அவசியமற்ற ஆய்வுகள்

‘கஹ்ஃபு’ (குகை) என்ற 18வது அத்தியாயத்தின் 19வது வசனத்தில் ‘வல்யத்தலத்தஃப்’ என்ற ஒரே ஒரு சொல்லை மட்டும் பெரிய எழுத்தாக எழுதியிருப்பார்கள்.

திருக்குர்ஆனின் எழுத்துக்களை எண்ணி, அதில் சரிபாதி இடமாக இந்தச் சொல் இடம் பெற்றுள்ளது என ஓரத்தில் குறிப்பு எழுதியுள்ளனர்.

இப்படி எழுத்துக்களை, புள்ளிகளை, குறியீடுகளை எண்ணுமாறு அல்லாஹ்வோ, அவனது தூதரோ நமக்குக் கட்டளையிடவில்லை. ஒரு சொல் சரிபாதி இடத்தில் அமைந்திருப்பதால் அதற்கு மார்க்கத்தில் எந்த முக்கியத்துவமும் இல்லை.

இதில் மக்களுக்கு எந்த அறிவுரையும், வழிகாட்டலும் இல்லை. மேலும் குர்ஆனில் அதை மட்டும் பெரிதாக எழுதியிருப்பது குர்ஆனுடன் விளையாடுவதாகவே அமையும்.

இவை வேண்டாத வேலைகள். பிற்காலத்தில் வரும் மக்களுக்கு இது ஒரு புரியாத புதிர் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கும்.

இவ்வாறு எழுத்துக்களை எண்ணியே சிலர் வழிகெட்டுப் போனதையும் இங்கு நினைவு கூர வேண்டும்.

மக்கீ மதனீ

திருக்குர்ஆனின் சில வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையின்போது அருளப்பட்டன. அவை ‘மக்கீ’ எனப்படும். சில வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையின்போது அருளப்பட்டன. அவை ‘மதனீ’ எனப்படும்.

உஸ்மான் (ரலி) அவர்கள் தொகுத்த திருக்குர்ஆன் மூலப் பிரதிகளில் “இந்த அத்தியாயம் மக்காவில் அருளப்பட்டது; இந்த அத்தியாயம் மதீனாவில் அருளப்பட்டது” என்று எந்தக் குறிப்பும் இல்லை.

ஆனாலும் உலகமெங்கும் அச்சிடப்படும் குர்ஆன் பிரதிகளில் சில அத்தியாயங்களுக்கு மேல் “இது மக்காவில் அருளப்பட்டது” என்றும், வேறு சில அத்தியாயங்களின் மேல் “இது மதீனாவில் அருளப்பட்டது” என்றும் அச்சிடப்படுகின்றன.

திருக்குர்ஆனில் ஒரு வசனத்தை மக்காவில் அருளப்பட்டது என்று முடிவு செய்ய வேண்டுமானால் அதற்குத் தகுந்த சான்றுகள் இருக்க வேண்டும். இத்தகைய சான்றுகள் பல வகைப்படும்.

இந்த வசனம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இந்தச் சந்தர்ப்பத்தில் அருளப்பட்டது என்று நபித் தோழர்கள் குறிப்பிட்டிருந்தால் அதனடிப்படையில் அந்த வசனம் எங்கே அருளப்பட்டது என்று தீர்மானிக்க முடியும்.

அல்லது ஒரு வசனத்தின் கருத்தைக் கவனத்தில் கொண்டு இந்த வசனம் இந்தக் கட்டத்தில் தான் அருளப்பட்டிருக்க வேண்டும் என்று தீர்மானிக்கலாம். உதாரணமாக போர் செய்வது தொடர்பான வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையில் அருளப்பட்டிருக்க முடியாது. ஏனெனில் அவர்கள் மக்காவில் எதிரிகளை எதிர்த்துப் போரிடும் நிலையில் இருக்கவில்லை.

அது போல குற்றவியல் சட்டங்கள் குறித்த வசனங்களை எடுத்துக் கொண்டால் இது போன்ற சட்டங்களை ஒரு ஆட்சியை நிறுவிய பிறகு தான் அமுல்படுத்த முடியும் என்ற அடிப்படையில் அவை மதீனாவில் அருளப்பட்டவை என்று முடிவு செய்யலாம்.

இத்தகைய சான்றுகள் இல்லாமல் ஒரு அத்தியாயத்தையோ, ஒரு வசனத்தையோ மக்காவில் அருளப்பட்டது என்றோ, மதீனாவில் அருளப்பட்டது என்றோ கூறுவது மிகப்பெரும் தவறாகும்.

பல அத்தியாயங்கள் இரண்டு காலகட்டங்களிலும் அருளப்பட்ட வசனங்களை உள்ளடக்கி உள்ளன. எனவே ஒரு அத்தியாயம் முழுவதும் மக்காவில் அருளப்பட்டது என்றோ, மதீனாவில் அருளப்பட்டது என்றோ குறிப்பிடுவதாக இருந்தால் அதற்குத் தெளிவான சான்றுகள் இருக்க வேண்டும்.

இத்தகைய சான்றுகள் ஏதுமின்றியே மக்காவில் அருளப்பட்டவை, மதீனாவில் அருளப்பட்டவை என்று அத்தியாயங்களின் துவக்கத்தில் அச்சிட்டு வருவதை ஏற்றுக் கொள்ள முடியாது. இது குர்ஆனைக் குறித்து தவறான தகவல் தரும் குற்றத்தில் சேர்ந்து விடும்.

எவ்விதச் சான்றும் இல்லாமல் அவரவர் தமக்குத் தோன்றியவாறு இவ்வாறு குறிப்பிட்டதால் தான் இது விஷயத்தில் மாறுபட்ட நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

உதாரணமாக, திருக்குர்ஆனில் கடைசி இரண்டு அத்தியாயங்களான 113, 114 ஆகிய அத்தியாயங்கள் மக்காவில் அருளப்பட்டவை என்று ஆ.கா. அப்துல் ஹமீது பாகவி அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்ட திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே அத்தியாயங்கள் பற்றி கே.ஏ. நிஜாமுத்தீன் மன்பஈ அவர்கள் மொழிபெயர்த்து வெளியிட்ட குர்ஆன் பிரதிகளில் மதீனாவில் அருளப்பட்டவை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல அத்தியாயங்களில் இது போன்ற கருத்து வேறுபாடுகள் அதிக அளவில் காணப்படுகின்றன. எனவே அத்தியாயங்களின் தலைப்பில் “இவை மக்காவில் அருளப்பட்டவை” அல்லது “மதீனாவில் அருளப்பட்டவை” என்று குறிப்பிடுவதை நாம் தவிர்த்துள்ளோம்.

எங்கே அருளப்பட்டது என்பதைத் தீர்மானிக்க சிலர் தவறான அளவு கோல்களைப் பயன்படுத்தி உள்ளதையும் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

எந்த அத்தியாயத்தில் ‘மனிதர்களே’ என்று அழைக்கும் வசனங்கள் உள்ளனவோ அந்த அத்தியாயங்கள் மக்காவில் அருளப்பட்டவை என்பது இவர்களின் ஒரு அளவுகோல். இந்த அளவுகோல் எவ்விதச் சான்றுமில்லாத அளவுகோலாகும். திருக்குர்ஆனின் நான்காவது அத்தியாயம் மதீனாவில் அருளப்பட்டது என்பதற்குச் சான்றுகள் உள்ளன. அந்த அத்தியாயத்தில் ‘மனிதர்களே’ என்று அழைக்கும் வசனம் முதல் வசனமாக இடம் பெற்றுள்ளதைக் காணலாம்.

அது போல் ‘நம்பிக்கை கொண்டவர்களே’ என்று அழைக்கும் வசனங்கள் இடம் பெறும் அத்தியாயங்கள் மதீனாவில் அருளப்பட்டவை என்பதும் இவர்களின் மற்றொரு அளவுகோலாகும். ஆனால் மக்காவில் அருளப்பட்ட 22வது அத்தியாயத்தில் 77வது வசனத்தில் ‘நம்பிக்கை கொண்டவர்களே’ என்ற அழைப்பு இடம் பெற்றிருப்பதைக் காணலாம்.

எனவே திருக்குர்ஆனில் சில வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மக்கா வாழ்க்கையிலும், சில வசனங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மதீனா வாழ்க்கையிலும் அருளப்பட்டன என்பது உண்மையென்றாலும் இவை தக்க சான்றுகளின் அடிப்படையில் தான் தீர்மானிக்கப்பட வேண்டும். எந்த வசனங்கள் குறித்து இது போன்ற சான்றுகள் கிடைக்கவில்லையோ அந்த வசனங்கள் குறித்து எந்த முடிவும் கூறாமல் இருப்பதே இறையச்சமுடைய மக்களுக்குச் சிறந்ததாகும்.

நாம் இதுவரை கூறிய விளக்கங்களின் அடிப்படையில், அத்தியாயங்களின் பெயர்கள், முப்பது பாகங்கள், கால், அரை, முக்கால் பாகங்கள், ஸஜ்தா அடையாளங்கள், நிறுத்தல் குறிகள், ருகூவுக்கள், சில எழுத்துக்களைப் பெரிதாக எழுதுதல், மக்கீ மதனீ என்று தலைப்பில் எழுதுதல் போன்றவை குர்ஆனின் மூலப் பிரதியில் இல்லாமல் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டவை என்பதை எப்போதும் நினைவில் கொள்ள வேண்டும்.

முஸ்லிம் சமுதாயம் விழிப்புணர்வு பெற்று இந்த உண்மைகளைச் சரியாகப் புரிந்து கொள்வார்களானால் மூலப் பிரதியில் இல்லாத, பின்னாளில் ஓரங்களிலும் தலைப்புகளிலும், வசனங்களுக்கு இடையிலும் சேர்க்கப்பட்ட அனைத்தையும் நீக்கி விடுவது குர்ஆனுக்குச் செய்யும் பெரிய தொண்டாக இருக்கும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed