அல்ஹம்து சூரா ஓதாவிட்டால் தொழுகை கூடுமா?

தொழாமல் இருந்த ஒருவர் தொழ ஆரம்பிக்கும் போது அல்ஹம்து சூரா தெரியவில்லை. இவர் அல்ஹம்து சூரா ஓதாமல் தொழுதால் அந்தத் தொழகை ஏற்றுக் கொள்ளப்படுமா?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

திருக்குர்ஆனின் தோற்றுவாய் (எனும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை) ஓதாதவருக்குத் தொழுகை கிடையாது.

அறிவிப்பவர் : உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி)

நூல் : புகாரி 756

சூரத்துல் ஃபாத்திஹா ஓதாவிட்டால் தொழுகை இல்லை என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள். எனவே சூரத்துல் ஃபாத்திஹாவை மனனம் செய்தவர்கள் அதை ஓதாமல் தொழுகக்கூடாது. அப்படித் தொழுதால் அந்தத் தொழுகை ஏற்கப்படாது.

ஆனால் புதிதாக இஸ்லாத்துக்கு வந்தவர்களோ அல்லது தொழுகை முறை சரியாகத் தெரியாதவர்களோ புதிதாகத் தொழ ஆரம்பிக்கும் போது அந்தச் சூழலில் சூரத்துல் ஃபாத்திஹாவை மனனம் செய்திருக்க மாட்டார்கள்.

இந்நிலையில் இவர்கள் தொழுகையில் ஈடுபடுவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையுமில்லை. இவர்களின் தொழுகையை இறைவன் ஏற்றுக் கொள்ளமாட்டானோ என்று சந்தேகப்படத் தேவையில்லை.

அறியாமை, மறதி போன்ற காரணங்களுக்கு இஸ்லாத்தில் மன்னிப்பு உள்ளது.

முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுதுகொண்டிருந்தேன். அப்போது (தொழுதுகொண்டிருந்த) மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான் “யர்ஹமுக் கல்லாஹ்’ என்று (மறுமொழி) கூறினேன். உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான் “என்னை என் தாய் இழக்கட்டும்! நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்?” என்று கேட்டேன். மக்கள் தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்று நான் அறிந்துகொண்டு அமைதியாகி விட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்தார்கள். அவர்களுக்கு முன்னரோ பின்னரோ அவர்களைவிட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை; அடிக்கவுமில்லை; திட்டவுமில்லை. “இந்தத் தொழுகையானது, மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும், பெருமைப்படுத்துவதும், குர்ஆன் ஓதுவதுமாகும்” என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள். “அல்லாஹ்வின் தூதரே! நான் அறியாமைக் காலத்திற்கு நெருக்கமானவன். அல்லாஹ் இந்த இஸ்லாத்தை வழங்கினான். எங்களில் சிலர் சோதிடர்களிடம் செல்கிறார்களே?” என்றேன்…..

நூல் : முஸ்லிம் 935

இந்த நபித்தோழர் அறியாமையினால் தொழுகையில் பேசி இருந்தும் அவரது தொழுகையைத் திருப்பித் தொழுமாறு கூறவில்லை. எனவே புதிதாகத் தொழுபவர்கள் சூரத்துல் பாத்திஹாவை தொழுகையில் ஓத இயலாது என்பதால் தொழுவதற்கு அவர்கள் அஞ்சவேண்டிய அவசியமில்லை. அவர்களின் தொழுகையை இறைவன் ஏற்றுக்கொள்வான்.

ஆனால் இதே நிலையில் நீடிக்காமல் சீக்கிரமாக சூரத்துல் ஃபாத்திஹாவை மனனம் செய்து தொழுகையில் ஓத முயற்சிக்க வேண்டும்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed