அல்லாஹ் நாடினால் தான் சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்பது சரியான வாதமா?

*அல் குர்ஆன் 2:102 வசனத்தில் அல்லாஹ் நாடாமல் இந்த சூனியத்தால் எதுவும் செய்ய முடியாது என்று அல்லாஹ் சொல்கிறான்,

இதன் மூலம், சூனியம் என்பது அல்லாஹ்வின் நாட்டப்படி நடக்கும் என்று நம்ப வேண்டும் என்று சிலர் வாதம் வைக்கிறார்கள்.

இது நுனிப்புல் மேய்வதால் வெளிப்படக்கூடிய சிந்தனை தான்.

அடிப்படையில் அது சூனியத்தை பற்றி பேசவில்லை என்பது முதலில் நாம் புரிய வேண்டிய ஒன்று, அது *கணவன் மனைவியை பிரிக்க பயன்படுத்தப்படும் வித்தையை தான் சொல்கிறது.*

ஒரு வாதத்திற்கு அது சூனியத்தை பற்றி தான் பேசுகிறது என்று வைத்துக்கொண்டால் கூட அப்போதும் *சூனியம் என்பதே கிடையாது என்பதற்கும் அவ்வாறு அல்லாஹ் நாடவே மாட்டான் என்பதற்கும் தான் அது ஆதாரமாக இருக்கிறது.*

*அல்லாஹ்வின் நாட்டமில்லாமல் சூனியத்தால் எந்த பாதிப்பும் ஏற்படாது என்றால் சூனியம் என்கிற ஒன்றே இல்லை* என்பதற்கு தான் அது சான்று !!!

சூனியம் என்பதே பொய், அது ஒரு கற்பனை, அதனால் யாருக்கும் எதுவும் செய்ய முடியாது என்கிற செய்தியை சொல்வதற்கு அல்லாஹ் அருளிய வசனத்தை எப்படி அல்லாஹ்விடமே திருப்பி விடுவதற்கு…

ஒரு உதாரணத்தை பார்ப்போமே. பூனை குறுக்கே சென்றால் சகுனம் சரியில்லை, அன்று உனக்கு ஏதேனும் துர்பாக்கியம் நிகழும் என்று ஒருவர் சொல்கிறார். அவருக்கு பதில் சொல்கிற நாம், அட முட்டாளே இப்படி எல்லாம் நம்பாதே, *உனக்கு அல்லாஹ் நாடியதை தவிர வேறு எதுவும் யாராலும் செய்ய முடியாது என்று நம்பு..* என்று சொன்னால் இதன் பொருள் என்ன?

*பூனை குறுக்கே செல்வதற்கும் உனக்கு துர்பாக்கியங்கள் நிகழ்வதற்கும் எந்த சம்மந்தமுமில்லை என்று பொருளாகுமா??*

அல்லது

*அல்லாஹ் நாடினால் பூனை குறுக்கே செல்வதன் மூலம் உனக்கு துர்பாக்கியம் ஏற்படும் என்று பொருளாகுமா???*

அடிப்படை சிந்தனை கூட இல்லாமல் வாதம் வைப்பவர்கள் தான் இந்த சூனியத்தை தாங்கி பிடிக்கின்றனர்.

மேலும் பின்வரும் வசனத்தை பார்ப்போம்..

அவரது சமுதாயத்தினர் அவரிடம் விவாதித்தனர். ‘அல்லாஹ் எனக்கு நேர் வழி காட்டிய நிலையில் அவனைப் பற்றி என்னிடம் விவாதிக்கிறீர்களா? நீங்கள் இணை கற்பித்தவற்றுக்கு அஞ்ச மாட்டேன். என் இறைவன் எதையேனும் நாடினாலன்றி (எனக்கு ஏதும் நேராது.) என் இறைவன், அறிவால் அனைத்துப் பொருட்களையும் சூழ்ந்திருக்கிறான். உணர மாட்டீர்களா?’

(6:80)

இந்த வசனத்தில், சிலை வணங்கிகள் இப்ராஹீம் நபியிடத்தில் தங்கள் சிலைகளை அவர்கள் உடைத்ததால் ஆத்திரப்பட்டு இந்த சிலை உமக்கு தீங்கு செய்யும் என்று கூறினார்கள்.

அதற்கு மறுப்பு சொன்ன இப்ராஹிம் நபி, இந்த சிலை ஒன்றும் எனக்கு தீங்கு செய்யாது, என் இறைவன் நாடினாலே தவிர எதுவும் எனக்கு தீங்கீழைக்காது என்று சொன்னார்கள்.

இந்த வசனத்தின் படி, சிலைகளுக்கு எந்த சக்தியும் இல்லை, அதனால் இப்ராஹீம் நபிக்கு தீங்கிழைக்க முடியாது என்று இவர்கள் சொல்வார்களா?

அல்லது

*அல்லாஹ் நாடினால் சிலைகள் இப்ராஹிம் நபிக்கு தீங்கு செய்யும், சிலைகளுக்கும் சக்தி உண்டு* என்று பேசுகிற வசனம் இது என்று கூறுவார்களா??

சூனியம் என்பது பொய், அது ஒரு இணை வைப்பு, அதைக்கொண்டு வெற்றியடைவதற்கு அல்லாஹ் ஒரு போதும் நாட மாட்டான் !

ஒரு காலத்திலும் அல்லாஹ் நாடாத ஒன்றை, அல்லாஹ் நாடாததால் நடக்கவில்லை , நாடியிருந்தால் நடந்திருக்கும் என்று சொல்வது அறிவின்மை அல்லாமல் வேறென்னவாக இருக்க முடியும்

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed