லிம்களும் அந்நோன்பை நோற்றார்கள். ரமலான் நோன்பு கடமையாக்கப்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஆஷூரா நாள் அல்லாஹ்வுடைய நாட்களில் உள்ள நாளாகும். எனவே விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்கலாம். விரும்பியவர் விட்டு விடலாம் எனக் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 2693

மேற்கண்ட ஹதீஸ்கள் ஆஷூரா நோன்பு நோற்பது சிறப்பிற்குரியதும், சுன்னத்தானதும் ஆகும் என்பதைத் தெளிவுபடுத்துகின்றன.

ஆஷூரா நோன்பு ஏன்?

ஆஷூரா நோன்பு எதற்காக நோற்கிறோம் என்பதை இன்றைக்கு அதிகமான மக்கள் அறிந்திருக்கவில்லை. எதற்காக இந்நோன்பு என்பதைப் பற்றி ஹதீஸ்களில் தெளிவாகவே வந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனா வந்த போது யூதர்கள் ஆஷூரா நாளில் நோன்பு நோற்பதைக் கண்டார்கள். “இது என்ன நாள்” என்று கேட்டார்கள். “இது மாபெரும் நாள்! மூஸா (அலை) அவர்களை இந்த நாளில் தான் அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னின் கூட்டத்தாரை (கடலில்) மூழ்கடித்தான். ஆகவே, மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் விதத்தில் இந்நோன்பை நோற்றார்கள்” என்று யூதர்கள் கூறினர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான் அவர்களை விட மூஸாவுக்கு நெருக்கமானவன் என்று கூறிவிட்டு அந்த நாளில் தாமும் நோன்பு நோற்று, தம் தோழர்களுக்கும் நோன்பு நோற்கும்படி கட்டளை இட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : புகாரி 3397

நான் தான் மிக உயர்ந்த கடவுள் என்று கூறிய சர்வாதிகார அரசன் கொடியவன் ஃபிர்அவ்னும், அவனுடைய கூட்டத்தினரும் அழிக்கப்பட்ட மகிழ்ச்சியான நாள் தான் ஆஷூரா ஆகும். இதற்காக அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு தான் ஆஷூரா நோன்பு நோற்கப்படுகிறது.

ஆனால் இன்றைக்கு சில முஸ்லிம்கள் ஆஷூரா நாளைத் துக்க நாளாக அனுஷ்டித்து இறைவனுக்கு நோற்க வேண்டிய நோன்பை ஹஸனார் ஹுஸைனார் நோன்பு என்ற பெயரில் அவர்களுக்காக நோற்கின்றனர். அல்லாஹ் அல்லாதவர்களுக்காக நோற்கப்படும் நோன்பு நிச்சயமாக இணைவைப்புக் காரியம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை.

எனவே, இது போன்ற தவறான செயல்களை விட்டும் நாம் விலகிக் கொள்ளவேண்டும்.

ஆஷூரா நோன்பின் சிறப்புகள்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஆஷூரா எனும் இந்த நாளையும், (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை.

நூல் : புகாரி 2006

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)

நூல் : முஸ்லிம்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள்.

அறிவிப்பவர் : அபூகதாதா (ரலி)

நூல் : முஸ்லிம்

யூதர்களுக்கு மாறு செய்வோம்

ஆஷூரா நோன்பு என்பது பத்தாவது நாள் நோற்கின்ற நோன்பாக இருந்தாலும் யூதர்களும் அந்நாளில் நோன்பு நோற்றதால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யூதர்களுக்கு மாற்றம் செய்யும் வகையில் ஒன்பதாவது நாளும் நோன்பு வைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஆஷூரா நாளில் தாமும் நோன்பு நோற்று, மக்களுக்கும் கட்டளையிட்டார்கள். அப்போது மக்கள், (அது) யூதர்களும், கிறிஸ்தவர்களும் கண்ணியப்படுத்தும் நாளாயிற்றே என்று வினவினர். அதற்கு நபியவர்கள், இன்ஷா அல்லாஹ், (அல்லாஹ் நாடினால்) அடுத்த ஆண்டில் நாம் (முஹர்ரம்) ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்போம் என்று கூறினார்கள். ஆனால், அடுத்த ஆண்டு வருவதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள்.

மற்றொரு அறிவிப்பில், அடுத்த ஆண்டு வரை நான் உயிரோடு இருந்தால், ஒன்பதாவது நாளில் நோன்பு நோற்பேன் என்று கூறியதாக வந்துள்ளது.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : முஸ்லிம் 2722

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ஒன்பதாவது நாள் நோன்பு நோற்காவிட்டாலும் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்குமாறு கூறியிருப்பதால், நாம் ஒன்பது, பத்து ஆகிய இரண்டு நாட்களும் நோன்பு நோற்க வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed