ஆதம் (அலை)

அல்லாஹ் தன் திருக்கரத்தால் ஆதம் (அலை) அவர்களைப் படைத்தான்.

எனது இரு கைகளால் நான் படைத்ததற்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா? என்று (இறைவன்) கேட்டான். (அல்குர்ஆன் 38:75)

வானவர்களை அவர்களுக்கு ஸஜ்தாச் செய்யுமாறு கட்டளையிட்டு அவர்களின் மதிப்பை உயர்த்தினான். வானவர்களுக்கு கற்றுக் கொடுக்காததையெல்லாம் ஆதம் (அலை) அவர்களுக்கு கற்றுக் கொடுத்தான்.

அனைத்துப் பெயர்களையும் (இறைவன்) ஆதமுக்குக் கற்றுக் கொடுத்தான். பின்னர் அவற்றை வானவர்களுக்கு எடுத்துக் காட்டி நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் இவற்றின் பெயர்களை என்னிடம் கூறுங்கள்! என்று கேட்டான். நீ தூயவன். நீ எங்களுக்குக் கற்றுத் தந்ததைத் தவிர எங்களுக்கு வேறு அறிவு இல்லை. நீயே அறிந்தவன்; ஞானமிக்கவன் என்று அவர்கள் கூறினர். ஆதமே! இவற்றின் பெயர்களை அவர்களுக்குக் கூறுவீராக! என்று (இறைவன்) கூறினான்.

அவர்களுக்கு அவற்றின் பெயர்களை அவர் கூறிய போது, வானங்களிலும், பூமியிலும் உள்ள மறைவானவற்றை நான் அறிவேன் என்றும், நீங்கள் வெளிப்படுத்துவதையும், மறைத்துக் கொண்டிருந்ததையும் அறிவேன் என்றும் உங்களிடம் கூறவில்லையா? என (இறைவன்) கேட்டான். ஆதமுக்குப் பணியுங்கள்! என்று நாம் வானவர்களுக்குக் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். அவனோ மறுத்துப் பெருமையடித்தான். (நம்மை) மறுப்பவனாக ஆகி விட்டான். (அல்குர்ஆன் 2:31 – 34)

இவ்வளவு சிறப்புக்கள் வழங்கப்பட்டிருந்த ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் ஒரு கட்டளையைத் தான் மீறினார்கள். போனால் போகிறது என்று அல்லாஹ் விடவில்லை. அவர்களைத் தூக்கி எறிந்து விட்டான்.

அவ்விருவரையும் அங்கிருந்து ஷைத்தான் அப்புறப்படுத்தினான். அவர்கள் இருந்த (உயர்ந்த) நிலையிலிருந்து அவர்களை வெளியேற்றினான். இறங்குங்கள்! உங்களில் சிலர் மற்றும் சிலருக்கு எதிரிகள்! உங்களுக்குப் பூமியில் குறிப்பிட்ட காலம் வரை வாழ்விடமும், வசதியும் உள்ளன என்றும் கூறினோம் (அல்குர்ஆன் 2:36) (பார்க்க 2:38, 7:24, 20:123)

ஆதம் (அலை) அவர்கள் தமது தவறுக்காக வருந்தி பாவ மன்னிப்புக் கேட்ட பிறகு தான் அவர்களை மன்னித்தான்.

(பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:37)

எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம் என்று அவ்விருவரும் கூறினர். (அல்குர்ஆன் 7:23)

அல்லாஹ் நேரடியாகப் படைத்த முதல் மனிதரும் முதல் இறைத் தூதருமான ஆதம் (அலை) அவர்கள் அல்லாஹ்வால் அடிமையாகத் தான் நடத்தப்பட்டார்கள். அவர்களும் அடிமையாகத் தான் நடந்து கொண்டார்கள். இதற்குக் காரணம் அல்லாஹ், ரப்புல் ஆலமீனாக – அகிலத்துக்கும் எஜமானனாக இருப்பது தான்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *