அல்லாஹ்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆரம்பமாக எந்த மக்களைச் சந்தித்தார்களோ அந்த மக்கள் அல்லாஹ் எனும் ஏக இறைவனை அறிந்திருந்தார்கள். அகில உலகையும் படைத்து அனைத்து ஆற்றலையும் தன்னகத்தே கொண்டு அகில உலகையும் நிர்வகிக்கும் கடவுள் ஒருவன் இருக்கிறான். அவன் பெயர் அல்லாஹ் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி போதிக்கும் முன்பாகவே அம்மக்கள் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தாம் அல்லாஹ் எனும் ஏக இறைவனை அம்மக்களுக்கு அறிமுகம் செய்தார்கள் என்று கூறுவது முற்றிலும் தவறாகும். ஏராளமான சான்றுகளின் மூலம் இதனை நாம் அறிந்து கொள்ள முடியும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தையின் பெயர் அப்துல்லாஹ் என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. அப்துல்லாஹ் என்பதன் பொருள் அல்லாஹ்வின் அடிமை என்பதாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் தந்தைக்கு அல்லாஹ்வின் அடிமை என்ற பொருளில் நபியவர்களின் பாட்டனார் பெயர் சூட்டியிருப்பதிலிருந்து அம்மக்கள் அல்லாஹ்வைப் பற்றி முன்பே அறிந்திருந்தார்கள் என்பதை அறியலாம். அல்லாஹ் தான் எஜமான். மாந்தர் அனைவரும் அவனது அடிமைகளே என்ற நம்பிக்கை அம்மக்களுக்கு இல்லாதிருந்தால் அல்லாஹ்வின் அடிமை என்ற பொருளில் பெயரிட்டிருக்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏற்காத அம்மக்கள் அல்லாஹ்வை அறிந்திருந்தார்கள் என்பதற்குப் பின்வரும் வசனங்களும் சான்றாக அமைத்துள்ளான்.

வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அப்படியாயின் எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?

(அல்குர்ஆன் 29:61)

29:63, 31:25, 39:38, 43:87, 10:31, 23:84-89 ஆகிய வசனங்களிலும் அன்றைய காஃபிர்கள் (இஸ்லாத்தை ஏற்காதவர்) அல்லாஹ்வை அறிந்து வைத்திருந்தார்கள் என்பதற்கு ஆதாரம் உள்ளது.

அகில உலகைப் படைத்தவன், அனைத்து ஆற்றலும் உள்ளவன், அர்ஷில் வீற்றிருப்பவன், மழையையும் உணவையும் வழங்குபவன் அல்லாஹ் தான் என்று அம்மக்கள் நம்பியிருந்தனர் என்பதற்கு மறுக்க முடியாத சான்றுகள் இவை.

அல்லாஹ்வை சர்வ சக்தியுள்ளவனாக நம்பிய மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை ஏன் எதிர்த்தனர்?அல்லாஹ்வின் முழு இலக்கணத்தை அவர்கள் விளங்காததே காரணமாகும்.

இதன் காரணமாகத் தான் எல்லாப் புகழும் இறைவனுக்கே என்பதுடன் அல்லாஹ் நிறுத்திக் கொள்ளாமல் இறைவனுக்குரிய முழு இலக்கணத்தையும் அம்மக்களுக்கு விளக்குவதற்காக தொடர்ந்து நான்கு பண்புகளைக் கூறுகிறான். அப்பண்புகளை ஒவ்வொன்றாக நாம் காண்போம்.

ரப்புல் ஆலமீன்

அனைவரும் அடிமைகளே

முதலில் ரப்புல் ஆலமீன் என்ற பண்பை எடுத்துக் கொள்வோம். ரப்பு என்ற சொல்லுக்கு எஜமான், பரிபாலனம் செய்பவன் என்று பொருள். ஆலமீன் என்றால் படைக்கப்பட்ட பொருட்கள் அனைத்தையும் குறிக்கும். பகுத்தறிவுள்ள, பகுத்தறிவற்ற, உயிருள்ள, உயிரற்ற, சரீரம் உள்ள, சரீரம் அற்ற எல்லவாற்றையும் உள்ளடக்கிக் கொள்ளும் வார்த்தையே ஆலமீன் என்ற சொல்.

அகில உலகையும் பரிபாலனம் செய்பவன் என்பது ரப்புல் ஆலமீன் என்பதன் பொருள்.

படைப்பினங்களுக்கும், இறைவனுக்குமிடையே உள்ள உறவை வல்ல அல்லாஹ் இங்கே நமக்குக் கற்றுத் தருகிறான். அகில உலகுக்கும் அவன் எஜமானனாக இருப்பதால், அவனால் படைக்கப்பட்ட அனைவரும் அவனது அடிமைகளே. அடிமை – எஜமான் என்ற உறவைத் தவிர வேறு எந்த உறவும் மனிதனுக்கும் இறைவனுக்குமிடையே கிடையாது.

இந்தப் பாடத்தை மறந்த காரணத்தினால் தான் மனித சமூகத்தில் பெரும்பாலோர் கடவுட் கொள்கையில் தவறிழைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் எவ்வளவு தான் இறைவனுக்காக தம் வாழ்வை அர்ப்பணித்தாலும், எவ்வளவு தான் அதிசயங்கள் அவர் வாழ்வில் நிகழ்ந்தாலும் அதிசயமான முறையிலே அவர் பிறந்தாலும் அல்லாஹ்வைப் பொருத்தவரை அவனுக்கு அவர் அடிமை தான்.

வேண்டுமானால் மற்ற அடிமைகளை விட சிறந்த அடிமை என்று கூறலாமே தவிர, அடிமை என்ற நிலையை விட்டும் உயர்ந்து விட்டார் என்று கூற முடியாது. இது தான் இஸ்லாத்தின் கடவுட் கொள்கையில் பிரதான அம்சம். இந்த அம்சத்தைத் தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் என்ற சொற்றொடரில் இரத்தினச் சுருக்கமாகக் குறிப்பிடுகிறான்.

திருக்குர்ஆனின் பல்வேறு இடங்களில் இதை விரிவாக விளக்கமாக எடுத்து வைத்து அடிமைகள், அடிமைகள் தாம், எஜமான் எஜமான் தான் என்பதைத் தெளிவுபடுத்துகிறான். ரப்புல் ஆலமீன் என்பதன் விளக்கவுரையாக அமைந்த அத்தகைய வசனங்கள் சிலவற்றை நாம் பார்ப்போம்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed