//ஆட்சி & அதிகாரம்!//

ஒரு ஜமாத்தை நிர்வாகம் செய்கின்ற பொறுப்போ, அல்லது மக்களை நிர்வகிக்கின்ற நிர்வாகப் பொறுப்போ நாமாகப் போய் எனக்குப் பதவி தாருங்கள்! என்று கேட்பது முகம் சுளிக்க வைக்கின்ற மோசமான காரியம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

நானும் என் சமூகத்தாரில் இரண்டு பேரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். (என்னுடன் வந்த) அவ்விருவரில் ஒருவர், “எங்களுக்குப் பதவி தாருங்கள், அல்லாஹ்வின் தூதரே!’’ என்று கேட்டார். மற்றொருவரும் அவ்வாறே கேட்டார். நபி (ஸல்) அவர்கள், “கேட்பவருக்கும் ஆசைப்படுபவருக்கும் நாம் இதை (பதவியை) வழங்கமாட்டோம்’’ என்று சொன்னார்கள்.

ஆதாரம்: புகாரி-7149

பதவியை எனக்குத் தாருங்கள் என்று கேட்பவருக்கும், பதவி வெறி பிடித்து நிர்வாகப் பொறுப்பை ஆசைப்படுவோருக்கும் ஒருபோதும் இந்தப் பதவி வழங்கப்படக்கூடாது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிகக் கடுமையான முறையில் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.

பேணத் தவறினால் சொர்க்கம் ஹராம்:

பொதுமக்களின் பொறுப்பு வழங்கப்பெற்ற ஒருவர் மக்கள் நலன் காக்கத் தவறினால் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர மாட்டான் என்று பதவி வெறி பிடித்து, பொறுப்பைச் சரிவர நிறைவேற்றாத நபர்களைப் பற்றி எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.

மஅகில் பின் யஸார் (ரலி) அவர்கள் இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அன்னாரைச் சந்தித்து நலம் விசாரிப்பதற்காக (அன்றைய பஸ்ரா நகர ஆட்சியர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் சென்றார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள் “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நபி (ஸல்) அவர்கள், “ஓர் அடியானுக்குக் குடிமக்களின் பொறுப்பை அல்லாஹ் வழங்கியிருக்க, அவன் அவர்களது நலனைக் காக்கத் தவறினால், சொர்க்கத்தின் வாடையைக்கூட அவன் பெறமாட்டான்’ என்று சொல்ல நான் கேட்டேன்’’ எனக் கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி-7150

மக்களை நிர்வகிக்கும் அதிகாரப் பொறுப்பை ஏற்றுக் கொண்ட ஒருவர் மக்களுக்கு மோசடி செய்தாலோ, மக்களை ஏமாற்றினாலோ அந்தப் பொறுப்பாளிகளுக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடை செய்து விடுவான் என்ற கடுமையான வார்த்தைப் பிரயோகங்களில் எச்சரிக்கின்றார்கள்.

நாங்கள் மஅகில் பின் யஸார் (ரலி) அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். அப்போது (பஸ்ராவின் ஆட்சியர்) உபைதுல்லாஹ் பின் ஸியாத் உள்ளே வந்தார். அவரிடம் மஅகில் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன் என்று சொல்லிவிட்டு(ப் பின்வருமாறு) கூறினார்கள்:

“முஸ்லிம் குடிமக்களின் நிர்வாகப் பொறுப்பை ஏற்கும் ஒருவர் அவர்களுக்கு மோசடி செய்த நிலையில் இறந்துவிடுவாரானால், சொர்க்கத்தை அவருக்கு அல்லாஹ் தடை செய்துவிடுகிறான்’’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி-7151

“ஓர் ஆட்சியாளர் முஸ்லிம்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக் கொண்ட பின்னர், அவர்களுக்காக உழைக்காமலும் (அவர்கள்மீது) அக்கறை காட்டாமலும் இருந்தால், அவர்களுடன் அவர் சொர்க்கத்துக்குச் செல்லவே மாட்டார்’’ என்று சொல்ல நான் கேட்டேன் எனக் கூறினார்கள்.

ஆதாரம்: முஸ்லிம்-3735

மக்களில் சிறந்தவர்கள்:

பதவி, அதிகார விஷயத்தில் மக்களின் பார்வையில் ஏராளமானோர் சிறந்தவர்களாகத் தெரியலாம். ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் மக்களில் சிறந்தவர்கள் யார் என்பதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) வர்ணிக்கின்றார்கள்.

“இந்த தலைமைப் பதவி விஷயத்தில் தாமாக விழும்வரை அதில் கடுமையான வெறுப்பு காட்டக் கூடியவர்களையே நீங்கள் மக்களில் சிறந்தவர்களாகக் காண்பீர்கள்’’ என்று கூறப்படுகிறது.

ஆதாரம்: முஸ்லிம்-4945

தலைமைப் பொறுப்பு, தானாகத் தன்னுடைய தலைக்கு மேலே விழுந்தாலே தவிர, தலைமைப் பொறுப்பைக் கண்டு விரண்டு ஓடுபவர்களும், தலைமைப் பொறுப்புகள் விஷயத்தில் கடுமையான வெறுப்பு காட்டக் கூடியவர்களும் தான் மக்களில் சிறந்தவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் சான்று பகர்கின்றார்கள்.

பொறுப்பாளிகளுக்கு சிறப்பு பிரார்த்தனை:

சமுதாய விஷயங்களில் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவருக்கு சிறப்புமிக்க பிரார்த்தைனையை இறைவனிடத்தில் பிரத்தியேகமாக நபி (ஸல்) அவர்கள் கேட்கின்றார்கள். இந்தப் பிரார்த்தனைகளுக்குச் சொந்தக்காரர்களாக, பொறுப்பாளிகள் மாற முயற்சிக்க வேண்டும்!

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, “இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால், அவரை நீயும் சிரமத்திற்குள்ளாக்குவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்து கொள்வாயாக!’’ என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

ஆதாரம்: முஸ்லிம்-3732

பொறுப்பாளியாக இருப்பவர் மக்களுக்கு சிரமத்தையோ அல்லது சிரமம் தருகின்ற வேலையிலோ ஈடுபட்டால் அல்லாஹ்வின் அந்தப் பொறுப்பாளிகளுக்குக் கடுமையான சிரமத்தை ஏற்படுத்துவான். எனவே, மக்களிடத்தில் மென்மையான முறையில் பொறுப்புகளைக் கையாள வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பாடம் நடத்துகின்றார்கள்.

மிகவும் மோசமானவர்கள்:

மக்களின் பொறுப்பைத் தன்னகத்தே கொண்டு செயல்படுகின்ற பொறுப்பாளர்களில் நல்லவர்களும் இருக்கின்றார்கள்; தீயவர்களும் இருக்கின்றார்கள். பொறுப்பாளர்களில் மிகக் கெட்டவர்கள் யார் என்பதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்கள் (அன்றைய பஸ்ராவின் ஆட்சியராயிருந்த) உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் சென்று, “அன்புக் குழந்தாய்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ‘நிர்வாகிகளில் மிகவும் மோசமானவர், இரக்கமற்ற கல் நெஞ்சக்காரர்தாம்’ என்று கூறியதை நான் கேட்டேன். அவர்களில் ஒருவராக நீ ஆகிவிட வேண்டாம் என உன்னை நான் எச்சரிக்கிறேன்’’ என்று கூறினார்கள்.

ஆதாரம்: முஸ்லிம்-3736

மக்களை நிர்வாகம் செய்பவர்கள் கல் நெஞ்சக்காரர்களாக இருக்கக் கூடாது. இளகிய மனம் கொண்டவர்களாக இருக்க வேண்டும். அல்லாஹ்வை அஞ்சி மக்களை நிர்வகிக்காமல், தன்னுடைய மனம் போன போக்கிலே நிர்வாகம் செய்பவர்கள் தங்களுடைய உள்ளங்களைக் கல் நெஞ்சம் கொண்டவர்களாக மாற்றிக் கொள்வார்கள். இத்தகையவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சர்க்கை விடுக்கின்றார்கள்.

பொறுப்பாளர்களின் தனிச்சிறப்பு:

அல்லாஹ்வுக்காக நேர்மையான முறையிலும், இறையச்சத்தோடும் மக்களை நிர்வகிக்கின்ற ஆட்சியாளர்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் தனிச்சிறப்பை வழங்குகின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நேர்மையான ஆட்சியாளர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப்பக்கத்தில் ஒளியாலான மேடைகளில் இருப்பார்கள். அவனுடைய இரு கைகளுமே வலக்கரமே (வளமிக்கதே). அவர்கள் தமது நிர்வாகத்திலும், குடும்பத்திலும், தாம் பொறுப்பேற்றுக் கொண்ட (அனைத்)திலும் நியாயமாக நடந்து கொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்).

ஆதாரம்: முஸ்லிம்-3731

உமர் (ரலி) அவர்களின் அற்புதமான குணம்:

உமர் (ரலி) ஆட்சிப் பதவியில் இருக்கும் போது மக்கள் அவரையும், அவரது ஆட்சி முறையையும் புகழ்ந்து பேசினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள் சொன்ன பதில் அற்புதமான ஓர் எடுத்துக் காட்டாக, பொறுப்பாளர்களுக்கு இருக்கின்றது.

(நான் வகித்த இந்தப் பதவி இறைவனிடம்) எனக்குச் சாதகமாகவும் வேண்டாம்; பாதகமாகவும் வேண்டாம்; சரிக்குச் சமமாக அமைந்த நிலையில் இதிலிருந்து நான் தப்பித்தாலே போதும் என்றே விரும்புகிறேன். நான் உயிரோடு இருக்கும்போது(தான் பதவியைச் சுமந்தேன் என்றால், எனக்குப் பின் ஒருவரை நியமிப்பதன் மூல)ம் இறந்த பிறகும் இதைச் சுமக்க நான் தயாராயில்லை’’ என்று கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி-7218

உமர் (ரலி) அவர்கள் தன்னுடைய ஆட்சிக் காலத்தில் பொறுப்பேற்றுக் கொண்ட விஷயங்களில், நான் என்னுடைய இறைவனிடத்தில் இருந்து தப்பித்தாலே போதும் என்று நிர்வாக விஷயத்தில் அல்லாஹ்வைப் பற்றிக் கடுமையாக அஞ்சக் கூடியவர்களாக இருந்தார்கள். மேலும், எனது ஆட்சி காலத்திற்குப் பிறகு நான் ஒருவரை நியமித்து மரணத்திற்குப் பிறகும் பொறுப்பை சுமக்கத் தயாரில்லை என்று தெள்ளத் தெளிவாக, ஆட்சி பொறுப்பு ஒரு அமானிதம் தான் என்பதை விளக்குகின்றார்கள்.

இறுதியாக:

பொறுப்பு வழங்கப்பட்டவர்கள் மற்றும் பொறுப்பில் இருந்து விலகியவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அற்புதமான முறையில் விளக்குகின்றார்கள்.

அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிந்திட) தன் குதிரையின் கடிவாளத்தைக் கையில் பிடித்துக் கொண்டு, பரட்டைத் தலையுடன் இரு கால்களும் புழுதியடைந்தவனாகச் செல்கின்ற அடியானுக்கு சொர்க்கம் கிடைக்கட்டும். (அவன் எத்தகையவன் என்றால்) அவன் (படையின் முன்னணிக்) காவல் அணியில் நியமிக்கப்பட்டிருப்பானாயின் அதிலேயே (ஆட்சேபணை ஏதுமின்றி) இருப்பான்.

பின்னணிப் படையில் நியமிக்கப்பட்டிருப்பானாயின் அதிலும் (எந்த முணுமுணுப்புமின்றி திருப்தியுடன்) இருப்பான். அவன் (யாரையும் சந்திக்க) அனுமதி கேட்டால் அவனுக்கு அனுமதி தரப்படாது; அவன் பரிந்துரை செய்தால் அது (மக்களால்) ஏற்கப்படாது. (அந்த அளவிற்கு சாமானியனாக, எளியவனாகக் கருதப்படுவான்.)

ஆதாரம்: புகாரி-2887

பொறுப்பு வழங்கப்பட்டுப் பின்னர் பொறுப்பு கைமாறியவர்களுக்கும், பொறுப்பை வகிப்பவர்களுக்கும் இந்தச் செய்தி மிக அற்புதமான உதாரணம். மேல்நிலை, கீழ்நிலை என்று இல்லாமல், இதன் அடிப்படையில் பொறுப்புகளில் செயல்பட்டு, சொர்க்கம் செல்லப் பாடுபட வேண்டும்.

பதவியை மட்டுமே குறியாகக் கொண்டு செயல்படாமல், சுவனம் செல்வதை மட்டுமே இலக்காகக் கொண்டு நமது இலட்சியப் பயணத்தை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இந்த ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வலியுறுத்துகின்றார்கள்.

ஒரு ஜமாஅத்தையோ, அரசாங்கப் பொறுப்புகளையோ நிர்வாகம் செய்கின்ற யாராக இருந்தாலும் அல்லாஹ்வுக்குப் பயந்து, நீதிக்கு சாட்சியாளர்களாக இருந்து, பதவி, புகழ், அதிகாரம் கிடைப்பதற்காக அல்லாமல் மக்களை நிர்வாகம் செய்து இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெறுவோமாக!!

www.eagathuvam.com

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *