நூஹ் (அலை)

மிகப்பெரிய நபிமார்களில் நூஹ் (அலை) அவர்களும் ஒருவராவார்.

950 ஆண்டுகள் அவர்கள் மக்கள் மத்தியிலே பிரச்சாரம் செய்தார்கள்.

நூஹை அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். அவர்களுடன் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஐம்பது ஆண்டுகள் குறைவாக வசித்தார். அவர்கள் அநீதி இழைத்த நிலையில் அவர்களைப் பெரு வெள்ளம் பிடித்துக் கொண்டது (அல்குர்ஆன் 29:14)

நூஹ் (அலை) அவர்களை மக்கள் நிராகரித்தனர். விரல்விட்டு எண்ணக் கூடியவர்கள் மட்டுமே அவர்களை ஏற்றனர். ஆனால் அவர்களின் மனைவியும், மகனும் அவர்களை ஏற்காத கூட்டத்தில் தான் இருந்தனர். அல்லாஹ்வுக்காக 950 ஆண்டு காலம் துன்பங்களைச் சகித்துக் கொண்டவர் என்பதால் அவர்கள் அல்லாஹ்வின் அடிமை என்ற நிலையைக் கடந்து விட முடிந்ததா?

அப்படிக் கடந்திருந்தால் குறைந்த பட்சம் அவர்களது மகனையாவது அல்லாஹ் காப்பாற்றியிருக்க வேண்டும். ஆனால் நடந்தது என்ன? இதோ திருக்குர்ஆன் கூறுகிறது.

மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே! என்று நூஹ் கூறினார். ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும் என்று அவன் கூறினான். அல்லாஹ் அருள் புரிந்தவர்களைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலிருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை என்று அவர் கூறினார்.

அவ்விருவருக்கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான். பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து! என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமாயினர் எனவும் கூறப்பட்டது.

நூஹ், தம் இறைவனை அழைத்தார். என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன் என்றார். நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன் என்று அவன் கூறினான். இறைவா! எனக்கு அறிவு இல்லாதது பற்றி உன்னிடம் கேட்பதை விட்டும் உன்னிடமே நான் பாதுகாப்புத் தேடுகிறேன். நீ என்னை மன்னித்து அருள் புரியா விட்டால் நஷ்டமடைந்தவனாக ஆகி விடுவேன் என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 11:42 – 47)

வெள்ளப் பிரளயத்திலிருந்து மகனைக் காப்பாற்ற நூஹ் (அலை) அவர்களால் இயலவில்லை. கப்பலில் ஏறச் சொல்லும் போது கூட நிராகரிப்பவர்களில் ஆகிவிடாதே எனக் கூறித் தான் அவனை அழைத்தார்கள். நபி என்ற காரணத்துக்காக மகனை ஏற்றிக் கொள்ளும் அதிகாரம் தமக்கு இல்லை என்பதை நூஹ் (அலை) உணர்ந்த காரணத்தினாலேயே கொள்கையை ஏற்று கப்பலில் ஏறச் சொல்கிறார்கள் என்பதை இவ்வசனங்களிலிருந்து அறிகிறோம்.

அழிக்கப்பட வேண்டியவர்கள் அழிக்கப்பட்ட பின் தமது மகன் பற்றி நூஹ் நபிக்கு நினைவு வருகிறது. தமது குடும்பத்தை அல்லாஹ் காப்பாற்றுவதாக வாக்களித்ததும் நினைவுக்கு வந்தது. எனவே தான் அவன் என் குடும்பத்தைச் சேர்ந்தவனல்லவா! உன் வாக்குறுதி உண்மையானது தானே என்றெல்லாம் கேட்கிறார்கள்.

இதை அல்லாஹ் எவ்வளவு கடுமையாக எடுத்துக் கொள்கிறான் என்று பாருங்கள்!

அவன் உன் மகனில்லை

இவ்வாறு கேட்பது நல்ல செயல் கிடையாது.

உனக்கு அறிவு இல்லாததைப் பற்றி என்னிடம் இனிமேல் பேசக் கூடாது.

அறிவீனர்களில் ஒருவராக நீர் ஆகிவிடக் கூடாது.

நூஹ் நபிக்குச் சமமாகாதவர்களையெல்லாம் மகான்கள் எனவும் அவர்கள் நினைத்ததையெல்லாம் அல்லாஹ் செய்து கொடுக்கக் கடமைப்பட்டவன் போலவும் நம்புகிற சமுதாயமே! நூஹ் நபிக்கு அல்லாஹ் விடுக்கும் எச்சரிக்கையிலிருந்து பாடம் படியுங்கள்!

நான் எஜமான். நீர் அடிமை. நான் சொல்வதை நீர் கேட்க வேண்டுமே தவிர நீர் விரும்புவதையெல்லாம் நான் செய்ய வேண்டும் என எதிர்பார்க்கக் கூடாது என்று எவ்வளவு அழுத்தம் திருத்தமாக அல்லாஹ் கூறுகிறான் என்று சிந்தித்துப் பாருங்கள்! இவ்வாறு அல்லாஹ் கண்டித்த உடன் நூஹ் நபி கூறியது தான் இங்கே மிகவும் முக்கியமாகக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

என்ன இறைவா! எனக்காக இதைக் கூட நீ செய்யக் கூடாதா? இதற்காக என்னைக் கோபித்துக் கொள்ளலாமா? என் மகனுக்காகக் கூட நான் பரிந்து பேச உரிமையில்லையா? என்று நூஹ் நபி கேட்கவில்லை. இனிமேல் இவ்வாறு செய்ய மாட்டேன். அதற்காக என்னை மன்னித்து அருள் புரியாவிட்டால் எனக்குத் தான் நட்டம் என்று தன் அடிமைத் தனத்தை நூஹ் நபி ஒப்புக் கொள்கிறார்கள். அல்லாஹ் தான் எஜமான். மற்றவர்கள் அவனுக்கு அடிமைகள் என்பதை இந்நிகழ்ச்சியிலிருந்து ஐயமற அறிந்து கொள்ளலாம்.

நூஹ் நபி அவர்களின் மகனுக்கு மட்டும் தான் இந்தக் கதி என்று நினைக்க வேண்டாம். அவரது மனைவியின் கதியும் இது தான். இதோ அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள்!

நூஹுடைய மனைவியையும், லூத்துடைய மனைவியையும் (தன்னை) மறுப்போருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாகக் காட்டுகிறான். அவ்விருவரும் நமது இரு நல்லடியார்களின் மனைவியராக இருந்தனர். அவர்களுக்குத் துரோகம் செய்தனர். எனவே அவ்விருவரையும் அல்லாஹ்விடமிருந்து அவர்கள் சிறிதளவும் காப்பாற்றவில்லை. இருவரும் நரகில் நுழைவோருடன் சேர்ந்து நுழையுங்கள்! என்று கூறப்பட்டது. (அல்குர்ஆன் 66:10)

மனைவியையோ, மகனையோ காப்பாற்றும் அதிகாரம் கூட எந்த நல்லடியாருக்கும் வழங்கப்படவில்லை என்பதற்கு இதுவும் தெளிவான சான்றாகவுள்ளது.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed