அஸர் தொழுகைக்குப் பின் எந்தத் தொழுகையும் தொழக் கூடாதா?

அஸர் தொழுகைக்குப் பின் எந்தத் தொழுகையும் தொழக் கூடாது என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன.  நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் லுஹருடைய பின் சுன்னத் இரண்டு ரக்அத்களை அஸர் தொழுகைக்குப் பின்னால் தொழுதுள்ளார்கள்.  குறைப் என்பார் கூறுகின்றார் : இப்னு அப்பாஸ் (ரலி), மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர் (ரலி) ஆகியோர் என்னிடம் “ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று எங்கள் அனைவரின் ஸலாமையும் அவருக்குக் கூறுவீராக! அஸ்ருக்குப் பின் இரண்டு ரக்அத் தொழுவது பற்றி அவரிடம் கேட்பீராக! நபிகள் நாயகம் (ஸல்) அதைத் தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க, அத்தொழுகையை (ஆயிஷாவே!) நீங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகிறோம் என்று கேட்பீராக!’ என்று கூறினார்கள். (மேலும்) இப்னு அப்பாஸ் (ரலி), தாமும் உமர் (ரலி) அவர்களும், இவ்வாறு (அஸ்ருக்குப் பின்) தொழுபவர்களை அடிப்பவர்களாக இருந்ததையும் தெரிவிக்கச் சொன்னார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, நான் அனுப்பப்பட்ட விஷயத்தைக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் “நீர் உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் கேளும்!’‘  என்று கூறினார்கள். நானும் இம்மூவரிடம் திரும்பி வந்து ஆயிஷா (ரலி) கூறியதைச் சொன்னேன். உம்மு ஸலமா (ரலி) அவர்களிடம் சென்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்ட கேள்வியைக் கேட்குமாறு மீண்டும் அனுப்பினார்கள். (உடனே நான் உம்மு சலமா (ரலி) அவர்களிடம் வந்து விஷயத்தைக் கூறிய போது) நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்விரு ரக்அத்களைத் தடை செய்ததை நான் கேட்டுள்ளேன். பிறகு அவர்கள் அஸ்ர் தொழுதுவிட்டு இரண்டு ரக்அத்கள் தொழுததை நான் பார்த்தேன். தொழுதுவிட்டு எனது வீட்டிற்கு வந்தார்கள். அப்போது என்னுடன் அன்சாரிகளில் பனூஹராம் எனும் கோத்திரத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். அவர்களில் ஒரு பெண்ணை, தொழுது கொண்டிருக்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அனுப்பி, ” நீ அவர்களுக்கு அருகில் சென்று “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் இந்த இரண்டு ரக்அத்கள் தொழுவதைத் தடுத்ததை நான் கேட்டிருக்கிறேன். ஆனால் இப்போது தாங்களே அதைத் தொழுவதை நான் பார்க்கிறேனே? என நான் கேட்டதாக அவர்களிடம் நீ கூறு. அவர்கள் தம் கைகளினால் சைகை செய்தால் நீ பின்வாங்கி விடு!”  எனக் கூறி அனுப்பினேன். அப்பெண்ணும் கூறப்பட்டது போன்றே செய்தார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம் கைகளால் சைகை செய்த போது அப்பெண்மணி திரும்பி வந்து விட்டார். தொழுகையை முடித்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், “”அபூ உமைய்யாவின் மகளே! அஸ்ருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்தைப் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையைச் சேர்ந்தவர்கள் வந்ததால் லுஹ்ருக்குப் பின்னால் உள்ள இரண்டு ரக்அத்களை நான் தொழ முடியவில்லை; அத்தொழுகையே இந்த இரண்டு ரக்அத்களாகும்” என்றார்கள் என உம்மு சலமா (ரலி) அவர்கள் விடையளித்தார்கள். நூல் : புகாரி 1233 தவறிப் போன லுஹருடைய பின் சுன்னத் இரண்டு ரக்அத்களை அஸருக்குப் பின்னால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுத போது, உம்மு ஸலமா (ரலி) அவர்கள் இது தடுக்கப்பட்ட காரியமாயிற்றே எனக் கருதி இதை நபியவர்களுக்கு ஞாகப்படுத்துகின்றார்கள். ஆனால் நபியவர்கள் இது உபரியான வணக்கமல்ல. விடுபட்ட சுன்னத் தொழுகை என்று பதிலளிக்கின்றார்கள். எனவே அஸருக்குப் பின்னால் உபரியாக (நஃபில்) தொழுவதே கூடாது என்பதை அறியலாம். ஏகத்துவம்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed