2:35, 7:19, 7:22, 7:27, 20:121 ஆகிய வசனங்களில் “ஆதம் நபி, சொர்க்கத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்’‘ என்று கூறப்பட்டுள்ளது. இதற்கு இருவேறு கருத்துக்கள் கொள்ளப்பட்டுள்ளன.
‘சொர்க்கம்‘ என்று தமிழ்ப்படுத்திய இடத்தில் ‘ஜன்னத்‘ என்ற சொல் இடம் பெற்றுள்ளது.
மறுமையில் நல்லோர்க்கு இறைவன் வழங்கவுள்ள சொர்க்கச் சோலையும் ‘ஜன்னத்‘ எனக் கூறப்படுகிறது.
இவ்வுலகில் அமைந்துள்ள தோட்டங்களும் ‘ஜன்னத்‘ எனக் கூறப்படுகிறது.
திருக்குர்ஆனில் இரண்டு கருத்துக்களிலும் இந்தச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
ஆதம் (அலை) சொர்க்கத்தில் தங்க வைக்கப்பட்டு இறைக் கட்டளையை மீறியதால் வெளியேற்றப்பட்டார் என்று பலர் கூறுகின்றனர்.
ஆதம் (அலை) பூமியில் படைக்கப்பட்டதாகத் திருக்குர்ஆன் (2:30) கூறுவதாலும், சொர்க்கத்தில் ஷைத்தான் நுழைந்து வழிகெடுக்க முடியாது என்பதாலும், பூமியில் ஆதமுக்காக அமைக்கப்பட்ட சோலையில் தான் தங்க வைக்கப்பட்டார்; அங்கிருந்து தான் வெளியேற்றப்பட்டார் என்றும் சிலர் கூறுகின்றனர்.
இரண்டில் எதை ஏற்றாலும் இஸ்லாத்தின் அடிப்படைக்கோ, இந்நிகழ்ச்சியிலிருந்து பெற வேண்டிய பாடத்துக்கோ எந்தப் பாதிப்பும் ஏற்படாது.