1. அல்லாஹ்வையே சார்ந்திருப்போம்

ஈமான் கொள்வதில் மிக உயர்ந்த பகுதியாக விளங்குவது அல்லாஹ்வை நம்புதல். ஆனால் இன்றைய காலகட்டத்தில் ஒரு முஸ்லிம் அல்லாஹ்வின் மீது தன்னுடைய நம்பிக்கையை சரியான முறையில் அமைத்திருக்கிறானா என்று அவனுடைய ஈமான் இறைவனால் சோதிக்கப்பட்டால் அது பலவீனமாகத் தான் இருக்கிறது.

அடிப்படையில் இதற்குரிய காரணம், மனிதன் அல்லாஹ்வுடைய ஆற்றலையும் அன்பையும் சரியாகப் புரிந்து கொள்வதில்லை என்பதே! தமக்கு ஏதேனும் ஒரு சோதனை ஏற்பட்டால் அதன் தாக்கத்தைத் தாங்க முடியாமல் அல்லாஹ்வின் மீதுள்ள நம்பிக்கையை இழந்து விடுகிறான்.

இதுபோன்று பலவீனம் அடையாமல் இறைவனை எப்போதும் சார்ந்திருக்க வேண்டுமே தவிர சோர்ந்திருக்கக் கூடாது என்று பல வசனங்கள் நம்முடைய சிந்தனைக்கு விருந்தாக அமைந்துள்ளன.

எந்தத் துன்பம் ஏற்பட்டாலும் அல்லாஹ்வின் விருப்பத்தைக் கொண்டே தவிர இல்லை. அல்லாஹ்வை நம்பும் உள்ளத்திற்கு அவன் வழிகாட்டுவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

(அல்குர்ஆன் (64:11)

மரணிக்காது, உயிரோடு இருப்பவனையே சார்ந்திருப்பீராக! அவனைப் போற்றிப் புகழ்வீராக! தனது அடியார்களின் பாவங்களை நன்கு அறிந்திட அவன் போதுமானவன்.

(அல்குர்ஆன் (25:58)

நம்பிக்கை கொண்டோர் யாரெனில் அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களின் உள்ளங்கள் நடுங்கும். அவனது வசனங்கள் அவர்களுக்குக் கூறப்பட்டால் அது அவர்களின் நம்பிக்கையை அதிகப்படுத்தும். அவர்கள் தமது இறைவனையே சார்ந்திருப்பார்கள்.

(அல்குர்ஆன் (8:2)

“அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர எங்களுக்கு வேறு எதுவும் ஏற்படாது. அவன் எங்கள் அதிபதி. நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்’’ என்று கூறுவீராக!

அல்குர்ஆன் (9:51)

அல்லாஹ்வையே சாராமல் இருக்க எங்களுக்கு என்ன நேர்ந்தது? அவன் எங்களுக்கு எங்கள் பாதைகளைக் காட்டி விட்டான். நீங்கள் எங்களுக்கு அளிக்கும் துன்பங்களைச் சகித்துக் கொள்வோம். உறுதியான நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

அல்குர்ஆன் (14:12)

அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்.

அல்குர்ஆன் (65:3)

இதுபோன்று இன்னும் ஏராளமான இறை வசனங்கள் நமக்குச் சொல்ல வரக்கூடிய கருத்து, இறைவனை நாம் சார்ந்திருந்தால் உலகத்தில் நமக்கு ஏற்படும் அனைத்துத் துன்பங்களையும் அவன் தூள் தூளாக்கி விடுவான். இதற்குரிய ஆணித்தரமான ஆதாரமாக நபிகளாரின் வாழ்க்கைச் சம்பவம் நமக்கு ஒரு முன்னுதாரணம்.

நபித்துவத்தின் ஆரம்பக்கட்ட நிலையில் ஹிஜ்ரத் செய்து பல நபித்தோழர்கள் சென்றுவிட்டார்கள். அந்நேரத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்களும் ஹிஜ்ரத் செய்யாமல் அல்லாஹ்வின் அனுமதிக்காகக் காத்துக் கொண்டிருந்தார்கள். புறப்படுவதற்குரிய அனுமதி அல்லாஹ் விடமிருந்து வந்து விட்டது. ஒருபுறம் நபியவர்களும் அபூபக்ர் சித்தீக் அவர்களும் பயணத்திற்குத் தயாராகிக் கொண்டிருக்க மற்றொரு புறத்தில் குறைஷியர்கள் வெறி கொண்டு நபிகளாரைத் துரத்தி வந்துகொண்டிருந்தார்கள்.

இதையறிந்த நபியவர்கள் உடனே ஒரு சிறிய குகையில் இருவரும் தஞ்சம் புகுந்தார்கள். ஆபத்தான அந்தத் தருணத்தில் அபூபக்ர் சித்தீக் (ரலி), ‘‘அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் ஒருவர் நம்மைப் பார்த்தால் கூட நாம் மாட்டிக் கொள்வோம்’’ என்று பதறியவாறு சொன்னார்கள். அதற்கு ‘‘தோழரே! பயப்படாதீர். இறைவன் நம்முடன் இருக்கிறான்’’ என்று உரத்துச் சொன்னார்கள். இதை இறைவன் தன் திருமறைக் குர்ஆனில் பதிவு செய்துள்ளான்.

நீங்கள் இவருக்கு (முஹம்மதுக்கு) உதவி செய்யாவிட்டாலும் (ஏகஇறைவனை) மறுப்போர் இவரை இருவரில் ஒருவராக வெளியேற்றிய போதும், அவ்விருவரும் அக்குகையில் இருந்த போதும், “நீர் கவலைப்படாதீர்! அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்’’ என்று அவர் தமது தோழரிடம் கூறியபோதும் அவருக்கு அல்லாஹ் உதவியிருக்கிறான்.

தனது அமைதியை அவர் மீது இறக்கினான். நீங்கள் பார்க்காத படைகளின் மூலம் அவரைப் பலப்படுத்தினான். (தன்னை) மறுப்போரின் கொள்கையைத் தாழ்ந்ததாக அவன் ஆக்கினான். அல்லாஹ்வின் கொள்கையே உயர்ந்தது. அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் (9:40)

இச்சம்பவம் நமக்கு உணர்த்தும் அறிவுரை, இந்த உலகத்தில் வாழும் போது நம்முடைய நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து மிரட்டினாலும், இறைவன் நம்முடன் இருக்கிறான் என்ற நம்பிக்கையை மட்டும் விடக்கூடாது. அதைத் தான் நபிகளார் நமக்குப் பாடமாகக் கற்றுக் கொடுத்தார்கள்.

இத்துடன் நம்மை வலுப்படுத்தும் மற்றொரு சம்பவம் நபி மூஸா அவர்களின் வரலாறு.
ஒரு கட்டத்தில் தம்முடைய கூட்டத்தாரை ஃபிர்அவ்னின் படையினரிடமிருந்து காப்பாற்றிக் கொண்டு வந்திருந்த சமயம். அச்சமயத்தில் நபி மூஸா (அலை) அவர்களின் தோழர்களுடைய அடிவயிறு ஆட்டம் கண்டு கொண்டிருந்தது.

ஏனென்றால் எதிரே பார்த்தால் தப்பித்துச் செல்லாத படி பறந்து விரிந்து காணப்படும் கடல். பின்னால் ஃபிர்அவ்னின் படையினர் துரத்தி வருகின்றார்கள். அப்போது மூஸா நபியின் தோழர்கள் சொன்னார்கள். ‘‘மூசாவே! இத்துடன் நம்முடைய கதை முடிந்துவிட்டது இனிமேல் நம்மை யாராலும் காப்பாற்ற முடியாது’’ என்ற முடிவிற்கு வந்து விட்ட சமயத்தில், மூஸா (அலை) கூறியதை இறைவன் திருக்குர்ஆனில் எடுத்துச் சொல்கிறான். அல்லாஹ் மீதுள்ள நம்பிக்கையை அவர் பிரகடனப்படுத்தினார்.

இரு கூட்டத்தினரும் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டபோது “நாம் பிடிக்கப்பட்டு விடுவோம்’’ என்று மூஸாவின் தோழர்கள் கூறினர். “அவ்வாறில்லை. என்னுடன் என் இறைவன் இருக்கிறான். அவன் எனக்கு வழிகாட்டுவான்’’ என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 26:61,62)

இவ்வாறு மூஸா நபியின் இறை நம்பிக்கை இறுதி நேரத்திலும் எதிரிகளை வென்று காட்டியது. இறைவனை சார்ந்திருப்பதைப் பற்றிய செய்திகள் இத்துடன் முடிந்து விடவில்லை. முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஒரு பெண்ணின் இறை நம்பிக்கை பற்றிய செய்தி நமக்குப் பல படிப்பினைகளை வழங்குகிறது. அதையும் நாம் தெரிந்து கொள்வதற்குக் கடமைப்பட்டுள்ளோம்.

(மழலைப் பருவத்தில் பேசிய மூன்றாமவர்:) ஒரு குழந்தை தன் தாயிடம் பாலருந்திக் கொண்டிருந்தது. அப்போது வனப்பு மிக்க ஒரு மனிதன் மிடுக்கான வாகனமொன்றில் பயணம் செய்து கொண்டிருந்தான். உடனே அக்குழந்தையின் தாய், “இறைவா! இதோ இவனைப் போன்று என் மகனையும் ஆக்குவாயாக!’’ என்று பிரார்த்தித்தாள். அக்குழந்தை மார்பை விட்டுவிட்டு அப்பயணியைத் திரும்பிப் பார்த்து, “இறைவா! இவனைப் போல் என்னை ஆக்கிவிடாதே’’ என்று பேசியது.

பிறகு மறுபடியும் மார்புக்குச் சென்று பால் அருந்தலாயிற்று. பிறகு தாயும் மகவும் ஓர் அடிமைப் பெண்ணைக் கடந்துசென்றனர். மக்கள் அவளை, “நீ விபச்சாரம் செய்தாய்; திருடினாய்’’ என்று கூறி அடித்துக்கொண்டிருந்தனர். ஆனால் அவளோ, “அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன்; பொறுப்பாளர்களில் அவனே நல்லவன்’’ என்று கூறிக்கொண்டிருந்தாள்.

அப்போது அக்குழந்தையின் தாய், “இறைவா! என் மகனை இவளைப் போன்று ஆக்கி விடாதே’’ என்று கூறினாள். உடனே அக் குழந்தை பால் அருந்துவதை நிறுத்திவிட்டு அந்த அடிமைப் பெண்ணை நோக்கி(த் திரும்பி), “இறைவா! என்னை இவளைப் போன்று ஆக்குவாயாக!’’ என்று கூறியது.

அறிவிப்பவர்: அபு ஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (4986)

இந்த ஹதீஸ் நமக்குத் தரக்கூடிய மிக முக்கிய படிப்பினை, ஓர் ஆண் மீது அபாண்டமாக ஒழுக்கத்தைப் பற்றி ஏதேனும் குற்றம் சுமத்தப்பட்டால் சில காலங்கள் கழிந்த பிறகு அவனால் இயல்பான நிலைக்குத் திரும்ப முடியும். குற்றம் சுமத்தப்படும் போதும் கூட, பெருமளவு இழிவை அவன் சந்திக்கப் போவதில்லை.

ஆனால் இதே குற்றச்சாட்டு ஒரு பெண் மீது சுமத்தப்பட்டால் அவளுடைய வாழ்க்கை முழுதும் இருண்ட உலகமாக மாறிவிடும். ஒவ்வொரு நாளும் நெருப்பில் இருப்பதை போல சமூகத்தால் பழிக்கப்படுவாள். அது போன்ற ஒரு நிலை தான் மேலுள்ள ஹதீஸில், மக்களால் அடிக்கப்பட்டுக் கொண்டிருந்த அந்தப் பெண்ணுக்கும் ஏற்பட்டது.

அந்தத் தருணத்திலும் கூட அனைத்துத் துன்பங்களையும் சகித்துக் கொண்டு “அல்லாஹ் எனக்குப் போதுமானவன், பொறுப்பாளர்களில் அவனே நல்லவன்’’ என்று அந்தப் பெண்மணி சொன்னது போல நம்முடைய உள்ளத்திலும் உறுதிப்பாட்டை வளர்க்கவேண்டும்.

எனவே தான் நம்முடைய மார்க்கம் நமக்கு சொல்லித் தருகின்ற பாடம், அல்லாஹ்வை எவ்வாறு நம்ப வேண்டும் தெரியுமா? மனிதனால் செய்ய முடிவதையும் அல்லாஹ் செய்வான்; மனிதனால் செய்ய முடியாததையும் அல்லாஹ் செய்து முடிப்பான் என்ற உறுதிப்பாட்டை நம்முடைய உள்ளத்தில் பசுமரத்தாணியைப் போல் பதிவு செய்திட வேண்டும். அல்லாஹ் நமக்கு உதவி செய்ய நாடினால் நம்மை வெல்ல எவராலும் முடியாது என்பதைத் தன் வசனத்தின் மூலமாகத் தெளிவுபடுத்துகிறான்.

அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்தால் உங்களை வெல்பவர் எவருமில்லை. அவன் உங்களுக்கு உதவ மறுத்தால் அவனுக்குப் பின் உங்களுக்கு உதவி செய்பவன் யார்? நம்பிக்கை கொண்டோர் அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும்.

(அல்குர்ஆன் 3:160)

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *