அல்லாஹ்வுக்கு விருப்பமானது  பாவமன்னிப்பு

மனிதர்களைப் பலவீனமானவர்களாகவே இறைவன் படைத்திருக்கின்றான். மனிதன் இந்த உலகத்தில் வாழும் போது நன்மையான காரியங்களில் ஈடுபடுவதை விட பாவமான காரியங்களிலேயே அதிகம் ஈடுபடுவதைப் பார்க்கின்றோம். இதில் யாரும் விதிவிலக்கு இல்லை என்று சொல்கின்ற அளவுக்கு மனிதன் தன்னுடைய வாழ்க்கையில் பாவச் செயல்களில் ஈடுபடுகின்றான்.

இதற்கு மிக முக்கியக் காரணம், இறைவன் மனிதர்களைப் பாவம் செய்பவர்களாகவே படைத்திருக்கின்றான். ஆனால் பாவம் செய்கின்ற மனிதன் தன்னுடைய பாவச் செயல்களிலேயே மூழ்கி விடாமல் அந்தப் பாவத்திலிருந்து திருந்துவதற்கான வழிவகையையும் அல்லாஹ் அமைத்துக் கொடுத்திருக்கின்றான்.

எந்த அளவிற்கென்றால் மனிதர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்றும், தவறு செய்பவர்கள் தான் மனிதர்கள் என்றும், செய்த தவறுக்காகத் திருந்தி, வருந்தி, கண்ணீர் விட்டுக் கதறி அழுது இறைவனிடம் சரணடைபவர்களே சிறந்தவர்கள் என்றும் அல்லாஹ் அற்புதமான முறையில் மனித சமுதாயத்திற்குப் பாடம் நடத்துகின்றான்.

 

பாவம் செய்பவர்களையும், செய்த  பாவத்திற்குத் தாமதிக்காமல் மன்னிப்புத் தேடுபவர்களையும் அல்லாஹ் விரும்புகின்றான். கூடுதலாகச் சொல்வதென்றால், பாவம் செய்து பின்னர் மன்னிப்புக் கேட்பது அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான செயல் என்று சொல்கின்ற அளவிற்கு இறைவனின் வார்த்தைப் பிரயோகம் அமைந்திருக்கின்றது.

நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்து விட்டால், நிச்சயமாகப் பாவம் செய்கின்ற ஒரு படைப்பை அல்லாஹ் உருவாக்கி அவர்களுடைய பாவங்களை அவன் மன்னிக்கவே செய்வான்’’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 5302

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நீங்கள் பாவம் செய்யாதவர்களாக இருந்தால், அல்லாஹ் உங்களை அகற்றி விட்டு, பாவம் செய்கின்ற மற்றொரு சமுதாயத்தைக் கொண்டுவருவான். அவர்கள் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோருவார்கள். அல்லாஹ்வும் அவர்களை மன்னிப்பான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 5304

அடியார்களின் பாவங்களை மன்னிக்கும் பண்பு அல்லாஹ்வுக்கு உண்டு. அந்தக் குணத்தை வெளிப்படுத்துவதற்கான சூழலை உருவாக்கவே அல்லாஹ், பாவம் செய்யும் மக்களைப் படைப்பான். நன்மை செய்வோருக்கு நற்பலன் வழங்குவதை அல்லாஹ் விரும்புவதைப் போன்று, தீமை செய்வோருக்கு மன்னிப்பு வழங்குவதையும் அவன் விரும்புகிறான். அல்லாஹ்வின் இந்த தாராள குணத்தை விளங்கி, பாவத்திலிருந்து மீண்டு பாவமன்னிப்புக் கேட்பவர்களை அல்லாஹ் அதிகமதிகம் நேசிக்கின்றான்.

திரும்பத்திரும்ப பாவம் செய்தாலும் மன்னிப்பு

திரும்பத் திரும்ப பாவம் செய்து விட்டு, திரும்பத் திரும்ப பாவமன்னிப்புக் கோரினாலும் அதை அல்லாஹ் ஏற்பான். நூறு முறை என்ன, ஆயிரம் முறை இவ்வாறு செய்தாலும் சரியே! ஒவ்வொரு முறை பாவம் செய்யும் போதும் பாவமன்னிப்புக் கோரி மீட்சி பெற்றாலும், அல்லது மொத்தமாகப் பாவங்களைச் செய்து விட்டு எல்லாவற்றுக்கும் சேர்த்து ஒரு முறை பாவமன்னிப்புக் கோரினாலும் அது இறைவன் நாடினால் ஏற்கப்படும். இது அல்லாஹ்வின் ஒப்பற்ற கருணையையும், அடியார்கள் மீது அவனுக்குள்ள பரிவையையும் காட்டுகிறது.

நபி (ஸல்) அவர்கள் வல்லமையும் மாண்பும் மிக்க தம் இறைவன் குறித்து அறிவித்தார்கள்:

ஓர் அடியார் ஒரு பாவம் செய்துவிட்டார். பிறகு “இறைவா!  என் பாவத்தை மன்னிப்பாயாக!’’ என்று கூறினார். உடனே இறைவன், “என் அடியான் ஒரு பாவம் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்து கொண்டான்’’ என்று சொல்கிறான். பிறகு அந்த அடியார் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, “என் இறைவா! என் பாவத்தை மன்னிப்பாயாக!’’ என்று பிரார்த்தித்தார்.

அப்போதும் இறைவன், “என் அடியான் ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு, தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்று அறிந்துகொண்டான்’’ என்று சொல்கிறான்.

பிறகு அந்த அடியான் மீண்டும் ஒரு பாவத்தைச் செய்துவிட்டு, “என் இறைவா! எனது பாவத்தை மன்னிப்பாயாக!’’ என்று பிரார்த்தித்தார். அப்போதும் இறைவன், “என் அடியான் ஒரு பாவத்தைச் செய்துவிட்டுப் பிறகு தனக்கோர் இறைவன் இருக்கின்றான் என்றும், அவன் பாவங்களை மன்னிக்கவும் செய்வான்; பாவங்களுக்காகத் தண்டிக்கவும் செய்வான் என்றும் அறிந்து கொண்டான். நீ நாடியதைச் செய்; நான் உனது பாவத்தை மன்னித்து விட்டேன்’’ என்று சொல்கிறான்.

நூல்: முஸ்லிம் 5322

திரும்பத் திரும்ப எத்தனை முறை பாவம் செய்தாலும் இறைவனிடத்திலே கண்ணீர் விட்டுக் கதறி அழுது பாவமன்னிப்புக் கேட்டால் அல்லாஹ் அந்த அடியானைப் பார்த்து சந்தோஷம் அடைந்து, அவனுடைய பாவத்தை மன்னிக்கின்றான்.

மனிதர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்களா?

இந்த உலகத்தில் இறைவனால் படைக்கப்பட்ட எல்லா மனிதர்களும் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை. ஏனென்றால் ஒவ்வொரு அடியாரிடத்திலும் இறைவன் ஒரு ஷைத்தானை உடன் வைத்திருக்கின்றான். அந்த ஷைத்தான் கெட்டதையே எண்ணுமாறும், கெட்டதையே செய்யுமாறும் மனிதனைத் தூண்டிக் கொண்டிருக்கின்றான். அதுதான் அவனது மனோஇச்சை. ஒரு குற்றத்தைச் செய்ய முனையும் போது உள் மனம் மனிதனைத் தடுக்கும். ஆனால், மன விருப்பமும், பேராசையும் மேலோங்கி விட்டால் மனிதன் அதற்கு அடிமையாகி தவறிழைத்து விடுகின்றான்.

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் என்னிடமிருந்து புறப்பட்டுச் சென்றார்கள். அவர்கள் மீது எனக்கு ரோஷம் ஏற்பட்டது. பிறகு அவர்கள் (திரும்பி) வந்து என் நடவடிக்கையைக் கண்டபோது, “ஆயிஷா! உனக்கு என்ன நேர்ந்தது? ரோஷம் கொண்டுவிட்டாயா?’’ என்று கேட்டார்கள். அதற்கு நான், “என்னைப் போன்ற ஒருத்தி (வேறு துணைவியர் உள்ள) தங்களைப் போன்ற ஒருவர் மீது ரோஷம் கொள்ளாமல் எப்படி இருக்க முடியும்?’’என்று சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “உன் ஷைத்தான் உன்னிடம் வந்து விட்டானா?’’ என்று கேட்டார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! என்னுடனும் ஷைத்தான் உள்ளானா?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘ஆம்’ என்றார்கள். “ஒவ்வொரு மனிதனுடனும் (ஷைத்தான்) உள்ளானா?’’ என்று கேட்டேன். அதற்கும் அவர்கள் ‘ஆம்’ என்றார்கள். நான், “தங்களுடனுமா, அல்லாஹ்வின் தூதரே?’’ என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம். ஆயினும், என் இறைவன் அவனுக்கெதிராக எனக்கு உதவி செய்துவிட்டான். அவன் (எனக்குப்) பணிந்துவிட்டான்’’ என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 7288

இறைவனின் அளப்பரிய கிருபையினால் நபி (ஸல்) அவர்களுக்கு இறைவன் செய்த மாபெரும் அருட்கொடை ஷைத்தானை நபி (ஸல்) அவர்களுக்குப் பணியச் செய்து விட்டான். அவனுக்கு எதிராக நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்து விட்டான். மற்ற எல்லா மனிதர்களிடத்திலும் ஷைத்தான் உடன் இருந்து வழிகெடுத்துக் கொண்டே இருப்பான் என்று கூறி மனிதர்கள் தவறுகளுக்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை என்பதை நிரூபிக்கின்றார்கள்.

About Author

By Sadhiq

அல்லாஹ் ஒருவன்” என கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை. [அல்குர்ஆன் 112:1]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *